`சாப்பாட்டுக்குக்கூட கையில காசு இல்லை'- கலங்கும் ஆராயி மகன்கள்

அரசு அறிவித்த நிதியுதவி இன்னும் கைக்குக் கிடைக்காததால், சாப்பாடு வாங்கக்கூட வழியில்லாமல் சிரமப்பட்டு வருகின்றனர், வெள்ளம்புத்தூர் ஆராயி  குடும்பத்தினர்.

ஆராயி

விழுப்புரம் மாவட்டம், வெள்ளம்புத்தூர் காலனியைச் சேர்ந்த ஆராயி, கடந்த 21-ம் தேதி இரவு, தனது 10 வயது மகன்  மற்றும் 14 வயது மகள் ஆகியோருடன் வீட்டில் உறங்கிக்கொண்டிருந்தபோது வீட்டுக்குள் புகுந்த சில மர்ம நபர்கள், மூன்று பேரையும் கொடூரமாகத் தாக்கியதோடு, 10 வயது சிறுவனை  அடித்துக் கொன்றனர். ஆராயி மற்றும் அவரது மகளுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால் சுயநினைவின்றி புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவருகின்றனர்.

தமிழகத்தையே உலுக்கிய இந்த வழக்கு, சமூக வலைதளத்தில் பல்வேறு கேள்விகளையும், விவாதங்களையும் கிளப்பியது. அதைத் தொடர்ந்து, உயிரிழந்த சிறுவனுக்கு 2 லட்ச ரூபாயும், காயமடைந்த ஆராயி மற்றும் சிறுமிக்கு தலா 50 ஆயிரம் ரூபாயும் நிவாரணத் தொகையாக அளிக்கப்படும் என்று சட்டப்பேரவையில் அறிவித்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. அதன்படி, உடனே ஆராயியின் வங்கிக் கணக்கு எண் மற்றும் புத்தகங்களை வாங்கியது மாவட்ட நிர்வாகம். முதல்வர் அறிவித்த இரண்டு வாரங்களுக்குப் பிறகு, ஆராயியின் வங்கிக் கணக்கில் 3 லட்ச ரூபாய் பணம் செலுத்தப்பட்டது. அந்தத் தொகை, ஆராயி வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டதால், அவரைத் தவிர வேறு யாராலும் அந்தப் பணத்தை எடுக்க முடியாது. அதனால், மருத்துவமனையில் அன்றாடச் செலவுகளுக்குக்கூட வழியில்லாமல் தவித்துவருகின்றனர் ஆராயி மகன்கள்.

“அம்மாவையும் பாப்பாவையும் ஜிப்மர் ஹாஸ்பிட்டல்ல சேர்த்ததுல இருந்து பெரிய பாப்பா, நான், தம்பிங்க எல்லாருமே இங்கேயேதாண்ணே இருக்கோம். நாங்க நாலு பேருமே கூலி வேலைக்குத்தான் போயிட்டிருந்தோம். வேலைக்குப் போனாதான் கையில காசு வரும். ஆனா, இந்தச் சூழ்நிலைல எப்படி எங்களால வேலைக்குப் போக முடியும். எங்களோட சொந்தக்காரங்களும் ஒருத்தர மாத்தி ஒருத்தர் தங்கி அம்மா, பாப்பாவைப் பாத்துக்கறாங்க. ஆனா, எங்களுக்கு சாப்பாட்டுக்குக்கூட காசு இல்லை. வீட்டுக்குப் போயிட்டு வர்றதுக்குக்கூட கையில காசு இல்லைண்ணா. இதுவரைக்கும் தெரிஞ்சவங்க, சொந்தக்காரங்கனு எல்லார்கிட்டயும் 30 ஆயிரம் ரூபாய்க்கு மேல கடனா வாங்கி செலவு செஞ்சிருக்கோம். முதல்வர் அறிவிச்ச பணத்தை எடுக்கலாம்னு பேங்குக்குப் போனோம். ஆனா, அம்மா வந்தாதான் அதை எடுக்க முடியும்னு சொல்லிட்டாங்க. அதிகாரிங்கக்கிட்ட கேட்டோம். அவங்களும் அதையேதான் சொல்லிட்டாங்க. அம்மா இங்க சுய நினைவில்லாம கெடக்குறாங்க. என்ன பன்றதுன்னே தெரியலைண்ணே” என்று கலங்குகிறார், ஆராயியின் மூத்த மகன் பாண்டித்துரை.

 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!