வெளியிடப்பட்ட நேரம்: 19:20 (28/03/2018)

கடைசி தொடர்பு:19:23 (28/03/2018)

'நல்லதே நடக்கும்'- காவிரி மேலாண்மை வாரியம் விவகாரத்தில் அமைச்சர் உதயகுமார் நம்பிக்கை

உதயகுமார்

``காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரத்தில் நமக்கு நல்லதே நடக்கும்" என்று அமைச்சர் ஆர்.வி.உதயகுமார் நம்பிக்கை தெரிவித்தார்.

மதுரை பாண்டி கோயில் ரிங் ரோடு பகுதியில் அமைந்துள்ள அம்மா திடலில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் வரும் 30ம் தேதி 100க்கும் மேற்பட்ட ஜோடிகளுக்கு இலவச திருமண நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அதற்கு உண்டான முன்னேற்பாடுகளைப் பார்வையிட்ட தமிழக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி உதயகுமார் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

அப்போது அவர் கூறுகையில், ``காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் நல்லதே நடக்கும். தமிழக முதல்வர் மற்றும் துணை முதல்வர் தலைமையில் நாங்கள் என்றுமே தமிழர்களின் உரிமையை விட்டுக்கொடுக்க மாட்டோம். காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்குரிய வழிகள் சுமார் 129 ஆண்டுகள் அடைக்கப்பட்டிருந்தன. தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் நடவடிக்கையால் தற்போதுதான் அதற்கான விடை கிடைத்துள்ளது. தமிழக அரசு எப்போதும் தமிழர்களின் உரிமைகளை விட்டுக் கொடுக்கப்படாது. காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்காவிட்டால் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து தலைமை முடிவு செய்யும்'' என்று தெரிவித்தார்.

மதுரையில் நடைபெறவுள்ள திருமண நிகழ்ச்சியில் 70 வகையான சீர் வரிசைகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்கவுள்ளார் என்பது குறிப்பிடதக்கது.