இழப்பீட்டு தொகை செக் ரூ.8... விவசாயிகளை ஏமாற்றும் பயிர் இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள்! | Farmers claiming that Insurance companies are cheating them

வெளியிடப்பட்ட நேரம்: 17:27 (28/03/2018)

கடைசி தொடர்பு:17:27 (28/03/2018)

இழப்பீட்டு தொகை செக் ரூ.8... விவசாயிகளை ஏமாற்றும் பயிர் இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள்!

டந்த ஓராண்டாக தமிழக விவசாயிகள் அதிகம் உச்சரித்த சொல் ‘பயிர் இன்ஷூரன்ஸ்சாகதான் இருக்கும். தங்களுக்கு நியாயமாகவும் சட்டப்படியும் கிடைக்க வேண்டிய பயிர் இழப்பீட்டு தொகைக்காக இவர்கள் நடத்திய தொடர் போராட்டங்கள் ஏராளம். முயற்சியுடையார் இகழ்ச்சியடையார் என்ற பழமொழி தனியார் பயிர் இன்சூரன்ஸ் நிறுவனங்களிடம் தோற்றுவிட்டன. இன்று வரை பல விவசாயிகளுக்கு இழப்பீட்டு தொகை கிடைக்கவே இல்லை. தற்பொழுது ஒரு சிலருக்கு மட்டும் அதிர்ஷ்டவசமாக இழப்பீட்டு தொகை வந்து சேர்ந்தது. இதனை கண்டு ஆனந்தப்பட வேண்டிய விவசாயிகள் அதிர்ச்சியில் உறைந்திருக்கிறார்கள். காரணம் வெறும் 2 ரூபாய், 8 ரூபாய் என ஒற்றை இலக்கத்தில் காசோலை வந்துள்ளன. இது தங்களை அவமானப்படுத்துவது போல் உள்ளது எனக் கொந்தளிக்கிறார்கள் விவசாயிகள்.

விவசாயி

இவர்களிடமிருந்து கோடிக்கணக்கில் பிரிமியம் தொகையை வசூலித்த தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்கள், இழப்பீட்டு தொகையை முழுமையாகக் கொடுக்காமல் ஏமாற்றப் பார்க்கிறது. 2016-ம் ஆண்டு இந்திய பிரதமர் மோடி அறிமுகப்படுத்திய பிரதம மந்திரி பசல் பீமா யோஜனா என்ற புதிய காப்பீட்டுத் திட்டத்தின் மூலமாகவே `பயீர் இன்ஷூரன்ஸ்’ தனியாருக்குத் தாரை வார்க்கப்பட்டன. இந்நிறுவனங்களால் அப்பாவி விவசாயிகள் ஏமாற்றப்படுவார்கள் என அப்பொழுதே பசுமை விகடன் எச்சரிக்கை செய்தது. 10.2.2016 தேதியிட்ட இதழில் இதுகுறித்து விரிவான கட்டுரை வெளியானது. தனியார் நிறுவனங்கள் நேர்மையாக விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகை கொடுக்கும் என்பதற்கு எந்தவோர் உத்தரவாதமும் இல்லை. லாபத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்படக்கூடிய தனியார் நிறுவனங்கள், கண்டிப்பாக விவசாயிகள் நலனைப் பற்றி கவலைப்படப் போவதில்லை என அக்கட்டுரையில் அழுத்தமாகப் பதிவு செய்திருந்தது. தற்பொழுது அதுதான் நிகழ்ந்துள்ளது. 2016-ம் ஆண்டும் கடும் வறட்சியின் காரணமாக தமிழக கிராமங்கள் நிலைகுலைந்து போயின. தண்ணீரின்றி பயிர்கள் கருகியதால் விவசாயிகள் கடுமையான பொருளாதார நெருக்கடிகளைச் சந்தித்தார்கள். வாழ்வாதாரத்தை இழந்ததால், பெரும் கடன் சுமைக்கு ஆளானார்கள். இத்தகைய இக்கட்டான சூழலில் தங்களுக்குக் கண்டிப்பாக பயிர் இன்ஷூரன்ஸ் இழப்பீட்டு தொகை கிடைத்துவிடும்... அது ஓரளவுக்காவது தங்களது கஷ்டத்தைப் போக்கும் என மிகுந்த நம்பிக்கையோடு காத்திருந்தார்கள். ஆனால், இவர்களில் பலருக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. பயிர் இன்ஷூரன்ஸ் இழப்பீடு கிடைக்காத விவசாயிகள் பெரும் கொந்தளிப்பில் இருக்கிறார்கள்.

