'இதுபோல் வேறு எந்தக் கட்சியும் செய்ததே இல்லை'- அமைச்சர் ஜெயக்குமார் பெருமிதம் | Jayakumar praises ADMK

வெளியிடப்பட்ட நேரம்: 15:40 (28/03/2018)

கடைசி தொடர்பு:15:40 (28/03/2018)

'இதுபோல் வேறு எந்தக் கட்சியும் செய்ததே இல்லை'- அமைச்சர் ஜெயக்குமார் பெருமிதம்

`காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, நாடாளுமன்றத்தின் முன் அ.தி.மு.க எம்.பி-க்கள் தொடர் போராட்டம் நடத்தி, இரு அவைகளையும் நடத்தவிடாமல் முடக்கிவிட்டோம்' என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். 

ஜெயக்குமார்

சென்னையில், செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'உச்ச நீதிமன்றம் வழங்கிய உத்தரவின் பேரில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க இன்னும் கால அவகாசம் உள்ளது. எதுவாக இருந்தாலும், 29-ம் தேதிக்குப் பின்னர்தான் முடிவெடுக்க முடியும். மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பாக நிச்சயம் ஒரு நல்ல முடிவை எடுக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.  தமிழகத்தைச் சேர்ந்த எந்தக் கட்சியும் இதுவரை மத்திய அரசுக்கு இதுபோன்ற அழுத்தங்களைக் கொடுத்ததே இல்லை. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, தொடர்ந்து 17 வது நாளாக நாடாளுமன்றத்தின் முன் அ.தி.மு.க எம்.பி-க்கள் தொடர் போராட்டம் நடத்தி, இரு அவைகளையும் நடத்தவிடாமல் முடக்கிவிட்டோம். இதுபோல் வேறு எந்தக் கட்சியும் செய்ததே இல்லை. 29-க்குப் பிறகும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவில்லை என்றால் தமிழக முதல்வருடன் கலந்து ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும்.

மத்திய அரசு மற்றும் தமிழ்நாடு அரசைக் கண்டித்து தீர்மானம் நிறைவேற்றும் தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின், ஏன் கர்நாடக அரசைக் கண்டித்து தீர்மானம் நிறைவேற்றக்கூடாது. காங்கிரஸ் என்றால் எதிர்த்து போராடக் கூடாதா, அவர்களைக் கட்டித் தழுவிக்கொள்கிறார்கள். ஆனால், அ.தி.மு.க அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க, பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. ஆனால், அவர்களின் ஆதாயத்துக்காக எங்களை வசைபாடுகிறார்கள்' என கூறினார்.