டெல்லியிலிருந்து தமிழகத்துக்கு வரும் குட்கா! ரயிலில் கடத்தப்படும் அதிர்ச்சி வீடியோ | Gutka smuggling in Train - Shocking Video

வெளியிடப்பட்ட நேரம்: 17:09 (28/03/2018)

கடைசி தொடர்பு:17:30 (28/03/2018)

 டெல்லியிலிருந்து தமிழகத்துக்கு வரும் குட்கா! ரயிலில் கடத்தப்படும் அதிர்ச்சி வீடியோ

குட்கா

 தமிழகத்துக்கு குட்கா எப்படி இந்திய ரயில்வே மூலம் கடத்தப்படுகிறது என்பதை வீடியோ ஆதாரங்களுடன் அறப்போர் இயக்கம் வெளியிட்டுள்ளது. 

 இதுகுறித்து அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர்  ஜெயராம் வெங்கடேசன் கூறுகையில், 

 "கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறப்போர் இயக்கத்துக்கு போலீஸ் அதிகாரி ஒருவர் டெல்லியிலிருந்து மதுரைக்கு ரயிலில் குட்கா, பான்மசாலா ஆகியவை கடத்தப்படுவதாக ரகசிய தகவலைத் தெரிவித்தார். அதன்பேரில் ரகசியமாகக் களத்தில் இறங்கினோம். டெல்லி நிஜாமுதீன் முதல் கன்னியாகுமரி வரை வாரம் இருமுறை இயக்கப்படும் திருக்குறள் எக்ஸ்பிரஸ் ரயில் மூலம்தான் குட்கா கடத்தப்படுவது தெரியவந்தது. இந்த எக்ஸ்பிரஸ் ரயில் வாரத்தில் திங்கள், புதன் ஆகிய தினங்களில் மதுரை ரயில் நிலையத்துக்கு அதிகாலை மூன்று மணிக்கு வரும். ஐந்து நிமிடங்கள் அந்த ரயில் நிற்கும். ஆனால், அதைத்தாண்டிக் கூடுதலாக ரயில் நிறுத்தப்படுவது தெரிந்தது.

இதனால், அந்த ரயிலைக் கண்காணித்தோம். அப்போது, ரயில் இன்ஜினுக்கு அடுத்த பெட்டியிலிருந்து குட்கா, பான்மாசாலா ஆகியவை அடங்கிய 200 அட்டைப் பெட்டிகள் இறக்கப்பட்டன. இதற்காக ரயில், 15 நிமிடங்கள் முதல் 45 நிமிடங்கள் நிறுத்தப்பட்டது.  அதை, ரகசியமாக வீடியோ எடுத்தோம். இறக்கப்பட்ட அட்டைப் பெட்டிகள் எவ்வித சோதனையுமின்றி டிராலி மூலம் வெளியில் கொண்டு செல்லப்பட்டது. இந்தக் கடத்தலுக்கு ரயில்வே அதிகாரிகள் சிலர் உடந்தையாக உள்ளனர். இந்தத் தகவலை ஆதாரங்களுடன் தெரிவிக்க சி.பி.ஐ உயரதிகாரியைச் சந்திக்க அனுமதி கேட்டோம். ஆனால், அனுமதி தரப்படவில்லை.

 

 

ரயில்வே துறையின் தலைமை ஊழல் தடுப்பு ஆணையரைச் சந்தித்து கடந்த ஜனவரி மாதம் ஆதாரங்களைக் கொடுத்தோம். அதன்படி பிப்ரவரி மாதம் திடீர் சோதனை நடத்தப்பட்டது. 200 குட்கா அட்டைப் பெட்டிகள் கைப்பற்றப்பட்டன. ஆனால், இதுவரை எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்படவில்லை. எந்த அதிகாரி மீதும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்தக் கடத்தல் விவரங்கள் குறித்து தமிழக உணவு பாதுகாப்புத்துறை ஆணையருக்கும் மத்திய அரசின் உணவு பாதுகாப்புத் துறையினருக்கும் தெரிவித்தோம். உச்ச நீதிமன்ற குட்கா தடை தீர்ப்பைச் சுட்டிக்காட்டி மத்திய உணவு பாதுகாப்புத்துறை ரயில்வே உணவு பாதுகாப்புத்துறைக்கு மார்ச் 14-ல் கடிதம் எழுதியுள்ளோம். எனவே, குட்கா கடத்தல் விவகாரத்தில் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.