பெட்ரூம்ல தொட்டில் கட்டப் போறீங்களா? இதைத் தெரிஞ்சுக்கங்க ப்ளீஸ்... | Take care of these things before you cradle your kid in bedroom!

வெளியிடப்பட்ட நேரம்: 15:33 (28/03/2018)

கடைசி தொடர்பு:15:33 (28/03/2018)

பெட்ரூம்ல தொட்டில் கட்டப் போறீங்களா? இதைத் தெரிஞ்சுக்கங்க ப்ளீஸ்...

சென்னையில் நான்கு மாத குழந்தை ஒன்று, தலை வீங்கி இறந்த சம்பவமும் அதற்கான காரணமும் அதிரவைத்துள்ளது. பெற்றோர் எந்த அளவுக்குக் கவனமுடன் இருக்க வேண்டும் என்பதை உணர்த்தியிருக்கிறது. அந்தக் குழந்தையின் அம்மா, சமையலறையில் வேலையாக இருந்திருக்கிறார். சேலைத் தொட்டிலில் இருந்த குழந்தை, தூக்கம் கலைந்து அழுதிருக்கிறான். உடனே அங்கே வந்த அம்மா, தொட்டிலை வேகமாக ஆட்ட, கண்மூடித் திறக்கும் நேரத்தில் பிஞ்சுக் குழந்தையின் தலை, அருகில் இருந்த கட்டிலில் மோதியிருக்கிறது. துடித்து அழுத குழந்தை, சற்று நேரத்தில் சமாதானமாகி உறங்கிவிட்டது. அந்தத் தாயும் அதை மறந்துவிட்டார். இரண்டு நாள்கள் கழித்து, திடீரென குழந்தையின் தலையானது வீங்க ஆரம்பித்துள்ளது. குழந்தை வலியால் கதற, பதறியபடி மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார்கள். ஆனாலும், பிள்ளையைக் காப்பாற்ற முடியவில்லை. மனதைப் பதறும் இந்தத் தொட்டில் செய்தியைப் படித்ததும், இதுபோல நடக்குமா? குழந்தையின் மரணத்துக்கான மருத்துவ காரணம் என்ன என்ற கேள்வி எழுந்தது. 

தொட்டில் குழந்தை

குழந்தை நல மருத்துவர் பழனிராஜ், ''நான்கு மாதக் குழந்தையின் பிஞ்சுத் தலையானது கட்டிலில் முட்டினால்... மை காட், ஒரு டாக்டராக நினைத்துப் பார்க்கவே தாங்கமுடியவில்லை. அந்தச் குழந்தையின் பெற்றோர் நிலையை யோசிக்கையில் வேதனையாக இருக்கிறது. அந்தக் குழந்தையின் தலை கட்டிலில் இடிபட்டதால், மூளைக்குள் ரத்தக்கசிவு ஏற்பட்டிருக்கும். இதுபோன்ற விஷயத்தில் காயம் வெளியே தெரியாது. தொட்டுப் பார்த்தும் தெரிந்துகொள்ள முடியாது. அடிபட்ட வலியில் சிறிது நேரம் அழுதுவிட்டு குழந்தை உறங்கிவிட்டிருக்கிறது. பெற்றோரும் கவலைப்பட ஒன்றுமில்லை என நினைத்திருக்கிறார்கள். அதுதான் பெரிய இழப்பை ஏற்படுத்திருக்கிறது. பொதுவாக, குழந்தைகள் தலையில் இடித்துக்கொண்டு மயக்கம் வந்தாலோ, வாந்தி எடுத்தாலோ உடனடியாக மருத்துவரைப் பார்த்துவிடுவது நல்லது. தேவைப்பட்டால், தலையை ஸ்கேன் செய்தும் பிரச்னையைக் கண்டுபிடிக்கலாம். உடனடியாக சரிசெய்யலாம். ஒரு ஸ்கேன் என்பது, நானூறு எக்ஸ்ரே கதிர்வீச்சுக்குச் சமம் என்பதால், குழந்தையின் ஹெல்த்தை கவனித்தில்கொண்டுதான் செய்வதா வேண்டாமா என்று முடிவு செய்வோம். எனவே, தயங்காமல் மருத்துவரை அணுக வேண்டும்'' என்றவர், குழந்தைகளைச் சேலைத் தொட்டிலில் தூங்கவைப்பதற்குப் பதில், தரையிலோ அல்லது தாழ்வான கட்டிலிலோ படுக்கவையுங்கள் என்றும் பரிந்துரை செய்கிறார். 

