'அந்த டாக்டர்தான் காரணம்'- உயிரை மாய்த்துக்கொண்ட நர்ஸின் உறவினர்கள் கொந்தளிப்பு | Nurse killed herself after being scolded by doctor

வெளியிடப்பட்ட நேரம்: 12:40 (28/03/2018)

கடைசி தொடர்பு:14:32 (28/03/2018)

'அந்த டாக்டர்தான் காரணம்'- உயிரை மாய்த்துக்கொண்ட நர்ஸின் உறவினர்கள் கொந்தளிப்பு

தனியார் மருத்துவமனை ஒன்றில் இரவுப் பணியின்போது, சக ஆண் பணியாளருடன் பேசிக்கொண்டிருந்ததை டாக்டர் கண்டித்ததால் வேதனையடைந்த இளம்வயது நர்ஸ் ஒருவர் மருத்துவமனையிலேயே தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

நர்ஸ் தாயம்மாள்

புதுக்கோட்டை மாவட்டம், மணல்மேல்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த 5 ஆண்டுகளாக நர்ஸாக வேலைபார்த்து வருபவர் தாயம்மாள் (24). முத்துகுடா என்ற மீனவர் குடியிருப்புப் பகுதியைச் சேர்ந்த இவரின் தந்தை மீன்பிடி தொழில் பார்த்து வருபவர். தாயம்மாள் வழக்கம்போல், மருத்துவமனையில் நேற்று இரவு பணி பார்த்துவிட்டு, சற்று ஓய்விலிருந்த சமயத்தில் அதே மருத்துவமனையில் வேலைபார்க்கும் சக ஆண் பணியாளருடன் பேசிக்கொண்டு இருந்திருக்கிறார். அந்தச் சமயத்தில் ரவுண்ட்ஸ் வந்த மருத்துவர் முத்து என்பவர் தாயம்மாளிடம், "இந்த நேரத்துல வேலையைப் பார்க்காமல் ஆம்பளைப் பயல்கூட உனக்கென்ன பேச்சு' என்று கூறிவிட்டு, தொடர்ந்து சகிக்க முடியாத வார்த்தைகளால் தாயம்மாளைத் திட்டியிருக்கிறார்.

இதில் மனமுடைந்த தாயம்மாள், செவிலியர் அறைக்குச் சென்று இரவு முழுவதும் அழுது இருக்கிறார். அதிகாலை 5 மணி அளவில் தனது துப்பட்டாவை எடுத்து அந்த அறையிலிருந்த மின்விசிறியில் தூக்குப்போட்டு இறந்திருக்கிறார். அறையில் அவர் தூக்கில் தொங்குவதைப் பார்த்த சக ஊழியர்கள் பதறி இருக்கிறார்கள். தாயம்மாளைத் திட்டிய டாக்டர் முத்து அதிர்ச்சியடைந்து தனது அறைக்குள் இருந்திருக்கிறார். இது குறித்த தகவல் மணல்மேல்குடி போலீஸாருக்கு சொல்லப்பட்டு, அவர்கள் அந்த மருத்துவமனைக்கு விரைந்து வந்திருக்கிறார்கள். இதற்குள் மீனவப் பகுதியில் தாயம்மாள் தற்கொலை செய்துகொண்ட விஷயம் காட்டுத்தீயென பரவி, உறவினர்களும் முத்துகுடா மீனவமக்களும் மணல்மேல்குடியில் உள்ள மருத்துவமனைக்கு முன்பாகத் திரண்டுவிட்டார்கள்.

நர்ஸ் தாயம்மாள் உறவினர்கள் போராட்டம்

`தாயம்மாள் சாவில் மர்மம் இருக்கிறது. சம்பந்தப்பட்ட டாக்டரை கைது செய்ய வேண்டும்’ என்று வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட ஆரம்பித்தார்கள். அவர்களை சமாதானம் செய்த போலீஸார், தாயம்மாளை ஆபாசமாகத் திட்டியதாகச் சொல்லப்பட்ட டாக்டரை தங்களுடன் அழைத்துச்சென்று, மணல்மேல்குடி மருத்துவமனையில் வைத்து விசாரணை செய்துவருகிறார்கள். ஆனால், தாயம்மாளின் உறவினர்களோ, "எங்க புள்ள அவ்வளவு அழகா இருப்பா. ஒழுக்கமானவ. பசங்ககூட  பேசவே மாட்டாள். அந்த டாக்டர்தான் எங்க புள்ளைய ஏதோ பண்ணிட்டு அதை மறைக்கறதுக்காக அவளைக் கொலை பண்ணி தூக்குல மாட்டிகிட்டதா பொய் சொல்றான். டாக்டரை போலீஸார் கைது பண்ணணும்'' என்று கொந்தளித்தார்கள்.

இதனிடையே, தாயம்மாள் உடலைப் பிரேத பரிசோதனைக்காக மணல்மேல்குடி மருத்துவமனைக்குப் போலீஸார் அனுப்பி வைத்துள்ளனர். அவரின் உறவினர்களும் மீனவர்களும் காவல்நிலையத்தில் திரண்டு நிற்கிறார்கள். இதனால் அந்தப் பகுதியில் காலையிலிருந்தே பரபரப்பாக இருக்கிறது.