வெளியிடப்பட்ட நேரம்: 20:18 (28/03/2018)

கடைசி தொடர்பு:20:18 (28/03/2018)

'பஸ் ஊழியர்களுக்கு 2.44 ஊதிய உயர்வுதான்!’ - உயர் நீதிமன்றம் தீர்ப்பு... தொழிற்சங்கங்கள் அப்பீல்!

பஸ் ஊழியர்

அரசுப் போக்குவரத்துக் கழக பஸ் ஊழியர்களின் ஊதியஉயர்வு தொடர்பாக நியமிக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி பத்மநாபன், 2.44 காரணி அடிப்படையிலான உயர்வு சரியானது என முடிவுசெய்துள்ளார். அவரின் இந்த முடிவை, உயர் நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அமர்வு இன்று ஏற்றுக்கொண்டுள்ளது. இதை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும் என  தொழிற்சங்கங்களின் கூட்டுப் போராட்டக் குழு அறிவித்துள்ளது.

அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர்களின் ஊதிய உயர்வு தொடர்பாக கடந்த ஜனவரியில் நடத்தபட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை. அங்கீகரிக்கப்பட்ட சங்கங்களான தொமுச, சிஐடியு உட்பட 12 சங்கங்களைச் சேர்ந்தவர்கள் இதை ஏற்காமல், போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் அதிமுகவின் அண்ணா தொழிற்சங்கப் பேரவையையும் அதை ஆதரிக்கும் பலரையும் வைத்துக்கொண்டு, ஊதிய உயர்வு உடன்பாடு செய்யப்பட்டதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார். 

தொழிற்சங்கங்கள் கோரியபடி 2.57 காரணி ஊதிய உயர்வை ஏற்கமுடியாது என மறுத்துவிட்ட அரசு, 2.44 காரணி அடிப்படையிலேயே ஊதிய உயர்வை அறிவித்தது. அதை போராடிய சங்கங்கள் ஏற்காமல் போராட்டம் தொடர்ந்தநிலையில், பொங்கல் விழாவுக்காக மாநிலம் முழுவதும் சொந்த ஊருக்குப் போகவேண்டிய மக்கள் என்ன செய்வதெனப் புரியாமல் திகைத்துநின்றனர். பிரச்னை நீதிமன்றத்துக்குச் சென்றது. உடனடியாகப் போராட்டத்தைக் கைவிடும்படி கூறிய நீதிமன்றம், எந்த காரணியின் அடிப்படையில் ஊதிய உயர்வு வழங்கலாம் என்பதை தீர்மானிக்க, ஓய்வுபெற்ற நீதிபதி பத்மநாபனை மத்தியஸ்தராக நியமனம்செய்தது. 

இதன்படி பிப். 9ஆம் தேதி முதல் பேச்சுவார்த்தை நடந்தது. தொழிற்சங்கங்கள் மற்றும் நிர்வாகத்தின் சார்பில் எழுத்துப்பூர்வமான வாதங்கள் முன்வைக்கப்பட்டன. இரு தரப்பு வாதங்களையும் விசாரித்த மத்தியஸ்தர் பத்மநாபன், இன்று காலை உயர் நீதிமன்றத்தில் தன் முடிவை சமர்ப்பித்தார். அதை உயர் நீதிமன்ற நீதிபதிகள் மணிக்குமார், கோவிந்தராஜ் ஆகியோரைக் கொண்ட அமர்வு ஏற்றுக்கொண்டது. 

உயர் நீதிமன்றத்தின் இந்த முடிவை எதிர்த்து மேல்முறையீடு செய்வது என தொழிற்சங்கங்களின் கூட்டுக் குழு தீர்மானித்துள்ளது. 

அகில இந்திய தொழிற்சங்க மையத்தின் மாநிலப் பொருளாளர் கஜேந்திரனிடம் கேட்டபோது, “ ஊதிய உயர்வுக் காரணி 2.57 அடிப்படையிலா 2.44 அடிப்படையிலா என்பதை மத்தியஸ்தர் தீர்மானிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதில் 2.44 காரணி அடிப்படையில்தான் என தீர்ப்பு வந்துள்ளது. இத்துடன், கடந்த செப்டம்பர் 1 முதல்தான் ஊதிய உயர்வு என்றும் சொல்லியிருக்கிறார்கள். பழைய ஊதிய ஒப்பந்தம் காலாவதியான நாள் முதல் புதிய ஒப்பந்தத்தைச் செயல்படுத்தவேண்டும் என்பது எங்கள் கோரிக்கை. இந்த இரண்டுமே போக்குவரத்து ஊழியர்களுக்கு சாதகமானது இல்லை. எனவே, மேல்முறையீடு செய்வது என கூட்டுக் குழு முடிவுசெய்துள்ளது” என்றார். 

இன்று தீர்ப்புக்குப் பின்னர் கூடிய கூட்டுக் குழு,“ தொழில்தகராறு சட்டப் பிரிவு 10(ஏ)-ல் குறிப்பிட்டுள்ளபடி போக்குவரத்துக் கழக நிர்வாகங்களும் வேலைநிறுத்தத்தில் ஈடுபடும் சங்கங்களும் ஓர் ஒப்பந்தம் செய்துகொள்ளவேண்டும். அதன்படி வேலைநிறுத்தத்தை அரசு தடைசெய்தும் தொழிற்சங்கங்களின் கோரிக்கைகள் அனைத்தையும் அரசு தனிநபர் மத்தியஸ்தர்க்கு விடவேண்டும் என்பது சட்ட நடைமுறை. ஆனால் அதைப் பின்பற்றாமல் மத்தியஸ்தரை நியமித்து வெளியிடப்பட்ட ஆணை சரியற்றது எனவும் ஊதிய ஒப்பந்தம் உருவாக்கப்பட்ட முறை அதற்கு உரிய சட்ட நடைமுறைகளைப் பின்பற்றாதது ஆகியவற்றை எதிர்த்து மேல்முறையீடு செய்திருந்தோம். அத்துடன் இப்போதைய தீர்ப்பு உட்பட அனைத்து பிரச்னைகளின் மீதும் மேல்முறையீடு செய்யவுள்ளோம். அரசு சில சங்கங்களுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தில் ஒப்புக்கொண்ட எதையும் முறையாக நடைமுறைப்படுத்தவில்லை. பணியில் உள்ள ஊழியர்களிடம் பிடித்தம்செய்த பணம் இன்னும் முறையான கணக்கில் செலுத்தப்படாமல் உள்ளது. ஓய்வுபெறும்போது வெறும் கையோடு செல்லும் அவலம் தொடர்கிறது” என்று குறிப்பிட்டுள்ளது. 

தொமுச, சிஐடியு, ஏஐடியுசி, எச் எம் எஸ், டிடிஎஸ் எஃப். பிடிஎஸ், டிஎம்டிஎஸ், எம் எல் எஃப், ஏஏ எல் எஃப்,  டிடபிள்யூயூ ஆகிய சங்கங்களின் தலைவர்கள் கையெழுத்திட்டுள்ளனர். 


டிரெண்டிங் @ விகடன்