'கவர்னருக்கு எதிராக ஜெயலலிதா அன்று என்ன செய்தார்?' - ஈ.பி.எஸ். - ஓ.பி.எஸ் கவனத்துக்கு... | What did Jayalalitha do against the governor in the past

வெளியிடப்பட்ட நேரம்: 17:51 (28/03/2018)

கடைசி தொடர்பு:17:51 (28/03/2018)

'கவர்னருக்கு எதிராக ஜெயலலிதா அன்று என்ன செய்தார்?' - ஈ.பி.எஸ். - ஓ.பி.எஸ் கவனத்துக்கு...

பன்வாரிலால் புரோகித், தமிழ்நாடு கவர்னராக 06.10.2017 அன்று பொறுப்பு ஏற்றார். மற்ற கவர்னர்களைப் போல், கவர்னர் மாளிகைக்கு தன்னைச் சந்திக்க வரும் பார்வையாளர்களை சந்தித்து, விழாக்களில் கலந்து கொள்வதோடு நிறுத்திக் கொள்ளாமல், தமிழக அரசின் திட்டங்களைப் பார்க்க ஊர் ஊராகக் கிளம்பி இருக்கிறார். கடந்த ஆண்டு டிசம்பரில் அவர், முதலில் கோவை மாநகர் சென்றார். அந்த ஆய்வின்போது, உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணியும் உடன் இருந்தார். இந்த ஆய்வுப் பணியை தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையாக எதிர்த்தார். ஆனால், அ.தி.மு.க அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, ''கவர்னர் ஆய்வு செய்வது அனைவருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது'' என்றார். கவர்னர் பன்வாரிலால் புரோகித், ''என்னை விமர்சிக்கிறார்கள். ஆய்வு செய்தால்தான் அரசின் பணி எவ்வாறு நடக்கிறது எனத் தெரிந்துகொள்ள முடியும். பாராட்டவும் முடியும். கோவையைப்போல தமிழகத்தில் பிற மாவட்டங்களிலும் ஆய்வுப் பணியை மேற்கொள்வேன்'' என்றார். அதைப் பாராட்டி வழிமொழிந்தார் தமிழக பி.ஜே.பி தலைவர் டாக்டர் தமிழிசை.

பன்வாரிலால் புரோகித்

இதையடுத்து, கோவை, கடலூர், தஞ்சை என்று அடுத்தடுத்து பன்வாரிலால் புரோகித் சுற்றுப் பயணம் பிஸியானது. அவர் ஆய்வுக்குச் சென்ற இடங்களில் எல்லாம் தி.மு.க சார்பில் கருப்புக் கொடி காட்டப்பட்டது. இந்த ஆய்வுப் பணியை டி.டி.வி.தினகரன் கடுமையாகக் கண்டித்தார். அவர், ''கவர்னர் ஆய்வு நடத்துவது மாநில சுயாட்சிக்கு எதிரானது. முதல்வரும் துணை முதல்வரும் மக்கள் நலனைப்பற்றி கவலைப்படவில்லை'' என்று எச்சரித்தார்.  இப்படி, ஆளும்கட்சியைத் தவிர அனைத்துக் கட்சிகளும் கவர்னரின் ஆய்வுக்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் தமிழக சட்டப்பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனம் குறித்து விளக்கம் அளிக்க தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு நேற்று, கவர்னர் மாளிகையில் இருந்து திடீர் அழைப்பு வந்தது. அதை ஏற்று உடனே அவர், கவர்னர் மாளிகைக்குப் புறப்பட்டுச் சென்றார். அவரோடு, முன்னாள் அமைச்சர் துரைமுருகனும் சென்றிருந்தார். இந்தச் சந்திப்பின் போது, டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழக துணைவேந்தர் சூரிய நாராயண சாஸ்திரி நியமனம் தொடர்பாக விளக்கம்  சொன்னார் கவர்னர் பன்வாரிலால் புரோகித்.

சட்டப்பல்கலைக் கழகம்

இதனையடுத்து ஸ்டாலின், ''மத்திய அரசால் நியமிக்கப்பட்டு இருக்கும் நீங்கள், தமிழ்நாட்டில் ஒரு ஆட்சி இருக்கின்றபோது, மாநில சுயாட்சிக்கு குந்தகம் விளைவிக்கின்ற வகையில், நீங்கள் தனியாக எப்படி ஆய்வு செய்யலாம்? அது முறையா?'' என்று கேட்டார். அதற்கு கவர்னர், “நான் ஆய்வுப் பணியை மேற்கொள்ளவில்லை. ஆளுநர் என்ற காரணத்தால், மாநிலத்தின் வளர்ச்சி குறித்து அறிந்துகொள்ள தமிழகத்தின் பல பகுதிகளுக்குச் சென்று கொண்டிருக்கிறேன்'' என்று  பதில் சொன்னார். அதனை ஸ்டாலின் ஏற்றுக்கொள்ளவில்லை. ''தமிழ்நாட்டில் ஆட்சி சரிவர நடைபெறவில்லை என்று சொல்லிவிட்டு நீங்கள் சென்று ஆய்வு செய்தால், நாங்கள் அதில் குறுக்கிடமாட்டோம். ஆனால், ஒரு ஆட்சி நடைபெறும்போது நீங்கள் எப்படிச் செல்லலாம்? அது முறையற்றது. உங்கள் செயல், மாநில சுயாட்சிக்கு குந்தகம் விளைவிக்கிறது'' என்று திரும்பவும் அழுத்தமாகக் கேட்டார். இதற்குப் பதிலளித்த கவர்னர், ''நீங்கள் சொன்னதைப் பற்றி நான் யோசிக்கிறேன். பரிசீலித்து முடிவெடுக்கிறேன்'' என்று சொல்லி அனுப்பினார்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட, அ.தி.மு.க அரசு ஆட்சி அதிகாரத்தில் இருக்கும்போது கவர்னரின் செயல் கண்டிக்கத்தக்கது என்று கவர்னர் மாளிகையில் நேருக்கு நேர் கவர்னரிடம் கேட்டு விட்டார் ஸ்டாலின். ஆனால், எதிர்ப்பு தெரிவிக்க வேண்டிய ஆளும்கட்சி பம்மிக்கொண்டு இருக்கிறது. 

