ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கையெழுத்து இயக்கம்! - தூத்துக்குடியில் அ.ம.மு.க. தொடக்கம்

ஸ்டெர்லைட் ஆலைவிரிவாக்கத்திற்கு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வழங்கிய இசைவாணையை ரத்து செய்ய வேண்டும். மக்களுக்கு எதிரான இந்த ஆலையை மூடிட வலியுறுத்தியும் ஒரு லட்சம் பேரிடம் கையெழுத்து பெறும் இயக்கத்தை  தூத்துக்குடியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் துவக்கி உள்னர். 

signature movement for against sterlite

ஸ்டெர்லைட் ஆலையை மூடிட வலியுறுத்தி ஏற்கெனவே தமிழ்நாடு வணிகர்கள் சங்கங்களின் பேரவை சார்பில் மக்களிடம் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக அரசியல் கட்சிகளில் முதன்முறையாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தினர் கையெழுத்து இயக்கத்தை தொடங்கியுள்ளனர். தெற்கு மாவட்டச் செயலாளர் ஹென்றி தாமஸ் தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் முன்பு இதனை தொடங்கி வைத்தார். முதலில், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன. 

signature movement against sterlite industry

இதுகுறித்து அ.ம.மு.க., தூத்துக்குடி தெற்கு மாவட்டச் செயலாளர் ஹென்றி தாமஸிடம் பேசினோம், ``தூத்துக்குடி சிப்காட் வளாகத்தில் மக்களின் எமனாக இயங்கிக்கொண்டிருக்கிறது ஸ்டெர்லைட் ஆலை. தமிழக அரசு மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தால் விதிக்கப்பட்டவிதிகளை மீறிச் செயல்பட்டு வந்ததால், பல முறை மூடப்பட்டுள்ளது. ஆனால், உச்சநீதிமன்றத்தின் பல கட்டுப்பாடுகளோடு தற்போது இயங்கி வந்தாலும், தூத்துக்குடி சுற்றுவட்டாரச் சுற்றுச்சூழலுக்கு மிகவும் கேடு விளைத்து வருகிறது. இந்த ஆலை வெளியிடும் நச்சுப்புகையால் சுவாசக் கோளாறு முதல் புற்றுநோய் வரை பல பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன. இதே நிலை நீடித்தால் தூத்துக்குடி சுடுகாடாக மாறிவிடும்.

இதனை மூடிட வலியுறுத்தி மக்களும் பல ஆண்டுகளாகப் போராடி வருகின்றனர். இந்த ஆலைக்கு வழங்கப்பட்டுள்ள மாசு தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுச் சட்டத்தின் படி தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் இசைவாணைகள் வரும் மார்ச் 31ம் தேதியுடன் முடிவடைகின்றன. மேலும், ஆலையின் விரிவாக்கத்திற்கும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் இசைவாணை வழங்கப்பட்டுள்ளது. மக்களின் உயிருக்கு உலை வைக்கும் இந்த ஆலைக்குப் புதுப்பித்தல் இசைவாணையை வழங்கக் கூடாது எனவும் விரிவாக்கத்திற்கு வழங்கப்பட்டுள்ள இசைவாணையை ரத்து செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்தக் கையெழுத்து இயக்கத்தை தொடங்கியுள்ளோம். மாவட்டம் முழுவதும் ஒரு லட்சம் மக்களிடம் கையெழுத்து பெற்று மாவட்ட ஆட்சியர், மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், சுற்றுச்சூழல் வாரியத்திற்கு மார்ச் 31ம் தேதிக்குள் சமர்ப்பிக்க இருக்கிறோம். இந்த ஆலையை மக்கள் முழுமையாக எதிர்க்கின்றனர். மக்களாட்சியில் மக்களைவிட முக்கியமானது எதுவுமில்லை. இந்த ஆலையால் இனி யாரும் பாதிக்கப்படக் கூடாது.” என்றார்.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!