இன்ஸ்பெக்டர் முனிசேகருக்கு `போஸ்டிங்'  | Inspector munisekhar transferred to seerkazhi

வெளியிடப்பட்ட நேரம்: 13:15 (28/03/2018)

கடைசி தொடர்பு:13:15 (28/03/2018)

இன்ஸ்பெக்டர் முனிசேகருக்கு `போஸ்டிங்' 

போலீஸ் இன்ஸ்பெக்டர்

 கொள்ளையர்களைப் பிடிக்கச் சென்ற இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியன், துப்பாக்கியால் சுடப்பட்ட விவகாரத்தில் சிக்கிய இன்ஸ்பெக்டர் முனிசேகர், சீர்காழியை அடுத்த ஆணைக்காரன்சத்திரம் போலீஸ் நிலையத்துக்கு இடமாற்றப்பட்டுள்ளார். 

 சென்னையை அடுத்த கொளத்தூரில் நடந்த நகைக்கடை கொள்ளைச் சம்பவத்தில், கொள்ளையர்களைப் பிடிக்க இன்ஸ்பெக்டர்கள் பெரியபாண்டியன், முனிசேகர் தலைமையில் தனிப்படை போலீஸார் ராஜஸ்தானுக்குச் சென்றனர். கொள்ளையர்களைப் பிடிக்கும்போது நடந்த மோதலில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்து பெரியபாண்டியன் மரணம் அடைந்தார். முனிசேகரின் துப்பாக்கியிலிருந்து பாய்ந்த குண்டு, பெரியபாண்டியனின் உடலைத் துளைத்ததாக ராஜஸ்தான் போலீஸார் தெரிவித்தனர். 

 இதையடுத்து நீண்ட விடுப்பிலிருந்த இன்ஸ்பெக்டர் முனிசேகர், கொளத்தூர் போலீஸ் நிலையத்தில் சில நாள்கள் பணியாற்றினார். அதன்பிறகு, அவர் தென்மாவட்டத்துக்கு இடமாற்றப்படுவதாகத் தமிழக காவல்துறை அறிவித்தது. ஆனால், பணியிடம் குறித்த தகவல் குறிப்பிடப்படவில்லை. இந்தநிலையில், இன்ஸ்பெக்டர் முனிசேகரை நாகை மாவட்டம், சீர்காழி பகுதியில் உள்ள ஆணைக்காரன்சத்திரம் காவல் நிலையத்துக்கு மாற்றம்செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

இதற்கிடையில், பெரியபாண்டியன் மரணத்துக்குப் பிறகு நகைக்கடை கொள்ளையன் நாதுராம் போலீஸாரிடம் சிக்கினான். தற்போது, அவர் குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் அடைக்கப்பட்டுள்ளார். சென்னை மாநகரக் காவல் துறையிலிருந்து நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள கரைகோடிக்கு இன்ஸ்பெக்டர் முனிசேகர் இடமாற்றப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.