விராலிமலையில் அலங்காநல்லூர் - விஜயபாஸ்கரின் அரசியல் ஜல்லிக்கட்டு

தனது சொந்தத் தொகுதியான விராலிமலையில், இன்று அமைச்சர் விஜயபாஸ்கர் நடத்தும் மெகா ஜல்லிக்கட்டு, அவரின் செல்வாக்கை நிரூபிப்பதற்காக நடத்தப்படுவதாகச் சொல்லப்படுகிறது. அதற்கான அரசியல் நகர்வுதான், சற்றுமுன் தொடங்கியிருக்கும் ஜல்லிக்கட்டு.


அரசியல் ஜல்லிக்கட்டு


புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில், இன்று காலை 7.20 மணிக்கே தொடங்கியிருக்கும் பிரமாண்டமான ஜல்லிக்கட்டை  பார்ப்பதற்கென்றே  தமிழக அமைச்சர்கள் ஒவ்வொருவராக மேடையில் வந்து அமர ஆரம்பித்துவிட்டார்கள். `தமிழர்களின் பாரம்பர்ய போட்டிக்கு உங்களை அன்புடன் அழைக்கிறேன்' என்று விஜயபாஸ்கரே பேசி, அவை எஃப்எம்-களில் நேற்று முழுக்க ஒலிபரப்பாகிக்கொண்டிருந்தது. தனியார் சேனல்களிலும் லோக்கல் டி.வி-க்களிலும் விளம்பரங்களும் கொடுத்திருந்தார். நியூட்ரினோ, ஸ்டெர்லைட், காவிரி நதிநீர் மேலாண்மை வாரியம் உள்ளிட்ட தலைபோகிற தமிழ்நாட்டுப் பிரச்னைகளுக்கு நடுவே, தனது தனிப்பட்ட அரசியல் பலத்தைக் காட்டுவதற்கென்றே விஜயபாஸ்கர் நடத்தும் இந்த ஜல்லிக்கட்டு, அவர் மீதான கடுமையான விமர்சனங்களை முன் வைத்திருக்கிறது. அவற்றைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல், இந்த ஜல்லிக்கட்டுப் போட்டியை புகழ்பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு இணையாக நடத்துவதில் அமைச்சர் விஜயபாஸ்கர் தீவிரம்காட்டிவருவதாகக் கூறப்படுகிறது

இந்தப் போட்டியில், மாடுபிடி வீரர்களோ, பார்வையாளர்களோ மாடு முட்டி  இறந்துவிடக் கூடாது. அதனால் தனது பெயர் கெட்டுவிக் கூடாது'என்ற டென்ஷனுடன் சக அமைச்சர்களுடன் மேடையில்  அமர்ந்திருக்கிறார். நேரடி ஒளிபரப்பு செய்ய பெரும்பாலான தனியார் சேனல்கள் வந்துவிட்டன. இதில், புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர், எஸ்.பி., திருச்சி மாநகர  ஐ.ஜி உள்ளிட்ட அரசு அதிகாரிகள் அத்தனைபேரும் கலந்துகொண்டிருக்கிறார்கள். 500-க்கும் மேற்பட்ட  போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். தலைசிறந்த  சுமார் 2000-காளைகள், பக்கத்து மாவட்டங்களிலிருந்து வந்து இந்தப் போட்டியில் கலந்துகொள்கின்றன. அவற்றுக்கான `புறவாடி' , சகல கெடுபிடிகளுடன் அமைக்கப்பட்டிருக்கிறது.

500-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் களத்தில் இருக்கிறார்கள். பரிசுப் பொருள்கள் மலைபோல குவிக்கப்பட்டிருக்கின்றன. சிறந்ததாகத்  தேர்ந்தெடுக்கப்படும்  காளையின் உரிமையாளருக்கு மாருதி காரும், சிறந்த  மாடுபிடி வீரர்களாகத் தேர்வுசெய்யப்படுகிறவர்களுக்கு ராயல் என்ஃபீல்டு பைக்கும், ஐந்து ஹீரோ ஹோண்டா பைக்குகளும் தனி மேடையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இது தவிர, ஜிம்மிஜிப்,ஹெலிகேமரா போன்றவைகளும் இந்தப் போட்டியைப் படம்பிடிக்க சுற்றிச் சுழல்கின்றன. விராலிமலைத் தொகுதியில், சற்று சரிந்திருக்கும் தனது செல்வாக்கைத் தூக்கி நிறுத்த விஜயபாஸ்கர்  ஜல்லிக்கட்டுப் போட்டியை  கையில் எடுத்திருக்கிறார் என்று வியக்கிறார்கள். " மக்களின் மனதுக்கு மிகவும் நெருக்கமான ஜல்லிக்கட்டுப் போட்டியை நடத்துவதன்மூலம் தனக்கு எதிராகச் செயல்படுகிறவர்களையும் எதிர்க்கட்சிப் பிரமுகர்களையும் வாயடைக்கவைத்துவிட்டார். அத்துடன், அ.தி.மு.க-விலும் தனக்கான இடத்தை நிரந்தரமாக்கிக்கொள்ள இந்த ஜல்லிக்கட்டு பெரிதும் உதவும் " என்கிறார்கள்.


 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!