வடகொரிய அதிபர் கிம் ஜாங்குக்கு விமானப் பயணம் அலர்ஜி... ரயிலில் சீனா பயணம்

மெரிக்க அதிபர்களையே மிரட்டும் வடகொரிய அதிபர்களுக்கு விமானப் பயணம் என்றால் மட்டும் அலர்ஜி. வடகொரிய அதிபர்கள் பெரும்பாலும் வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்வதில்லை. கிழக்கு ஐரோப்பிய நாடுகளும் சீன நாடும்தான் வடகொரிய அதிபர்களை மனதார வரவேற்கும். தற்போதைய வடகொரிய அதிபரின் தந்தை கிம் ஜாங் இல் அடிக்கடி சீனாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்வார். விமானத்தில் எல்லாம் செல்ல மாட்டார். எங்கே சென்றாலும் ரயில் பயணம்தான். 

வடகொரியா அதிபருடன் சீன அதிபர்

கிழக்கு ஐரோப்பிய நாடுகளுக்கும் ரயிலில்தான் பயணப்படுவார். அதிபரின் பயணத்துக்காக மூன்று பிரத்யேக ரயில்கள்  எப்போதும் தயாராக இருக்கும். 'பச்சை ரயில்' என்று அந்த ரயில்களுக்குப் பெயர். அமெரிக்க அதிபரின் ஏர்ஃபோர்ஸ் ஒன் விமானத்துக்கு இணையான வசதிகளைக் கொண்டது. இந்த ரயில் தரையில் ஓடிக்கொண்டிருக்கும்போது ஹெலிகாப்டர்கள் மேலே பறந்து கண்காணிப்பில் ஈடுபடும்.

வடகொரியா அதிபரின் ரயில்

தற்போது, தந்தை வழியில் கிம் ஜாங்கும் சீனாவுக்குப் பச்சை ரயிலில் சென்றுள்ளார். கடந்த இரு நாள்களாக கிம் ஜாங் சீனாவுக்கு சென்றுள்ளதாக அரசல்புரசலாகத் தகவல் வெளியே கசிந்த நிலையில், ஜின்குவா செய்தி நிறுவனம் சீன அதிபர் ஸீ ஜின்பிங்குடன் கிம் ஜாங் கைகுலுக்கும் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளது. அதிகாரபூர்வ சந்திப்பு இல்லை என்று மட்டும் சொல்லப்பட்டுள்ளது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வரும் மே மாதத்தில் கிம்ஜாங்கை சந்திக்க சம்மதம் தெரிவித்துள்ள நிலையில், கிம் ஜாங்கின் சீன பயணம் அரசியல்ரீதியாக முக்கியத்துவம் பெறுகிறது. ஆயுள் முழுக்க சீன அதிபராக ஜின்பிங் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், இரு சர்வாதிகாரிகளின் சந்திப்பாகவும் பார்க்கப்படுகிறது. 2011-ம் ஆண்டு தந்தை இறந்த பிறகு, கிம் ஜாங் வடகொரிய அதிபர் ஆனார். அதிபரான பின், 6 ஆண்டுகளுக்குப் பிறகு, கிம் மேற்கொண்ட முதல் வெளிநாட்டு பயணம் இது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!