`மனிதர்களே வாழ வழியில்லாதபோது புலிகள் சரணாலயம் எதற்கு?' - ஜி.கே.மணி காட்டம் | PMK leader GK Mani slams TN government over proposed Tiger sanctuary in Kanyakumari district

வெளியிடப்பட்ட நேரம்: 20:40 (28/03/2018)

கடைசி தொடர்பு:20:40 (28/03/2018)

`மனிதர்களே வாழ வழியில்லாதபோது புலிகள் சரணாலயம் எதற்கு?' - ஜி.கே.மணி காட்டம்

பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி இன்று நாகர்கோவிலில் அளித்த பேட்டி

னிதர்களே வாழவழியில்லாதபோது புலிகள் சரணாலயம் எதற்கு என பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி நாகர்கோவிலில் கேள்வி எழுப்பினார்.

நாகர்கோவிலில் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ``ஒகி புயலில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வழங்கும் நிவாரணம் மிகவும் குறைவாக உள்ளது. இன்னும் 142 மீனவர்களை காணவில்லை. ஒகி புயலில் காணாமல் போன மீனவர்கள் குடும்பத்திற்கு முழு அளவில் நிவாரணம் வழங்க வேண்டும். உலக அளவில் பிரசித்திபெற்ற ரப்பர் குமரி மாவட்டத்தில்தான் கிடைக்கிறது. ஆனால், கட்டுப்படியாகும் விலை கிடைப்பதில்லை. ரப்பர் உற்பத்தி நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இதை மேம்படுத்த குமரி மாவட்டத்தில் ரப்பர் பூங்கா அமைக்க வலியுறுத்தியும் அமைக்கப்படவில்லை. மத்திய- மாநில அரசுகள் பெரிய அளவில் ரப்பர் பூங்கா அமைத்து நல்ல விலை வழங்க வேண்டும். தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடியில் ஆண்டுதோறும் 10 முதல் 15 சதவிகிதம் கட்டணத்தை உயர்த்துகிறார்கள். 10, 15 ஆண்டுகளாக கட்டணம் உயர்த்தியதால் இரண்டு மூன்று மடங்கு கட்டணம் உயர்ந்துவிட்டது. அதற்கு தகுந்த அளவிற்கு சாலைகளை மேம்படுத்தவில்லை. தேசிய நெடுஞ்சாலைத்துறை சாலை பராமரிப்பைக் கண்காணித்து கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும். 10 ஆண்டுக்கு மேல் உள்ள சுங்கச்சாவடிகள் அகற்றப்பட வேண்டும்.

அய்யா வைகுண்டர் சமுக நீதிக்காகப் பாடுபட்டவர். அதிலும் பெண் அடிமைத்தனத்தைப் போக்க பெண் உரிமைக்குக் கடுமையாகப் போராடி பல எதிர்ப்புகளைச் சந்தித்தார். அய்யா வைகுண்டரை நாடார் சமுதாய மக்கள் போற்றி வணங்கிவருகிறார்கள். சாமிதோப்பு அய்யா வைகுண்டர் பதியை இந்து அறநிலையத்துறை எடுப்பது ஏற்புடையதல்ல. அது நாடார் மக்களை அவமதிக்கும் செயல். அந்த அறக்கட்டளையைத் தொடர்ந்து செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும். கேரளமாநில அரசு அய்யாவை கொண்டாடுகிறார்கள், அவர் பெயரில் விருது வழங்குகிறார்கள். அந்த நடவடிக்கையை தமிழக அரசு எடுக்க வேண்டும்.

பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி இன்று நாகர்கோவிலில் அளித்த பேட்டி

கன்னியாகுமரி வர்த்தக துறைமுகம் குறித்து மக்கள் மத்தியில் நல்லிணக்கம் ஏற்படுத்தும் விதமாக ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் செயல்படும் மக்களை அழைத்து அரசுப் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். கூட்டுறவுச் சங்கத் தேர்தலில் தமிழகத்தில் ஆளும் கட்சியைச் சார்ந்தவர்களிடம் மட்டும் வேட்பு மனு வாங்கிவிட்டு, மற்றவர்களை நிராகரிக்கிறார்கள். தூத்துக்குடி தாமிர ஆலையால் தாமிரபரணி மாசுபட்டிருக்கிறது. கடலுக்குச் செல்லும் கழிவால் கடல் வாழ் உயிரினங்களுக்கும் ஆபத்து உள்ளது. அதிலும் மக்களிடம் கருத்து கேட்காமல் விரிவாக்கம் செய்கிறார்கள். காவிரி மேலாண்மை தமிழகத்துக்கு ஏமாற்றமளிக்கிறது, நமது உரிமை பறிக்கப்பட்டுவிட்டது. காவிரி நடுவர்மன்ற இறுதித்தீர்ப்பு அடிப்படையில் மேலாண்மை வாரியம் அமைக்க உத்தரவிடுகிறது. வாரியத்தை ஏற்காமல் மேற்பார்வை வாரியம் என்ற அதிகாரம் இல்லாத கண்காணிப்பு அமைப்பை ஏற்படுத்துவதால் தமிழகத்துக்கு ஏமாற்றமே. மத்திய அரசு உத்தரவில்தான் தமிழக அரசு செயல்படுகிறது என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மை. குமரி மாவட்டத்தில் புலிகள் சரணாலயம் அமைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதற்காக கிராம மக்களை அப்புறப்படுத்தும் நடவடிக்கையில் அரசு இறங்கியுள்ளது. மனிதர்களே வாழ வழியில்லாதபோது புலிகள் சரணாலயம் எதற்கு?. எனவே, மக்களை அப்புறப்படுத்தும் நடவடிக்கையை அரசு கைவிட வேண்டும்" என்றார்.


[X] Close

[X] Close