1993 ஆம் ஆண்டு, ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் அப்போது கவர்னராக இருந்த சென்னாரெட்டி சென்னை சேத்துப்பட்டு ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்தில் குண்டு வெடித்தபோது நேரில் சென்று பார்த்தார். குண்டு வெடித்த இடங்களை ஆய்வு செய்தார். பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் சொன்னார். துயர் நிறைந்த இடத்துக்கு சென்றதைக்கூட அன்றைய முதல்வர் ஜெயலலிதா ஏற்றுக் கொள்ளவில்லை. கவர்னர் செயலுக்கு கடும் ஆட்சேபணை தெரிவித்தார். 

சென்னாரெட்டி

அதன்பின்னர், 1995  ஆம் ஆண்டு மதுரை காமராஜர் பல்கலைக் கழக பட்டமளிப்பு விழாவுக்குச் சென்ற கவர்னர் சென்னாரெட்டி, அரசு அதிகாரிகளை அழைத்து சில விபரங்களைக் கேட்டார். அதையும் சாதாரணமாக எடுத்துக் கொள்ளவில்லை ஜெயலலிதா. அ.தி.மு.க அரசின் ஆட்சி அதிகாரத்தில் தலையிடுகிறார் என்று கொதித்து எழுந்தார். சென்னாரெட்டியைக் கண்டித்து ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் கடிதம் எழுதினார். இதையடுத்து, கவர்னருக்கும் அ.தி.மு.க-வினருக்கும் இடையே நேரடி மோதல் எழுந்தது. விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே சென்னாரெட்டி காரை வழிமறித்து ஆர்ப்பாட்டம் நடத்தித் தங்கள் எதிர்ப்பைக் காட்டினர் அ.தி.மு.க-வினர். சுதந்திரதினம், குடியரசு தினம் ஆகிய நாட்களில் கவர்னர் மாளிகை நடத்தும் சம்பிரதாய தேனீர் விருந்துகளைப் புறக்கணித்து அ.தி.மு.க அரசின் எதிர்ப்பை உறுதியாகப் பதிவு செய்தார் ஜெயலலிதா. விழாக்களில் சென்னாரெட்டியோடு தமிழக அமைச்சர்கள் எவரும் கலந்து கொள்ளக்கூடாது என்று தடை போட்டுவிட்டார். 

உச்சக்கட்டமாக, 'சென்னாரெட்டி தன்னிடம் தகாத முறையில் நடந்துகொண்டார்'  என்று ஜெயலலிதா குற்றம் சாட்டினார். இந்தக் காலகட்டங்களில் சென்னாரெட்டியைக் கண்டித்து அ.தி.மு.க-வினர் நடத்திய ஆர்ப்பாட்டங்களால் கிண்டி கவர்னர் மாளிகைக்குள் முடங்கிக் கிடந்தார் சென்னாரெட்டி. அ.தி.மு.க ஆட்சி அதிகாரத்தில், கவர்னர் சென்னாரெட்டி தலையிடுவதைக் கண்டித்து ஜெயலலிதா எடுத்த அதிரடி நடவடிக்கைகள் இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்தது. அதன்பிறகு தமிழகத்துக்கு வந்த எந்த கவர்னரும் மாநில அரசின் நிர்வாகத்தில் தலையிட்டது கிடையாது. ஆனால், இப்போது கவர்னர் பன்வாரிலால் புரோகித் நடத்தும் ஆய்வுப் பணிகளில் மாவட்ட கலெக்டர் கலந்து கொள்கிறார். எதிர்ப்பு தெரிவிக்க வேண்டிய அமைச்சர்களும் கலந்துகொள்கிறார்கள். 'இந்த ஆய்வு ஆரோக்கியமானது' என்றும் அவர்கள் சொல்கிறார்கள். ஜெயலலிதா வழியில் ஆட்சி நடத்துகிறோம் என்று சொல்லிக்கொள்ளும் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம் அரசுக்காக கவர்னர் பன்வாரிலால் புரோகித்திடம் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் வாதாடி இருக்கிறார். ஆய்வுப் பணி செய்யக்கூடாது என்று நேருக்கு நேராகச் சொல்லி இருக்கிறார்.

ஜெயலலிதா வழியில் ஈ.பி.எஸ்., ஓ.பி.எஸ் நடைபோடுவார்களா..? 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்