வெளியிடப்பட்ட நேரம்: 08:00 (29/03/2018)

கடைசி தொடர்பு:08:20 (29/03/2018)

கரூர் பசுபதீஸ்வரர் கோயிலில் திருக்கல்யாண உற்சவம்!

  திருக்கல்யாண உற்சவம்

கரூரில், பிரசித்திபெற்ற பசுபதீஸ்வரர் கோயிலில், பங்குனி உத்திரப் பெருவிழாவை முன்னிட்டு திருக்கல்யாண உற்சவ விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது. இந்த விழாவில் கலந்துகொண்டால் மாங்கல்ய பாக்கியம் கிட்டும் என்பதால், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம்செய்தனர்.

கரூர் பேருந்துநிலையத்தை ஒட்டியிருக்கிறது, பிரசித்திபெற்ற பசுபதீஸ்வரர் கோயில். இந்தக் கோயிலில், பங்குனி உத்திரப் பெருந்திருவிழா கோலாகலமாக நடைபெற்றுவருகிறது. கடந்த 22-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய இந்த விழா, அடுத்த மாதம்    4-ம் தேதி வரை மொத்தம் 13 நாள்கள் நடைபெறும். அந்த வகையில், விழாவின் ஏழாம் நாள் நிகழ்ச்சியான நேற்று (28.03.2018), ரிஷப லக்கனத்தில் சுவாமியின் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. அதற்கு முன், உற்சவ மூர்த்தி அலங்காரம் செய்யப்பட்டு,  ஊர்வலமாகக் கொண்டுவரப்பட்டது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம்செய்தனர்.


  திருக்கல்யாண உற்சவம் -பக்தர்கள்

தொடர்ந்து 13 நாள்கள் வரை நடைபெறவிருக்கும் இந்தத் திருக்கல்யாண உற்சவ விழாவின் ஏனைய நாள்களில், சூர்ய பிரபையில் சுவாமி அம்பாள் திருவீதி உலா, நந்தி வாகனம், பூத வாகனம், பூதகி வாகனம், ரிஷப வாகனம், திருக்கயிலாய வாகனம், பல்லக்கு வாகனம், யானை வாகனம் மற்றும் குதிரை வாகனம் உள்ளிட்ட வாகனங்களில் சுவாமி அம்பாள் உற்சவ மூர்த்திகளின் திருவீதி உலாக்கள் வெகுசிறப்பாக நடைபெற உள்ளன.
 
 ``இங்கே, உற்சவ மூர்த்தி, அம்பாளின் திருக்கல்யாணத்தைப் பார்ப்பது பெரும் பேறு. அந்தப் பேற்றை நாங்கள் அடைந்தோம். அதோடு, இந்தத் திருக்கல்யாண நிகழ்ச்சியைக் காண நேர்ந்தால், மாங்கல்ய பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம். அதனால், ஏராளமான திருமணம் ஆகாத பக்தர்கள் இந்த விழாவில் திரளாகக் கலந்துகொண்டனர்" என்றார்கள் பக்தர்கள்.