வெளியிடப்பட்ட நேரம்: 00:30 (29/03/2018)

கடைசி தொடர்பு:00:30 (29/03/2018)

வெளிநாட்டுக் கப்பல் மோதியதில் உயிரிழந்த மீனவர் குடும்பத்திற்கு இழப்பீடு பெற்றுத்தர கோரிக்கை!

 கன்னியாகுமரி கடல் பகுதியில் வெளிநாட்டுக் கப்பல் மோதி உயிரிழந்த ராமநாதபுரம் மீனவர் குடும்பத்துக்கு இழப்பீடு பெற்றுத்தர வேண்டும் என உயிரிழந்த மீனவரின் குடும்பத்தினர் ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.

கப்பல் விபத்தில் பலியான மீனவர் குடும்பத்தினர்
 

ராமநாதபுரம் அருகே அத்தியூத்து ஊராட்சிக்கு உட்பட்ட இரணியன் வலசை கிராமத்தை சேர்ந்த ஆண்டியின் மகன் முருகேசன்(55). மீனவரான இவர் உட்பட 8 மீனவர்கள் மரியநெல்சன் என்பவருக்கு சொந்தமான படகில் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது வெளிநாட்டுக் கப்பல் ஒன்று திடீரென மோதியதில் விசைப்படகு கடலில் மூழ்கியது. இதில் 6 மீனவர்கள் கடலில் மூழ்கி நீண்ட நேர போரட்டத்துக்கு பிறகு அவ்வழியாக வந்த மற்றொரு விசைப்படகு அவர்களைக் காப்பாற்றியதில் கரை சேர்ந்தனர். மீனவர் மைக்கேல் ஜாக்சனை இன்று வரை கண்டுபிடிக்க முடியவில்லை.ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த மீனவர் முருகேசன் கடலில் மூழ்கி உயிரிழந்தார். மோதிய வெளிநாட்டுக் கப்பல் கடலில் மூழ்கிய படகையோ அல்லது கடலில் தத்தளித்த மீனவர்களையோ காப்பாற்றாமல் உடனடியாக தப்பித்து சென்று விட்டது.

இச்சம்பவம் கடந்த ஜனவரி 30-ஆம் தேதி நடந்தது. இதுதொடர்பாக கன்னியாகுமரி மாவட்ட கடலோரக் காவல்குழும போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தனது கணவர் முருகேசனின் மரணத்தினால் தன் குடும்ப வறுமையில் வாடி வருவதாகவும், எனவே தனது குடும்பத்தின் நிலையினை கருத்தில் கொண்டு கணவர் மரணத்துக்கு உரிய இழப்பீடு பெற்றுத்தர மத்திய, மாநில அரசுகள் முயற்சி மேற்கொள்ள வேண்டும் என உயிரிழந்த மீனவர் முருகேசனின் மனைவி நாகம்மாள் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் நடராஜனிடம் கோரிக்கை மனு அளித்துள்ளார்.