வெளியிடப்பட்ட நேரம்: 07:00 (29/03/2018)

கடைசி தொடர்பு:12:03 (29/03/2018)

அரசுப் பள்ளி மாணவர்கள் பெற்ற லேலண்ட் இன்னோவேடர் விருது!

 

  அரசுப்பள்ளி மாணவர்கள்

தேசிய, சர்வதேச அளவில் அறிவியல் கண்டுபிடிப்புகளைக் காட்சிப்படுத்தி விருதுபெற்ற அரசுப் பள்ளி மாணவர்கள் பலருக்கு, கரூர் ரோட்டரி ஏஞ்சல் சங்கம், லேலண்ட் இன்னோவேடர் விருது வழங்கிச் சிறப்பித்துள்ளது.

கரூர் மாவட்டம் வெள்ளியணை, அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள், சமுதாயத்திற்குp பயனுள்ள 15 கண்டுபிடிப்புகளைk காட்சிப்படுத்தியதன்மூலம், அந்தப் பள்ளியைச் சேர்ந்த 295 மாணவர்கள், இளம் விஞ்ஞானிகள் சான்று பெற்று சாதனை படைத்துள்ளனர். நடப்புக் கல்வியாண்டில், சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற சர்வதேச அறிவியல் பெருவிழாவில், ஒன்பதாம் வகுப்பு ஆங்கில வழியில் பயிலும் ஹரிஹரன், ஹரிகிஷோர், சரண், தீபக் கண்ணன், லோகேஷ் ஆகிய மாணவர்கள் சமூகப் பார்வையில் நீர் மேலாண்மைகுறித்த, குடகனாறு அணையிலிருந்து வெள்ளியணை குளத்திற்கு நீர் வரும் வழித்தடங்களை ஆறு மாத காலம் ஆய்வு செய்து, அந்தத் திட்ட அறிக்கையைச் சமர்ப்பித்து, மத்திய அரசின் `அறிவியல் கிராமம்' விருது பெற்றனர். 

 
 அரசுப்பள்ளி மாணவர்கள்

`சூழலியல் காக்கும் கழிப்பறை ' என்ற கண்டுபிடிப்பிற்காக, இன்ஸ்பயர் விருதில் தங்கப்பதக்கம் வென்றார், 12-ம் வகுப்பு பயிலும்                ம.ஹரிஹரன் என்ற மாணவர். இதே பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு பயிலும் மணிகண்டன், சிவிஸ், மனோஜ், சதிஷ்குமார், வேல்மகேந்திர சாமி ஆகிய மாணவர்கள்,  `பாதை மாறிய தேனீக்களால்  பாதித்த விவசாயம் ' என்ற ஆய்வை  சென்னை ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா நிறுவனம் நடத்திய தேசிய அளவிலான அறிவியல் கண்காட்சியில் காட்சிப்படுத்தி, சிறந்த  20 படைப்புகளில் ஒன்றாகத்  தேர்வுபெற்று,  `இளம் விஞ்ஞானி ' சான்று பெற்றது என, ஆக மொத்தம் 11 மாணவர்களையும் பாராட்டும் விதத்தில், கரூர் ரோட்டரி ஏஞ்சல் சங்கம், வெள்ளியணைப் பள்ளி மாணவர்கள் மற்றும் வழிகாட்டி ஆசிரியர் தனபால் ஆகியோருக்கு, `லேலண்ட் இன்னோவேடர்' விருது வழங்கிக் கௌரவித்தது .

இந்த விழா, பள்ளித் தலைமை ஆசிரியர் தமிழரசன் தலைமையில் நடந்தது. கரூர் ரோட்டரி ஏஞ்சல் சங்க மண்டல ஒருங்கிணைப்பாளர் எஸ்.சிதம்பரம் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, மாணவர்களுக்கு விருது வழங்கிப் பாராட்டினார். கரூர் ரோட்டரி ஏஞ்சல் சங்கம், மாவட்ட முதல் பெண்மணி லீலாவதி, தலைவர் நிருபமா, செயலாளர் பிரதீபா, திட்டத் தலைவர் வசந்தாமணி,முன்னாள் தலைவர் கீதா ஆகியோர் இளம் விஞ்ஞானி மாணவர்களை வாழ்த்திப் பேசினார்கள். மாணவர்களது அறிவியல் படைப்புகளை அனைவரும் பார்வையிட்டுப் பாராட்டினார்கள் .