விவசாயி சக்கரவர்த்திஇது ஒருபுறமிருக்க, இழப்பீடு அறிவிக்கப்பட்ட விவசாயிகளில் பலருக்கு இன்னும் பணம் வந்து சேரவில்லை. மேலும், பலருக்குப் பாதிப்புக்கேத்த முழுமையான இழப்பீடு கிடைக்கவில்லை. இப்படியாக இன்னும் பல குளறுபடிகள். கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள ராஜாசூடாமணி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சக்கரவர்த்தி ``நான் 7 ஏக்கர்ல நெல் சாகுபடி செஞ்சிருந்தேன். ஏக்கருக்கு 380 ரூபாய் வீதம் ஐசிஐசிஐ- லம்பார்டு இன்சூரன்ஸ் நிறுவனத்துக்குப் பிரிமியம் செலுத்தியிருந்தேன். எங்க பகுதி முழுக்கவே கடுமையான வறட்சி. எனக்கு 7 ஏக்கர் நெல்லும் கருகிப்போச்சு. ஏக்கருக்கு 24 ஆயிரம் ரூபாய் இழப்பீட்டுத் தொகை அறிவிக்கப்பட்டது. ஆனால், கடந்த 10 மாதங்களா அலைஞ்சிக்கிட்டு இருக்கேன். இன்னும் எனக்குப் பணம் வந்தபாடில்லை. எங்க ஊர்ல இன்னும் பல விவசாயிகளுக்கு இழப்பீட்டு தொகை கிடைக்கலை.” என்கிறார். கீழ ராதாம்பூரைச் சேர்ந்த விவசாயி துரை ``எனக்கு 30 ஏக்கர் நெற்பயிர்கள் முழுமையா கருகிப்போச்சு. 12 ஏக்கருக்கு மட்டும்தான் இழப்பீடு கிடைச்சிருக்கு. இன்னும் 18 ஏக்கருக்கு இழப்பீடு வரணும். இந்த நிலங்கள் எல்லாமே ஒரே பகுதியில் தொடர்ச்சியாகதான் இருக்கிறது. ஆனால், எந்த அடிப்படையில் 18 ஏக்கருக்கு இழப்பீடு தராமல் இருக்காங்கனு தெரியலை. ஏக்கருக்கு 25 ஆயிரம் ரூபாய்க்கு மேல செலவு செஞ்சி நெல் சாகுபடி செஞ்சோம். ஏதாவது பாதிப்புகள் வந்தால் ஓரளவுக்காவது ஒத்தாசையாக இருக்கும்ங்கற நம்பிக்கையில்தான் எங்களோட பயிரைக் காப்பீடு செஞ்சோம். ஆனால், இழப்பீட்டு தொகையை முழுமையாகக் கொடுக்க இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு மனசு வரமாட்டேங்குது.” என மனம் நொந்து பேசினார்.

இழப்பீட்டுத் தொகையை வழங்க வலியுறுத்தி 100-க்கும் அதிகமான விவசாயிகளோடு சென்னையில் உள்ள ஐசிஐசிஐ- லம்பார்டு இன்சூரன்ஸ் நிறுவனத்திற்குள் நான்கு நாள்கள் முற்றுகைப் போராட்டம் நடத்தினார் காவிரி டெல்டா பாசன விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் இளங்கீரன். இதில் நடக்கும் முறைகேடுகளையும் குளறுபடிகளையும் அம்பலப்படுத்துகிறார். ‘தமிழ்நாட்டில் ஐசிஐசிஐ- லம்பார்டு, நீயூ இண்டியா அசூரன்ஸ், தேசிய வேளாண் பயிர் காப்பீடு கழகம் ஆகிய மூன்று நிறுவனங்கள் பயிர் இன்ஷூரன்ஸ் நடவடிக்கைகள்ல இறங்கியிருக்கு. இந்த நிறுவனங்கள் ஒவ்வோண்ணும் தலா 10 மாவட்டங்கள்ல விவசாயிகள்ட்ட இருந்து பிரீமியம் வாங்கியிருக்கு. இதுல இரண்டு தனியார் நிறுவனங்களால் தான் விவசாயிகளுக்கு ஏமாற்றம் அதிகம். விவசாயிகள் பிரீமியம் தொகைக்கான டி.டி-யோடு பட்டா, சிட்டா அடங்கல், ஆதார் கார்டு ஜெராக்ஸ், பேங்க் பாஸ்புக் ஜெராக்ஸ் எல்லாம் அப்பவே கொடுத்துட்டாங்க. ஆனால் இந்த நிறுவனத்தோட அதிகாரிகள் டி.டி-யை மட்டும் வச்சிக்கிட்டு, மற்ற ஆவணங்கள் எல்லாத்தையும் அப்பவே தூக்கிப் போட்டுட்டாங்க. இழப்பீடு தொகை கொடுக்க வேண்டியதிருக்காதுனு கனவுல இருந்திருக்காங்க. 

