'5 கோடி மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் தீர்ப்பு'- கொந்தளித்த முகிலன் | social activist mugilan has teared the cavery judgement copy

வெளியிடப்பட்ட நேரம்: 22:00 (28/03/2018)

கடைசி தொடர்பு:20:35 (30/03/2018)

'5 கோடி மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் தீர்ப்பு'- கொந்தளித்த முகிலன்

அணு உலை வழக்குக்காக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அணு உலை போராளியான முகிலன், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உத்தரவிட்ட உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் நகலைக் கிழித்து வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது. 

முகிலன்

கூடங்குளம் அணு உலை அமைக்க எதிர்ப்புத் தெரிவித்து இடிந்தகரையில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்றவர், சுற்றுச்சூழல் போராளியான முகிலன். அணு உலைப் போராட்டத்தில் ஈடுபட்ட லட்சக்கணக்கான மக்கள் மீது வழக்குத் தொடரப்பட்டிருக்கிறது. இந்த வழக்குக்காக முகிலனை போலீஸார் கைது செய்தனர். அவர் கைதாகி 200 நாள்களைக் கடந்த நிலையிலும் ஜாமீன் கேட்காமல் தொடர்ந்து சிறையில் இருந்து வருகிறார். இந்த நிலையில் வழக்கு தொடர்பாக அவரை வள்ளியூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்னர் வெளியில் வந்த அவர், காவிரி தொடர்பாக உச்ச நீதிமன்றம் வெளியிட்ட தீர்ப்பின் நகலைக் கிழித்து வீசினார். 

பின்னர் பேசிய முகிலன், ``காவிரி நீதிமன்றத் தீர்ப்பை மத்திய அரசு மதிக்கவில்லை. இந்தத் தீர்ப்பின் மூலமாக மத்திய அரசும், உச்ச நீதிமன்றமும் தமிழக மக்களுக்குத் துரோகம் இழைத்துவிட்டன. இது தமிழகத்தில் உள்ள 5 கோடி மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் தீர்ப்பு. அதனால், இந்தத் தீர்ப்பின் நகலைக் கிழித்து வீசினேன். தமிழக மக்கள் கேட்கும் காவிரியைத் தர மறுப்பதைக் கண்டித்து இந்த நடவடிக்கையில் ஈடுபட்டேன். தமிழக மக்களும் இந்தத் தீர்ப்பின் நகலைக் கிழித்து வீச வேண்டும். 

தமிழகத்துக்குக் காவிரியைக் கொடுக்க மறுக்கும் மத்திய அரசு, தமிழர்கள் விரும்பாத ஸ்டெர்லைட், நியூட்ரினோ,கோகோகோலா, பெப்சி, ஹைட்ரோ கார்பன், மீத்தேன் எனப் பல்வேறு நாசகாரத் திட்டங்களைக் கொண்டுவந்து தமிழர்களின் தலையில் திணிக்கிறது. தமிழினத்தையே அழிக்கும் செயலில் ஈடுபட்டு வரக்கூடிய மத்திய அரசுக்குத் தமிழக அரசு துணை போவது கண்டனத்துக்குரியது. 

தீர்ப்பு நகல் கிழிப்பு

காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தால், டெல்டாவில் 300 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான நிலக்கரியை வெட்டி எடுக்க முடியாது. ஹெட்ரோ கார்பன், மீத்தேன் எடுக்க முடியாது என்பதால் திட்டமிட்டே அந்தப் பகுதியைப் பாலைவனமாக்கும் முயற்சியில் மத்திய அரசு இறங்கியிருக்கிறது. அதனாலேயே காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு மறுக்கிறது. மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டால், காவிரிக் கொள்ளிட்டத்தில் இருக்கும் 10 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான மணலைக் கொள்ளையடிக்க முடியாது என்பதால், மாநில அரசும் மத்திய அரசின் செயலுக்குத் துணை போகிறது. 

கூடங்குளம் அணு உலைக்கு எதிராகப் போராடிய அப்பாவி மக்கள் மீது போடப்பட்ட வழக்குகளைத் தள்ளுபடி செய்ய வேண்டும். கூடங்குளம் அணு உலை போராட்டத்தின்போது போடப்பட்ட வழக்குகளை 1,500 நாள்களுக்கு மேலாகியும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளாமல் இருக்கிறார்கள். கூடங்குளத்தில் செயல்படும் இரு அணு உலைகளையும் இழுத்து மூட வேண்டும். புதிய அணு உலைகளைக் கட்டுவதை உடனே நிறுத்த வேண்டும். இதனை வலியுறுத்தியே போராட வேண்டுமே தவிர, குறுகிய நோக்கத்துடன், வேலை வாய்ப்பு வேண்டும் என்பது போன்ற கோரிக்கைக்காகப் போராடுவது கண்டிக்கத்தக்கது’’ என்றார்.