`அம்மா வழி ஆட்சிதான் என்றால் ஸ்டெர்லைட்டை மூடுங்கள்'- பாலபிரஜாபதி அடிகளார் காட்டம் | Sterlite issue - Bala Prajapathi Adikalar slams ADMK

வெளியிடப்பட்ட நேரம்: 16:00 (28/03/2018)

கடைசி தொடர்பு:16:00 (28/03/2018)

`அம்மா வழி ஆட்சிதான் என்றால் ஸ்டெர்லைட்டை மூடுங்கள்'- பாலபிரஜாபதி அடிகளார் காட்டம்

``தமிழகத்தில் அம்மா ஆட்சிதான் நடந்துகொண்டிருக்கிறது என்பவர்கள் ஸ்டெர்லைட் ஆலையை மூட நடவடிக்கை எடுத்திட வேண்டும்” என சாமிதோப்பு வைகுண்டபதி பாலபிரஜாபதி அடிகளார் தெரிவித்துள்ளார். 

ஸ்டெர்லைட்- சாமிதோப்பு வைகுண்டபதி  பாலபிரஜாபதி அடிகளார்

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக 45வது நாளாக போராட்டம் நடத்தி வரும் குமரெட்டியாபுரம் கிராமத்துக்கு வந்து போராட்டக்களத்தில் உள்ள மக்களைச் சந்தித்து பிரஜாபதி அடிகளார். ``ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான உங்கள் போராட்டத்துக்கு அய்யா வழி துணையாக இருக்கும். இத்தனை நாள்களாக தொடர்ந்து போராட்டம் நடத்தியும் அரசு சார்பில் நடவடிக்கை இல்லையே என வருத்தப்பட வேண்டாம். நிச்சயம் நல்ல தீர்வு கிடைக்கும். மீண்டும் ஆட்சியரைச் சந்தித்து ஆலை விரிவாக்கத்துக்குத் தடை விதிக்க வலியுறுத்தி மனு கொடுங்கள். மக்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பினை ஏற்படுத்தும் இந்த ஆலையை மூட நாங்களும் அரசை வலியுறுத்துவோம்” எனப் பேசினார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ``ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து வெளியேறும் புகையால் காற்று மாசுபாடு அடைவது மட்டுமல்லாமல் அப்பகுதி மக்களுக்குப் பல்வேறு நோய்கள் வருகின்றன. இந்த நிலையில் ஆலை விரிவாக்கம் செய்யப்பட பணிகள் நடைபெற்று வருகின்றன. விரிவாக்கம் செய்யப்பட்டால் மாசுபாடும், நோய்களும் மேலும் அதிகரிக்கும். இதனை எதிர்த்தும் தூத்துக்குடி மக்களுக்காவும் அமைதியான வழியில் போரட்டம் நடத்தி வரும் இந்த மக்களின் நிச்சயம் வெற்றி பெரும்.

ஸ்டெர்லைட்டுக்கு எதிராக எதிர்க்கட்சிகள்தான் மக்களை போராட்டத்துக்குத் தூண்டிவிடுவதாக சேலத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியிருப்பது சிறு பிள்ளைத்தனமானது. இந்த மக்களின் போராட்டத்தாலும், ஆலையை மூடிவிடுவதாலும் எடப்பாடி ஆட்சி ஒன்றும் முடிவுக்கு வந்துவிடாது. தமிழகத்தில் அம்மா வழி ஆட்சிதான் நடந்துகொண்டிருக்கிறது என வார்த்தைக்கு வார்த்தை கூறி வரும் எடப்பாடி மற்றும் அமைச்சர்கள் ஸ்டெர்லைட் ஆலையை மூட  நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க