`மறுதேர்தலுக்குப் பரிந்துரை செய்த இணைப் பதிவாளர்!’ - 8 மணி நேரப் போராட்டத்தை வாபஸ் பெற்ற எம்.எல்.ஏ-க்கள் | Kanyakumari MLAs roll back their protest over Co-Operative union election issue

வெளியிடப்பட்ட நேரம்: 21:57 (28/03/2018)

கடைசி தொடர்பு:21:57 (28/03/2018)

`மறுதேர்தலுக்குப் பரிந்துரை செய்த இணைப் பதிவாளர்!’ - 8 மணி நேரப் போராட்டத்தை வாபஸ் பெற்ற எம்.எல்.ஏ-க்கள்

முறைகேடு நடந்த கூட்டுறவுச் சங்கங்களுக்கு மறு தேர்தல் நடத்த கமிஷனருக்குப் பரிந்துரை செய்ததை அடுத்து இணைப் பதிவாளர் அலுவலகத்தில் உள்ளிருப்புப் போராட்டம் நடத்திய எம்.எல்.ஏ-க்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

செய்தியாளர்களிடம் பேசிய எம்.எல்.ஏக்கள்

கன்னியாகுமரி மாவட்டத்தில் 114 கூட்டுறவுச் சங்கங்களுக்கான வேட்பு மனுக்கள் கடந்த 26ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. வேட்புமனு பரிசீலனை செய்து அனைத்துக் கூட்டுறவுச் சங்கங்களிலும் இறுதி வேட்பாளர் பட்டியல் நேற்று மாலை 5 மணிக்கு ஒட்டியிருக்க வேண்டும். ஆனால், பல கூட்டுறவுச் சங்கங்களில் வேட்பாளர் பட்டியல் ஒட்டவில்லை. வேட்பாளர் பட்டியல் ஒட்டாத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். முதற்கட்ட தேர்தலில் முறைகேடு நடந்திருப்பதால் அந்தத் தேர்தலை ரத்து செய்துவிட்டு மீண்டும் தேர்தல் நடத்த வேண்டும் என்ற கோரிக்கையோடு தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் சுரேஷ்ராஜன், மனோ தங்கராஜ், ஆஸ்டின், காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் விஜயதரணி, பிரின்ஸ், ராஜேஷ்குமார் ஆகியோர் நாகர்கோவில் கலெக்டர் அலுவலகக் கூடுதல் கட்டடத்தில் செயல்படும் கூட்டுறவுச் சங்கங்களின் இணைப் பதிவாளர் அலுவலகத்துக்கு இன்று காலை 11 மணியளவில் வந்தனர். அங்கு இணைப் பதிவாளர் நடுக்காட்டு ராஜாவிடம் ஏக வசனத்தில் பேசி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அத்துடன் இளநிலை உதவியாளர் சுபாஷ் தாக்கப்பட்டிருக்கிறார்.

உள்ளிருப்பு போராட்டம் நடத்திய எம்.எல்.ஏ.க்கள்

இப்போது அவர் ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைபெற்று வருகிறார். இந்த நிலையில் இன்று மாலை சுமார் 6.30 மணியளவில் கூட்டுறவுச் சங்கங்களின் இணைப் பதிவாளர் நடுக்காட்டு ராஜா, எம்.எல்.ஏ-க்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அதில் எம்.எல்.ஏ-க்கள் குறிப்பிட்ட சுமார் 9 கூட்டுறவுச் சங்கங்களுக்கு மறு தேர்தல் நடத்துமாறு இணைப் பதிவாளர் நடுக்காட்டு ராஜா, தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் தேர்தல் ஆணையத்துக்குக் கடிதம் அனுப்பி அதற்கான நகலை எம்.எல்.ஏ-க்களிடம் கொடுத்தார். இதையடுத்து இரவு 7.30 மணியளவில் எம்.எல்.ஏ-க்கள் உள்ளிருப்புப் போராட்டத்தை கைவிட்டனர். கூட்டுறவுச் சங்கங்களின் இணைப் பதிவாளர் அலுவலகத்தில் சுமார் எட்டு மணி நேரத்துக்கு மேல் நடந்த உள்ளிருப்புப் போராட்டம் முடிவுக்கு வந்தது. இதையடுத்து செய்தியாளர்களிடம் கூட்டாகப் பேசிய எம்.எல்.ஏ-க்கள் கூறுகையில், ``கூட்டுறவுத் தேர்தல் முறையாக நடக்காததால் 6 பேரும்  உள்ளிருப்புப் போராட்டம் நடத்தினோம். தவறு நடந்திருப்பதை உயர் அதிகாரிகளும் ஒப்புக்கொண்டனர். மறு தேர்தலுக்கு கமிஷனருக்குப் பரிந்துரை செய்து, அந்த நகலை எங்களுக்குத் தந்திருக்கிறார்கள். 114 கூட்டுறவுச் சங்கங்களுக்கும் மறு தேர்தல் நடத்தாமல் இருந்தால் அடுத்தகட்ட போராட்டம் நடத்துவோம்" என்றனர்.