இன்றை நகர வாழ்க்கையில் சிறிய வீடு, அப்பார்ட்மென்ட் என வசிப்பிடம் சுருங்கிக்கொண்டே செல்கிறது. இதுபோன்ற வீடுகளில் குழந்தையின் தலை சுவரிலோ, கட்டிலிலோ இடிக்காமல் இருக்க எப்படி சேலைத் தொட்டில் கட்ட வேண்டும்? மூத்தக் குடும்பத் தலைவிகளான லஷ்மி சீனிவாசன் மற்றும் மகாலட்சுமி கார்த்திகேயன் சொல்வதைக் கேளுங்கள். 

ந்தக் காலத்தில் ஹாலில்தான் சேலைத் தொட்டில் கட்டுவோம். இப்போதைய அம்மாக்கள், அவர்கள் கண் எதிரே குழந்தை இருக்க வேண்டும் என்பதற்காக, பெட்ரூமிலேயே சேலைத் தொட்டில் கட்டுகிறார்கள். அங்கோ, கட்டில், பீரோ, தொலைக்காட்சி என எல்லாமும் அருகருகே இருக்கும். எனவே, பெட்ரூமில் தொட்டில் கட்டுவதைத் தவிர்க்கவும். அல்லது, குழந்தை தொட்டிலில் தூங்கும் காலம் முடியும் வரை கட்டில், பீரோ மாதிரியான பொருள்களை வெளியே மாற்றிவிடுவது நல்லது. அல்லது, இரும்புத் தொட்டிலில் படுக்கவைக்கலாம். 

டநெருக்கடி இருக்கும் வீடுகளில், ஸ்பிரிங்ல தொட்டிலைப் பயன்படுத்துகிறார்கள். இதுவும் வேண்டாம். இதைப் பெரியவர்கள் மட்டும் கவனமாக ஹேண்டில் செய்தால் பரவாயில்லை. வீட்டில் இருக்கும் சற்று வளர்ந்த குழந்தையும், 'தம்பி/தங்கச்சியைத் தூங்கவைக்கிறேன்' என ஆட்டும்போது, கட்டுப்பாடு இழந்து ஆபத்தில் முடிகிறது. 

திடீரென அழும் குழந்தையைச் சமாதானப்படுத்துவதாக, உடனடியாக அழுகையை நிறுத்துவதாக நினைத்து, சேலைத் தொட்டிலை ரொம்ப வேகமா வீசி ஆட்டாதீர்கள். எப்போதும் பொறுமை முக்கியம். 

சேலைத் தொட்டிலில் காற்றோட்டம் இருக்க, சிலர் பெரிய கட்டையை நடுவில் வைப்பார்கள். குழந்தையானது தொட்டிலில் வேகமாகப் புரளும்போது, அந்தக் கட்டை நழுவி, குழந்தையின் மீது விழும் வாய்ப்பு இருப்பதால், அந்தக் கட்டையை ஒரு மெல்லியக் கயிற்றில் தொட்டிலுடன் சேர்த்து கட்டுங்கள். 

சேலைத் தொட்டிலுக்குள்ளேயே சில குழந்தைகள், குப்புறப்படுத்துத் தூங்குவார்கள். அதை உடனுக்குடன் கவனித்து, திருப்பி விடுவது முக்கியம். இல்லையென்றால், சில குழந்தைகள் திரும்பிப் படுக்க தெரியாமல், மூச்சுத்திணறலில் தவிக்கும். 

நான்காம் மாதத்திலிருந்து குழந்தைகள் குடித்த பாலை கக்க ஆரம்பிக்கும். தொட்டிலில் இருக்கும்போது, காதின் ஓரமாக வழிந்து காதுக்குள் செல்லலாம். சில நேரங்களில் புரையும் ஏறலாம். அதையும் கவனித்து சுத்தம் செய்ய வேண்டும். 

ங்க வீட்டுப் பாப்பாக்களை சேலைத் தொட்டிலில் தூங்கவைக்கும்போது, மேலே சொன்ன அனுபவ டிப்ஸை கட்டாயம் பின்பற்றுங்கள் அம்மாக்களே... 

 


டிரெண்டிங் @ விகடன்