`சிலை கடத்தல் திருட்டில் கைது செய்யப்பட்டவருக்கு பத்மஸ்ரீ விருதா?’ - கொந்தளிக்கும் அமைப்புகள்

பிரசித்திபெற்ற பழனி தண்டாயுதபாணி கோயிலுக்குச் செய்த புதிய சிலையில் முறைகேடு செய்ததாக பத்மஸ்ரீ விருதுபெற்ற முத்தையா ஸ்தபதி கைது செய்யப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முத்தையா ஸ்தபதி

பழனி முருகன் கோயிலில் நவபாஷானத்தால் செய்யப்பட்ட மூலவர் சிலையை போகர் சித்தர் உருவாக்கினார்.  அந்தச் சிலை சேதமடைந்துவிட்டதால் அதேபோல் புதிதாக ஐம்பொன் சிலை ஒன்றை செய்ய 2003-2004ம் ஆண்டு தி.மு.க. ஆட்சிக்காலத்தில், பிரபல சிற்பி முத்தையாவிடம் ரூ.1.31 கோடியில் செய்ய ஒப்பந்தம் செய்யப்பட்டது.  20 கிலோ தங்கம் கலந்து செய்யப்பட்ட புதிய முருகன் சிலை நான்கு மாத காலத்திலேயே நிறம் மாறியது.  இந்தச் சிலை செய்ததில் முறைகேடு நடந்துள்ளதாக புகார் எழுந்தது.  இது தொடர்பாக சிலைகடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் நேரடியாக விசாரணை நடத்தினார்.  தீவிர விசாரணைக்குப் பிறகு முத்தையா ஸ்தபதி மற்றும் அறநிலையத்துறை முன்னாள் இணை ஆணையர் கே.கே.ராஜா ஆகியோர் கைதுசெய்யப்பட்டு கோர்ட் உத்தரவின் பேரில் அவர்கள் இருவரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். 

இதுபற்றி தமிழ்நாடு திருக்கோயில்கள், திருமடங்கள் பாதுகாப்பு பேரவைத் தலைவர் அழகிரிசாமியிடம் பேசியபோது, ''முத்தையா ஸ்தபதி விசாரணையின்போது, 'நான் மட்டும் இந்த தவறை செய்யவில்லை.  எனக்கு மேல் நிறைய பெரிய மனிதர்கள் இருக்கிறார்கள்.  அவர்கள் மீதும் நடவடிக்கை எடுங்கள்' என்று கதறியிருக்கிறார்.  முத்தையா ஸ்தபதிக்கு பத்மஸ்ரீ விருது கொடுக்க பரிந்துரை செய்தது யார்? அவருக்கு கொடுத்த விருதை மத்திய அரசு திரும்பப் பெறவேண்டும்.  காஞ்சிபுரம் மாவட்டம், கேளம்பாக்கத்தில் முத்தையா ஸ்தபதி அருங்காட்சியகம் அமைத்திருக்கிறார்.  அங்கிருந்து ஆயிரக்கணக்கான சிலைகள் வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் அனைத்துக் கோயில்களிலும் உள்ள தெய்வத் திருமேனிகளை ஆய்வு செய்ய வேண்டும்.  முத்தையா ஸ்தபதி மூலம் பல சிலைகள் வெளிநாட்டுக்கு கடத்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுகிறது.  அவருடன் பல அரசியல்வாதிகளும் தொடர்பில் இருந்திருக்கலாம்.  அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.  சிலை கடத்தல் திருடனுக்கு பத்மஸ்ரீ விருது கொடுத்தது அந்த விருதுக்கே அவமானம்'' என்று முடித்தார்.  

Stabapathi Muthaiya

மயிலாடுதுறை சுற்றுவட்டாரப் பகுதிகளில் இந்து அமைப்பகள் சார்பில், ''சிலை கடத்தல் திருடனுக்கு மத்மஸ்ரீ விருதா'' என்ற கண்டன போஸ்டர்களும் ஒட்டப்பட்டுள்ளன. 
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!