வெளியிடப்பட்ட நேரம்: 05:30 (29/03/2018)

கடைசி தொடர்பு:10:26 (29/03/2018)

காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பாக ஹெச். ராஜா-வின் கருத்து-விவசாயிகள் அதிர்ச்சி

``உச்சநீதிமன்ற தீர்ப்பில் காவிரி மேலாண்மை வாரியம் என்ற வார்த்தையே இல்லை” என்ற ஹெச். ராஜா வின் பேட்டியால் விவசாயிகள்   அதிர்ச்சியடைந்தனர். 

ஹெச். ராஜா

நாகை மாவட்டம், தரங்கம்பாடியை அடுத்த திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோயிலில் நடைபெற்ற உறவினர் இல்லத் திருமண விழாவில் பா.ஜ.க. தேசியச் செயலாளர் ஹெச். ராஜா கலந்துகொண்டார். அப்போது, ஹெச். ராஜா செய்தியாளர்கள் சந்திப்பில், ``காவிரி நதிநீர் விவகாரத்தில், உச்ச நீதிமன்ற தீர்ப்பில் காவிரி மேலாண்மை வாரியம் அல்லது ஆணையம் அமைக்க வேண்டும் என்ற வார்த்தைகள் இல்லை. நதிநீர்ப் பங்கீடு குறித்த திட்டம் வேண்டும் என்றுதான் இருக்கிறது. அந்தத் திட்டத்தை மத்திய அரசு விரைவில் அமைக்கும். 50 ஆண்டுக்கால திராவிட ஆட்சியால் தமிழகத்தில் அனைத்துத் துறைகளிலும் ஊழல்கள் நிறைந்து தமிழகம் சீரழிந்துவிட்டது. திராவிடக் கட்சிகளை தமிழகத்திலிருந்து அடியோடு அகற்ற வேண்டும். காவிரி தண்ணீர் தர மறுக்கும் கர்நாடகத்தில் ஆட்சி செய்யும் காங்கிரஸ் கட்சியுடன்தான் தி.மு.க. கூட்டணி வைத்திருக்கிறது. அப்படிப்பட்ட தி.மு.க. பா.ஜ.க.வை விமர்சிக்கத் தகுதியில்லை. சமீபத்தில் நடந்த தி.மு.க. மாநாட்டில் தமிழக நலனுக்காகத் தீர்மானங்கள் இயற்றப்படவில்லை. மத்திய அரசை வசைபாடும் மாநாடாகவே இருந்தது. தி.மு.க.வின் செயல்தலைவர் என்ன பேசுகிறோம் என்பதுகூட தெரியாமல் பேசுகிறார்"  என்று தெரிவித்தார்.  

இதனிடையே ஹெச். ராஜா, தமிழக விவசாயிகள் நலனுக்கு எதிராகப் பேசுவதை அறிந்த மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கோயில் முன்பு திரண்டு ஹெச். ராஜாவைக் கண்டித்துக் கோஷங்கள் எழுப்பினர். கறுப்புக் கொடி காட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து ஏதும் அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் தடுக்க போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.  

நீங்க எப்படி பீல் பண்றீங்க