``பொய் புகார் சொல்ல வேண்டிய அவசியம் எனக்கில்லை!'' - நாசர் அலி மீது புகார் கொடுத்த ரொபினா

ராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினராகவும், அ.தி.மு.க சிறுபான்மைப் பிரிவின் மாநிலச் செயலாளராகவும் இருப்பவர், அன்வர் ராஜா. எம்.ஜி.ஆர் கட்சி தொடங்கிய காலத்திலிருந்தே அ.தி.மு.க-வில் இருப்பதால், கட்சிக்குள் முக்கியமான சீனியராக வலம்வருபவர். ஜெயலலிதாவிடமும் இவருக்குத் தனி மதிப்பு உண்டு. இதனால்தான், அன்வர் ராஜா தனது 70-வது வயதிலும் மூன்றாவது திருமணம் செய்துகொண்டதை ஜெயலலிதா பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. இந்த நிலையில், `அன்வர் ராஜாவின் இரண்டாவது மனைவியின் இரண்டாவது மகனான நாசர் அலி, என்னைத் திருமணம் செய்துகொள்வதாக ஏமாற்றிவிட்டு, வேறு ஒருவரைத் திருமணம் செய்துகொள்ள இருக்கிறார். இதைத் தடுக்க வேண்டும்' எனச் சென்னையைச் சேர்ந்தவரான ரேடியோ ஜாக்கி பிரபல்லா சுபாஷ் என்கிற ரொபினா, சென்னை கமிஷனரிடம் புகார் அளித்தார். 

பெண் ரேடியோ ஜாக்கி ரொபினோ

பிறகு, ராமநாதபுரம் வந்திருந்த ரொபினா, மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடமும் இதே புகாரினைக் கொடுத்தார். நாசர் அலியின் திருமணம் நடக்கும் காரைக்குடி, சிவகங்கை மாவட்டத்தில் வருகிறது. எனவே, அங்கே சென்று புகார் கொடுக்குமாறு கூறியுள்ளனர். அன்று இரவே காரைக்குடி சென்ற ரொபினா, டி.எஸ்.பி கார்த்திகேயனிடம் புகார் அளித்தார். இந்நிலையில், மறுநாள் காலை காரைக்குடியில் உள்ள காலேஜ் பள்ளிவாசலில் நாசர் அலிக்கும் ஹசீனா என்பவருக்கும் திட்டமிட்டபடி திருமணம் நடப்பதை அறிந்து அதிர்ந்தார். அங்கே சென்று ஜமாத் நிர்வாகிகளிடமும், ஹசீனாவின் தந்தையிடமும் தான் ஏமாற்றப்பட்டது குறித்து முறையிட்டுள்ளார் ரொபினா. அவரைச் சமாதானப்படுத்துவதற்காக, `பள்ளிவாசலில் இந்தத் திருமணம் நடக்காது' என ஜமாத்தில் கூறியுள்ளனர். 3 மணி நேரத்துக்கும் மேலாக இந்தப் பிரச்னை நடந்த நிலையில், காரைக்குடியில் உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் நாசர் அலி-ஹசீனா திருமணம் நடந்துமுடிந்துள்ளது. 

இதனை அறிந்த ரொபினா, அந்த ஹோட்டலுக்குள் சென்றபோது தடுக்கப்பட்டார். பூட்டிய வெளிக்கதவின் மீது ஏறி, உள்ளே செல்லமுயன்றவரைச் சமாதானப்படுத்திய பெண் போலீஸார், `திருமணம் முடிந்துவிட்டது. இனி இங்கே முறையிட்டு ஏதும் நடக்கப்போவதில்லை. சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கச் செல்லுங்கள்' என அனுப்பிவிட்டனர்.  பிரச்னை குறித்து விசாரிக்க பாதிக்கப்பட்ட ரொபினோவைச் சந்தித்தோம்.

``நாசர் அலி என்னை ஏமாற்றிவிட்டு வேறு திருமணம் செய்துகொள்வதை அறிந்ததும், தமிழக முதல்வரிடம் சென்று முறையிட்டேன். அவர் சொன்னபடி, கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்தேன். கமிஷனர் ராமநாதபுரத்தில் புகார் கொடுக்கச் சொன்னார். அங்கே சென்றும் புகார் கொடுத்தேன். ஆனால், அவர்கள் காரைக்குடிக்குச் சென்று புகார் கொடுக்கச் சொன்னார்கள். அங்கும் சென்று புகார் கொடுத்தேன். காரைக்குடி ஜமாத் தலைவரோ, `இங்குள்ள எந்தப் பள்ளிவாசலிலும் இந்தத் திருமணம் நடக்காது' என போலீஸ் மற்றும் பத்திரிகையாளர் முன்னிலையிலேயே கூறினார். ஆனால், தனியார் ஹோட்டலில் திருமணத்தை ரகசியமாகச் செய்து வைத்துள்ளார் அன்வர் ராஜா. இவ்வாறு செய்வது இஸ்லாத் சட்டத்துக்கு முரணானது. 

நானும் நாசர் அலியும் ஒன்றாக இருந்த புகைப்படங்கள், சினிமா தொடர்பான நிகழ்ச்சிகளில் எடுக்கப்பட்டதாகவும், நான் பணம் ஏதும் கொடுக்கவில்லை என்றும் அன்வர் ராஜா மறுத்துள்ளார். நான் சொல்வது பொய் என்றால், காரைக்குடியில் போலீஸார் விசாரணைக்கு அழைத்தபோது என்னை நேரில் சந்தித்துப் பேசியிருக்கலாமே. அதைவிட்டு யாருக்கும் தெரியாமல் ரகசியமாக திருமணத்தை நடத்தியது நியாயமா? இவரது சினிமா விழாக்களில் அன்வர் ராஜா குடும்பத்தினர் இப்படித்தான் பங்கேற்பார்களா? நானும் நாசர் அலியும் எந்தெந்த ஹோட்டல்களில் தங்கினோம், எந்தெந்த தியேட்டர்களுக்குச் சென்றோம் என்ற விவரங்களைச் சொல்ல தயார். அங்குள்ள சி.சி.டி.வி கேமரா காட்சிகளை ஆய்வுசெய்ய அன்வர் ராஜா தயாரா? நாசர் அலிக்காகப் பலரிடமும் பேசி நான் கடன் வாங்கிக்கொடுத்ததுக்குப் பலர் சாட்சியாக உள்ளனர். நாசர் அலியின் வங்கிக் கணக்குப் புத்தகமும் சாட்சியாக உள்ளது. இவற்றை எல்லாம் ஆய்வு செய்தால், நான் நாசர் அலிக்குக் கொடுத்த பணத்தின் கணக்கு வெளியே தெரியும். தனியார் ரேடியோவில் தொடர்ச்சியாக 50 மணி நேரம் நிகழ்ச்சி வழங்கி, உலகச் சாதனை படைத்த பெண் நான். பல்வேறு வகைகளில் பாதிக்கப்பட்ட பலருக்கும் உதவிகளைப் பெற்றுத் தந்துள்ளேன். அப்படிப்பட்ட நான், யார் மீதும் பொய் புகார் சொல்லவேண்டிய அவசியமில்லை. எனது புகார் மீது காரைக்குடி போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதனையும் தாண்டி, தனது அரசியல் அதிகாரத்தால், மகனுக்கு ரகசியமாகச் திருமணத்தை முடித்துவிட்டார். இதனை சட்டரீதியாகச் சந்தித்து நியாயம் கிடைக்கப் போராடுவேன்'' என்றார் ரொபினா. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!