வெளியிடப்பட்ட நேரம்: 09:30 (29/03/2018)

கடைசி தொடர்பு:09:30 (29/03/2018)

எம்.எல்.ஏ-க்கள் மீது பெண்கள் வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு

கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகத்தில், பெண் அதிகாரியைத் திட்டிய நான்கு எம்.எல்.ஏ-க்கள் மீது பெண்கள் வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

எம்.எல்.ஏ

கன்னியாகுமரி மாவட்டத்தில் கூட்டுறவுச் சங்கங்களுக்கு நடந்த முதற்கட்ட தேர்தலில் வேட்பாளர்கள் பட்டியல் குறிப்பிட்ட நேரத்தில் ஒட்டவில்லை, பலரை வேட்பு மனுத் தாக்கல் செய்யவிடவில்லை எனக் குற்றச்சாட்டு எழுந்ததையடுத்து, முதற்கட்ட தேர்தலை ரத்து செய்து மறு தேர்தல் நடத்த வேண்டும் எனக் குமரி மாவட்டத்தின் ஆறு எம்.எல்.ஏ-க்களும் கோரிக்கை விடுத்தனர். அத்துடன் தி.மு.க. எம்.எல்.ஏ-க்கள் சுரேஷ்ராஜன், ஆஸ்டின், மனோதங்கராஜ், காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் விஜயதரணி, பிரின்ஸ், ராஜேஷ்குமார் ஆகியோர் கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகத்தில் நேற்று காலை 11 மணிமுதல் இரவு 7.30 மணிவரை உள்ளிருப்புப் போராட்டம் நடத்தினர். எம்.எல்.ஏ-க்கள் இணைப்பதிவாளர் அலுவலகத்துக்குச் சென்றதும் அங்கிருந்த இணைப்பதிவாளர் நடுக்காட்டு ராஜா எழுந்து நின்று மரியாதை கொடுக்கவில்லை எனக்கூறி எம்.எல்.ஏ-க்கள் ஒருமையில் பேசியதுடன் கடுமையாக சில வார்த்தைகளைப் பிரயோகித்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

உள்ளிருப்பு போராட்டம்

இந்த நிலையில் தி.மு.க. எம்.எல்.ஏ-க்கள் சுரேஷ்ராஜன், மனோதங்கராஜ், காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் பிரின்ஸ், ராஜேஷ் குமார் உட்பட 11 பேர் மீது இணைப்பதிவாளர் நடுக்காட்டு ராஜா நேசமணி நகர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்தார். ``எம்.எல்.ஏ-க்கள் கெட்டவார்த்தைகளால் என்னைத் திட்டினர். கும்பலாக வந்து பணிசெய்யவிடாமல் தடுத்தனர், அலுவலக நாற்காலிகளைப் போட்டு உடைத்ததால் 8 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பொருள்கள் சேதமடைந்துள்ளது, துணைப்பதிவாளர் பிரியதர்ஷினியை தகாதவார்த்தைகளால் பேசியதுடன் இளநிலை உதவியாளர் சுபாசை தாக்கி அவரைச் செருப்பால் அடித்தனர். கூட்டுறவுச் சங்கத் தேர்தலை ரத்துசெய்யும்படி மிரட்டினர்" என அந்தப் புகாரில் கூறப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரித்த போலீஸார் எம்.எல்.ஏ-க்கள் சுரேஷ்ராஜன், மனோதங்கராஜ், பிரின்ஸ், ராஜேஷ்குமார் உட்பட 10 பேர் மீது பெண்கள் வன்கொடுமைச் சட்டம், கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட ஐந்து பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்ட விஜயதரணி மற்றும் ஆஸ்டின் ஆகியோர் ஆவேசமடையாமல் அமைதியாக இருந்ததால் வழக்கிலிருந்து தப்பினர்.