வெளியிடப்பட்ட நேரம்: 16:40 (28/03/2018)

கடைசி தொடர்பு:16:40 (28/03/2018)

`தண்ணீருக்காக நாங்க படுற அவஸ்தை இருக்கே' - கலெக்டரிடம் கிராமமக்கள் வேதனை

கிராமமக்கள்

"எங்க ஊர்ல உள்ள மக்கள், 25-க்கும் மேற்பட்ட பள்ளிக்கூடம் போய் படிக்கிற புள்ளைங்களும் குடிக்க தண்ணீர் இல்லாமல் அல்லாடுறோம். தினமும் தண்ணீருக்காக நாங்க படுற அவஸ்தை இருக்கே... அய்யய்யோ, அதை சொல்லி மாளாது. காவிரி கூட்டு குடிநீர் திட்டத்திலயும் தண்ணீர் சரியா வர்றதில்லை. எங்க தண்ணீர் பிரச்னையைத் தீருங்க சாமி" என்று கரூர் மாவட்டக் கலெக்டர் அன்பழகனிடம் மனு கொடுத்திருக்கிறார்கள் மக்கள்.

கரூர் மாவட்டம், க.பரமத்தி ஒன்றியத்தில் இருக்கிறது தென்னிலை கிழக்கு ஊராட்சியில் வரும் செம்மாண்டம்பாளையம். இந்தக் கிராமத்தைச் சேர்ந்த மக்கள்தான், 'தண்ணீர் குடிக்க கிடைப்பதில்லை. தாகத்தோடு அலையுறோம். குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுங்க சார்" என்று மாவட்டக் கலெக்டரிடம் மனு கொடுத்திருக்கிறார்கள். அந்த மக்களிடமே பேசினோம்.

"எங்கள் ஊரில் 30 குடும்பங்கள் வசிக்கிறோம். எல்லோரும் கால் வயித்து கஞ்சிக்கே தாளம் போடுற அன்றாடங்காய்ச்சிகள்தான். சோறு திங்கவே காசு சம்பாதிக்க சரியா வேலை கிடைக்கமாட்டேங்குது. ஏதோ, ரேஷன் அரிசி இலவசமா கிடைப்பதால், அரை வயித்து கஞ்சியாச்சும் தடையில்லாமல் குடிக்கிறோம். ஆனால், குடிக்க தண்ணீர் கிடைக்காமதான் அல்லாடுறோம். இது வானம் பார்த்த வறண்ட பூமி. அதனால், இங்க போர்வெல் போட்டு தண்ணி எடுக்க முடியாது. அப்படியே போட்டாலும் 1,700 அடி வரை போடணும். அதுலயும் நல்ல தண்ணி கிடைக்கும்ன்னு சொல்ல முடியாது. இப்படிப்பட்ட சூழலில், எங்க குடிநீர் பிரச்னையைக் காவிரி கூட்டுக் குடிநீர் திட்டம்தான் உதவி பண்ணுச்சு. ஆனால், சில மாதங்களாக இந்த பைப்பில் தண்ணீர் சரிவர வருவதில்லை. இதனால், பள்ளிக்கூடம் போகும் 25 மாணவர்கள் குடிக்க தண்ணீர் கிடைக்காமல் அல்லாடி போறாங்க. குடிக்க தண்ணீர் கிடைக்காம மக்கள் நாங்க, மாற்று இடத்தில் தண்ணீர் பிடிக்க வழியில்லாமலும் சிரமப்பட்டுபோறோம். எனவே, மாவட்ட நிர்வாகத்திடம், 'காவிரி கூட்டு குடிநீர் திட்ட குழாய்ல பழையபடி போதுமான அளவு தண்ணீர் சப்ளை கிடைக்க நடவடிக்கை எடுக்கும்படி கோரிக்கை வச்சுருக்கோம்" என்றார்கள்.