இப்ப விவசாயிகள் கடுமையான போராட்டங்கள்ல இறங்கியதால என்ன செய்றதுனு தவிக்குறாங்க. சில ஊர்கள்ல விவசாயிகள் கொடுத்த பேங்க் பாஸ்புக் நம்பர் தெளிவாக இல்லை. அதனால் சம்பந்தப்பட்ட விவசாயிகளுக்கு அனுப்ப வேண்டிய தொகை மாறிப்போனதாகவும் சொல்றாங்க. வறட்சி கணக்கீடு செய்றதுலயும் நிறைய குளறுபடிகள் இருக்கு. ஏதோ ரேண்டம் நம்பர்ங்கற பேர்ல ஏதோ ஒரு கணக்கீடு செஞ்சி, ஒரு ஊர்ல நாலு சர்வே நம்பர்களை தேர்ந்தெடுக்குறாங்க. அந்த சர்வே நம்பர்கள்ல உள்ள நிலங்கள்ல போர்வெல் இருந்தால் அந்த ஊர்ல உள்ள எந்த விவசாயிக்கும் இழப்பீடு கிடையாது. காட்டுமன்னார்கோவில் பக்கத்துல உள்ள வீரானந்தபுரம், குமராட்சி ஒன்றியத்துல உள்ள புத்தூர் ஆகிய ஊர்கள்ல கடுமையான வறட்சி. ஆனால், ரேண்டம் நம்பர்கள்ல போர்வெல் இருக்குறதா சொல்லி இழப்பீடு தர மறுத்துட்டாங்க. தமிழ்நாட்டில் 10 மாவட்டங்கள்ல இன்னும் 16,779 விவசாயிகளுக்கு இழப்பீடு தராமல் நிலுவையில இருக்குனு ஐசிஐசி-லம்பார்டு அதிகாரிகளே ஒத்துக்குறாங்க. இதுவே தவறான கணக்கீடு. இந்த எண்ணிக்கை 30 ஆயிரத்தை தாண்டும். நியூ இண்டியா அசூரன்ஸ் நிறுவனமும் பல ஆயிரம் விவசாயிகளுக்கு இழப்பீடு தொகை கொடுக்காமல் இருக்கு. இன்ஷூரன்ஸ் நிறுவனங்களுக்கு பிரீமியம் தொகையாக மத்திய அரசு 60 சதவிகிதம், மாநில அரசு 30 சதவிகிதம், விவசாயிகள் 10 சதவிகிதமும் பணம் கொடுத்திருக்காங்க. இந்தக் கணக்குப்படி பார்த்தால் ஒவ்வொரு நிறுவனத்துக்கும் பல ஆயிரம் கோடி ரூபாய் பிரீமியம் தொகையாகக் கிடைச்சிருக்கு. ஆனால், எல்லாத்தையும் ஒட்டுமொத்தமா சுருட்டிக்கிட்டு விவசாயிகளை ஏமாத்தப் பார்க்குறாங்க.” எனக் கொந்தளிக்கிறார். 

தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு ``2016-ம் ஆண்டு தமிழ்நாட்டில் 31 மாவட்டங்களையும் வறட்சி மாவட்டங்களாக தமிழ்நாடு அரசு அறிவித்தது. ஆனால், தனியார் இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் சேட்டிலைட் மூலமாக படம் எடுத்ததாகவும் அதில் பல ஊர்கள்ல மரங்கள் பச்சையாக இருந்ததாகச் சொல்லி இழப்பீடு தொகை கொடுக்க முடியாதுனு சொல்றாங்க. சேட்டிலைட்ல இருந்து படம் எடுத்ததாகச் சொல்றது உண்மையானு தெரியலை. அப்படியே எடுத்தாலும் மரங்கள் பச்சையாகதான் தெரியும். இதை வச்சி மகசூல் இழப்பை எப்படி கணக்கீட முடியும். இது மிகப்பெரிய மோசடி.” என்கிறார்.

தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்புச் சங்கத்தின் துணைச் செயலாளர் சுகுமாறன் ``பழைய பயிர் இன்ஷூரன்ஸ் திட்டத்துல ஏக்கருக்கு வெறும் 65 ரூபாய்தான் பிரீமியம் கட்டிக்கிட்டு இருந்தோம். ஆனால், பிரதமர் மோடி அறிவிச்ச புதிய பயிர்க் காப்பீட்டுத்  திட்டத்துல பிரீமியம் தொகை 365 ரூபாயாக உயர்த்தப்பட்டது. 2016-ம் ஆண்டு காவிரி டெல்டா மாவட்டங்கள் முழுக்கவே கடுமையான வறட்சிங்கறது உலகம் அறிஞ்ச விஷயம். தண்ணீர் இல்லாம பயிர் கருகுனது எல்லாருக்கே தெரிஞ்ச உண்மை. ஆனால், பல கிராமங்கள்ல வறட்சியே சுகுமாறன்இல்லைனு பொய்யான காரணத்தை சொல்லி இழப்பீடு கொடுக்க நீயூ இண்டியா இன்ஷூரன்ஸ் நிறுவனம் மறுக்குது. இதுக்கு மிகச்சிறந்த கண்கூடான உதாரணம் தஞ்சை மாவட்டம் திருவையாறு பக்கத்துல உள்ள மேலத்திருப்பந்துருத்தி முதன்மை, மேலத்திருப்பந்துருத்தி கூடுதல் வருவாய் கிராமங்கள். வறட்சியின்போது இந்த இரண்டு கிராமங்களையும் தஞ்சை மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை பார்வையிட்டார். கடுமையான வறட்சியினால் பயிர்கள் பாதிக்கப்பட்டிருக்குறதா ஊடகங்கள்ல பேட்டி எல்லாம் கொடுத்தார். ஆனால், இந்த இரண்டு கிராமங்களுக்கும் இன்ஷூரன்ஸ் இழப்பீடு கிடைக்கலை. காரணம் இங்க பூஜ்ஜியம் சதவிகிதம் வறட்சினு இன்ஷூரன்ஸ் நிறுவனம் சொல்லுது. இது அப்பட்டமான மோசடி. இந்தக் கிராமங்களுக்குப் பக்கத்துல உள்ள திருவளாம் பொழில், கீழத்திருப்பந்துருத்தி கிராமங்கள்ல 60 சதவிகிதத்துக்கு மேல வறட்சி பாதிப்புனு சொல்லி இழப்பீடு தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. திருவாளம்பொழிலுக்கும் கீழத்திருப்பந்துருத்திக்கும் இடையிலதான் மேலத்திருப்பந்துருத்தி முதன்மை மற்றும் கூடுதல் வருவாய் கிராமம் இருக்கு. ஒரே மண், ஒரே சீதோஷ்ண நிலை. மகசூல் இழப்பை நேரில் ஆய்வு செய்வதாகச் சொல்வது உண்மையல்ல. மகசூல் இழப்பை ஆய்வு செய்ய, அதற்கான குழு வரும் போது அந்தப் பகுதியில் உள்ள அனைத்து விவசாயிகளுக்கும் தகவல் தெரிவிக்கணும். ஆய்வு செய்ய வராமலே வறட்சி பாதிப்பு இல்லைனு சொல்லிடுறாங்க” என ஆதங்கத்தை கொட்டித்தீர்க்கிறார்.

தனியார் இன்ஷூரன்ஸ் நிறுவனங்களின் நடவடிக்கைகளைத் தீவிரமாகக் கண்காணித்து, விவசாயிகளுக்குக் கிடைக்க வேண்டிய இழப்பீட்டுத் தொகையைப் பெற்றுத் தருவது மத்திய மாநில அரசுகளின் கடமை. ஆனால், இதெல்லாம் இங்கு நடக்காத காரியம் என்பது நாடறிந்த யதார்த்தம். 


டிரெண்டிங் @ விகடன்