கிரகலட்சுமி வீட்டில் கைவரிசைகாட்டிய கொள்ளையர்கள் -  170 சவரன் நகை அபேஸ்   | Robbery at grihalakshmi's house

வெளியிடப்பட்ட நேரம்: 13:32 (28/03/2018)

கடைசி தொடர்பு:13:32 (28/03/2018)

 கிரகலட்சுமி வீட்டில் கைவரிசைகாட்டிய கொள்ளையர்கள் -  170 சவரன் நகை அபேஸ்  

கிரகலட்சுமி

 கிரகலட்சுமி மற்றும் அவரது தங்கை ஆகியோரின் அறைகளிலிருந்து 170 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

 சென்னை தி.நகர் தெற்கு போக் ரோட்டில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில், நாகராஜ் என்பவர் குடியிருக்கிறார். இவர், நேற்றிரவு வீட்டை பூட்டிவிட்டு தூங்கச் சென்றுவிட்டார்.  இதே அடுக்குமாடி குடியிருப்பின் மேல்தளத்தில், நடிகர் பிரசாந்த்தின் முன்னாள் மனைவி கிரகலட்சுமியின் வீடும் உள்ளது. அவர், அடையாறில் தங்கியுள்ளார். வாரத்தில் இரண்டு முறை இந்த வீட்டுக்கு வருவார். இந்த நிலையில், கிரகலட்சுமியின் வீட்டின் பின்பக்க ஜன்னலில் உள்ள கிரில் கம்பிகள் உடைக்கப்பட்டிருப்பதைப் பார்த்த நாகராஜ் அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து கிரகலட்சுமிக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, மாம்பலம் போலீஸிலும் புகார் கொடுக்கப்பட்டது. போலீஸார், சம்பவ இடத்துக்கு மோப்ப நாயுடன் விரைந்துசென்றனர். அப்போது, கிரகலட்சுமியின் அறையில் உள்ள பீரோவிலிருந்த 20 சவரன் நகை, 10 ஆயிரம் பணம் கொள்ளைபோனது தெரியவந்தது.  கிரகலட்சுமியின் தங்கையின் அறை, கீழ்தளத்தில் உள்ளது. அங்கிருந்தும் சுமார் 150 சவரன் நகை கொள்ளைபோனதாகத் தெரியவந்துள்ளது. இதுகுறித்த புகாரின்பேரில், மாம்பலம் போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர். 

கடந்த சில தினங்களுக்கு முன், விருகம்பாக்கத்தில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் லாக்கர் உடைக்கப்பட்டு, பணம் கொள்ளையடிக்கப்பட்டது.  கிரகலட்சுமி மற்றும் அவரது தங்கையின் அறை ஆகியவற்றிலிருந்து 170 சவரன், 10 ஆயிரம் பணம் கொள்ளைபோனது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 இதுகுறித்து போலீஸார் கூறுகையில், "கிரகலட்சுமியின் அறை, அவரது தங்கையின் அறை ஆகியவற்றிலிருந்து 170 சவரன் நகைகள், 10 ஆயிரம் பணம் கொள்ளைபோனதாக எங்களுக்கு புகார் வந்துள்ளது. சம்பவ இடத்துக்கு தீபா என்ற மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சோதனை நடந்துவருகிறது. மேலும், கொள்ளை நடந்த அறைகளிலிருந்து கைரேகைகள் பதிவு எடுக்கப்பட்டுள்ளது. பின்பக்கம் வழியாக கொள்ளையர்கள் உள்ளே நுழைந்துள்ளனர். முதலில் கீழ்தளத்தில் கொள்ளையடித்தவர்கள், பிறகு மேல்தளத்திலும் கொள்ளையடித்துள்ளனர்" என்றனர்.