வெளியிடப்பட்ட நேரம்: 00:00 (29/03/2018)

கடைசி தொடர்பு:00:00 (29/03/2018)

`கூட்டுறவுச் சங்க சார்பதிவாளருக்குக் கொலை மிரட்டல்!’ - சிவகங்கை மாவட்ட அ.ம.மு.க. நிர்வாகி உமாதேவன் மீது வழக்கு

கூட்டுறவுச் சங்க சார்பதிவாளரைத் தாக்கிய புகாரில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சிவகங்கை மாவட்டச் செயலாளர் உமாதேவன் மீது காரைக்குடி போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளர் அலுவலகம்

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி வட்டம் சாக்கோட்டை தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கத்தின் தேர்தல் அதிகாரியாக கலைச்செல்வன் நியமிக்கப்பட்டுள்ளார். இந்தச் சங்கத்தில் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் பதவிக்கு 21 பேர் மனுத்தாக்கல் செய்துள்ளனர். 11 பேர் மட்டுமே தேர்வு செய்யப்பட வேண்டும் என்பதால், அ.ம.மு.கவைச் சேர்ந்தவர்கள் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆளும் அ.தி.மு.கவினர் 11 பேர் நிர்வாகக் குழு உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, அதற்கான பட்டியலும் கூட்டுறவுச் சங்கத்தில் ஒட்டப்பட்டுள்ளது. இதைக் கேள்விப்பட்டு காரைக்குடி கூட்டுறவுச் சங்கங்களின் துணைப்பதிவாளர் அலுவலகத்திற்குத் தனது ஆதரவாளர்களோடு வந்த உமாதேவன், `எப்படி எங்க ஆளுங்க விண்ணப்பத்தை நிராகரிப்பீங்க' என்று கூறி கூட்டுறவு சார்பதிவாளர் கலைச்செல்வனைக் கன்னத்தில் அறைந்ததாகவும், அப்துல் மஜீத், இணைப்பதிவாளர் ஆகியோரை வெட்டி கொலை செய்து விடுவதாகவும் சொல்லி மிரட்டிவிட்டுச் சென்றார்களாம். மேலும், அங்கு பணிபுரியும் ஊழியர்களையும் மிரட்டியதாக காரைக்குடி வடக்குக் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார் கூட்டுறவுச் சங்கப் பதிவாளர் கலைச்செல்வன். இந்தப் புகாரின் பேரில் உமாதேவனைப் போலீஸார் தேடி வருகின்றனர் .

கலைச்செல்வன்

இதேபோன்று நேற்று தேவகோட்டை அருகே கிளாமலை தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில் தலைவர் பதவிக்கு 54 பேர் மனுத்தாக்கல் செய்துள்ள நிலையில், மனுக்களைப் பரிசீலனை செய்ய அதிகாரிகள் யாரும் வராமல் இருந்தனர். தினகரன் அணியைச் சேர்ந்த தேர்போகி பாண்டிக்கு ஆதரவாக மாவட்டச் செயலர் உமாதேவன் வந்து கேட்டதால், அ.தி.மு.கவினருக்கும், அவருக்கும் இடையே வாக்குவாதம் தள்ளுமுள்ளு நடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. தமிழகம் முழுவதும் கூட்டுறவுச் சங்கத் தேர்தல்களில் இதேபோன்ற தில்லுமுல்லு நடைபெறுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க