`அடுத்த வெடிகுண்டு விரைவில்...' - பதற வைக்கும் காவலர் ஒற்றுமை ஃபேஸ்புக் பக்கம்

 ஃபேஸ்புக்

ஆர்டர்லி குறித்த தகவல்கள் ஃபேஸ்புக்கில் காவலர் ஒற்றுமை என்ற பெயரில் பதிவு செய்யப்பட்டுவந்தது. தற்போது, அது முடக்கப்பட்டதால் அடுத்த வெடிகுண்டு விரைவில் என்று ஃபேஸ்புக்கில் பதிவுசெய்யப்பட்டுள்ளது. 

 தமிழக காவல்துறையில் திரைமறைவில் இருந்துவரும் ஆர்டர்லி பணி விவகாரத்தில் சமீபத்தில் நீதிமன்றம் தலையிட்டது. இந்த வழக்கு விசாரணையின்போது நீதிமன்றத்தில் தமிழக காவல்துறை சார்பில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் 'தமிழகத்தில் ஆர்டர்லி முறை இல்லை' என்று கூறப்பட்டது. அதை நீதிபதிகள் ஏற்றுக்கொள்ளாமல், சம்பந்தப்பட்ட காவல் அதிகாரியை ஆஜராகும்படி உத்தரவிட்டுள்ளது. 

 ஆர்டர்லி விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட்டதும், ஆர்டர்லி என்ற பெயரில் போலீஸ் அதிகாரிகள் வீடுகளில் வேலை பார்க்கும் காவலர்கள் மகிழ்ச்சியடைந்தனர். எந்தெந்த அதிகாரிகளிடம் ஆர்டர்லியாக உள்ள காவலர்களின் எண்ணிக்கை பட்டியல் காவலர் ஒற்றுமை என்ற ஃபேஸ்புக்கில் வெளிவரத் தொடங்கியது. இதுதொடர்பாகக் காவலர் ஒற்றுமை என்ற முகநூலில் பல தகவல்கள் பதிவாகின. காவல் அதிகாரிகளுக்கு நீதிமன்றம் குட்டு வைத்ததால் காவலர் ஒற்றுமை என்ற முகநூல் பக்கம் திடீரென முடக்கப்பட்டுள்ளது. இதனால், ஆர்டர்லி கருத்துகளைப் பதிவு செய்த காவலர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

ஃபேஸ்புக்

அதுதொடர்பாக ஃபேஸ்புக் பதிவில், `ஜாங்கிட் என்ற உயரதிகாரி மட்டும்தான் பணியாற்றிய இடங்களில் காவலர் நலன் சார்ந்த திட்டங்களை நிறைவேற்றினார்' என்று புகழ்பாடியுள்ளனர். மேலும், 'காவலர் துறையில் பல இடங்களில் எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லை. இதுகுறித்து எந்த அதிகாரியும் கவலை கொண்டதுண்டா. என்ன நடந்தாலும் ஆர்டர்லிகளைப் பணிக்கு அனுப்பக் கூடாது என்பதுதான் அதிகாரிகளின் எண்ணமாக உள்ளது. ஆர்டர்லிகள் பட்டியல் வெளியானால் அதை வெளியிடுபவர்கள் குறித்து ரகசிய விசாரணை நடந்துவருகிறது. காக்கிச் சட்டையைக் காதலித்து இப்பணிக்கு வந்தவர்களை ஆர்டர்லிகளாகப் பயன்படுத்துவதை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. நாங்கள் மக்களுக்கு சேவகனாக இருக்க விரும்புகிறோம். அதிகாரிகளுக்கு அல்ல. அதிகாரிகளின் இந்தச் செயல், சீப்பை மறைத்து வைத்து திருமணத்தை நிறுத்திவிடலாம் என்ற எண்ணம்தான். அடுத்த வெடிகுண்டு விரைவில். சிக்குபவர்கள் சின்னா பின்னம்தான்" என்று குறிப்பிட்டுள்ளனர்.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!