'இந்தத் திட்டங்களின் பின்னே அதானி கம்பெனி'- பொங்கிய விவசாயிகள் | Farmers blames Adani company in Sterlite issue

வெளியிடப்பட்ட நேரம்: 15:25 (28/03/2018)

கடைசி தொடர்பு:18:24 (02/07/2018)

'இந்தத் திட்டங்களின் பின்னே அதானி கம்பெனி'- பொங்கிய விவசாயிகள்

விவசாய நிலம்

 "தூத்துக்குடி மக்களுக்கு ஸ்டெர்லைட் ஆலை எமனாக மாறி இருக்குன்னா, திருநெல்வேலி தொடங்கி, கரூர், திரூப்பூர், கோவை உள்ளிட்ட மேற்கு மாவட்டங்களுக்கும், வேலூர் உள்ளிட்ட வடக்கு மாவட்டங்களுக்கும் எமனாக மாறப்போகுது, உயர்மின் அழுத்த கோபுரம் வழியாக மின்சாரம் கொண்டுபோகும் திட்டம். இதற்காக விவசாயிகளைத் திரட்டி, உயர் அழுத்த மின் கோபுர எதிர்ப்பு பரப்புரைக் கூட்டத்தை நடத்திவருகிறோம்" என்று எள்ளும் கொள்ளுமாக வெடிக்கிறார்கள், மேற்கு மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள்.

ஏற்கெனவே, கூடங்குளத்தில் உற்பத்தியாகும் மின்சாரத்தை இப்படி உயர் அழுத்த மின்கோபுரங்கள் அமைத்து, தமிழகம் முழுக்க கொண்டு போகிறார்கள். இந்நிலையில், மத்திய அரசின் பவர்கிரிட் கார்ப்பரேஷன் திருநெல்வேலி, ராமநாதபுரம், தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் உற்பத்தி செய்யப்படும் காற்றாலை மற்றும் சோலார் வழியிலான மின்சாரத்தை, உயர் அழுத்த மின்கோபுரங்கள் அமைத்து கர்நாடகம், ஆந்திரா, கேரளா, சத்தீஸ்கர் மற்றும் சில வெளிநாடுகளுக்கும் கொண்டுபோவதாக சொல்லப்படுகிறது.

விவசாயிகள்

இதற்காக, 30 உயர் அழுத்த மின்பாதைகளுக்கு தமிழக மின்சார வாரியமும் அனுமதி அளித்திருக்கிறது. அவற்றில், முதல்கட்டமாக 9 மின்பாதைகளை அமைக்க விவசாயிகளிடம் கருத்துக் கேட்புக் கூட்டங்கள் நடத்தாமல், அவர்களின் நிலங்களில் மின்கோபுரங்கள் அமைக்க குழிகள் தோண்ட, விவசாயிகள் அதற்கு எதிராக வெகுண்டெழுந்திருக்கிறார்கள். அதற்கு எதிராக, ஆங்காங்கே பரப்புரை கூட்டங்களும் நடத்தத் தொடங்கியிருக்கிறார்கள்.

கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் அத்தகைய கூட்டத்தை முன்னின்று நடத்திய தமிழக விவசாயிகள், பாதுகாப்புச் சங்க கரூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜ்குமார், ராஜ்குமார்"இந்தத் திட்டங்களின் பின்னே அதானி உள்ளிட்ட கார்ப்பரேட் கம்பெனிகளின் கைங்கர்யங்களும் இருக்கின்றன. இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டால், அந்த மின்பாதைகள் போகும் வழிகளில் விவசாயம் செய்ய முடியாது. மரங்கள் வளர்க்க முடியாது. மனிதர்கள் குடியிருந்தால், அவர்களுக்கு பிரைன் டியூமர் வரும். கால்நடைகள் கருத்தரிக்காது. நிலங்களை விவசாயிகள் விற்க முடியாது. இப்படி ஏகப்பட்ட பிரச்னைகளைச் சந்திக்க நேரிடும். இதற்காக, திருப்பூர் மாவட்டம் புகளூரில் 130 ஏக்கரில் ஆசியாவிலேயே இரண்டாவது பெரிய மின்நிலையத்தை அமைக்கிறார்கள். வெளிநாடுகள் மற்றும் இந்தியாவில் சென்னை, மும்பை உள்ளிட்ட பெருநகரங்களில் கொண்டுபோவதுபோல பூமிக்கடியில் கேபிள் பதித்து, அதன்மூலம் கொண்டு போகணும். இல்லைனா, எங்கள் போராட்டம் ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டத்தைத் தாண்டும்" என்றார் ஆக்ரோஷமாக!. 
 


[X] Close

[X] Close