வேல்முருகனின் சுங்கவரி மறுப்புப் போராட்டம்! #WeWantCMB

வேல்முருகன்


காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து, முதல் கட்டமாக தமிழகத்தில் உள்ள அனைத்து சுங்கச்சாவடிகளிலும் சுங்கவரி தர மறுக்கும் போராட்டம், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில், வரும் 01.04.2018 அன்று  நடைபெற உள்ளது. 

இதுதொடர்பாக தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் கூறுகையில், ''காவிரி மேலாண்மை வாரியம்தான் அமைக்க வேண்டும் என்பதில் தமிழ்நாடு தெளிவாகவும் உறுதியாகவும் இருக்கிறது. இந்த நிலையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால், அதன்பிறகு டெல்லிக்கு தமிழ்நாட்டில் வேறென்ன வேலை இருக்க முடியும் என்று கேட்கிறோம். அப்படி, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காதபட்சத்தில், டெல்லிக்கு இங்கு எந்த வேலையும் இல்லை. அதனால், அதை நடைமுறைப்படுத்தும் வேலையில் இறங்குவோம். அதன் தொடக்கமாக, இங்கு ஒரு ராப்பகல் கொள்ளையே நடத்திக்கொண்டிருக்கும் ஒன்றிய அரசின் சுங்கச்சாவடிகள், ஏப்ரல் 1 -ம் தேதி முதல் சுங்கவரி தர மறுக்கும் போராட்டம் நடத்துவோம் என எச்சரிக்கிறோம். இதற்காக அல்லாமலும் இந்தச் சுங்கச்சவடிகளை அப்புறப்படுத்தவேண்டியதற்குக் காரணங்கள் உண்டு.

தமிழ்நாட்டையே தன் ஆதிக்கத்தின் கீழ் வைத்து கசக்கிப் பிழிவதற்கும், சூறையாடுவதற்குமான அத்தாட்சிதான் இந்த சுங்கச்சாவடிகள் நடத்திவரும் ராப்பகல் கொள்ளை. மொத்தம் 45 சுங்கசாவடிகள் தமிழ்நாட்டில். ஆண்டுதோறும் சுழற்சி அடிப்படையில் செப்டம்பர், ஏப்ரல் மாதங்களில் கட்டணம் உயர்த்தப்படுகிறது. சாலைகளின் தன்மையைப் பொறுத்து 7 முதல் 10 சதவிகிதம் வரை கட்டண உயர்வு. சாலைப் பராமரிப்புக்கென்றுதான் ஆண்டு தோறும் இந்தக் கட்டண உயர்வு. ஆனால், எந்தப் பராமரிப்பும் கிடையாது. சுங்கச்சாவடிகளில் ஆம்புலன்ஸ் கண்டிப்பாக இருக்க வேண்டும் என்பது விதி. ஆனால், எந்தச் சாவடியிலுமே அது கிடையாது. குடிநீர் கழிப்பறை, போதிய அளவு மின்விளக்குகளாவது உண்டா என்றால் அவையும் இல்லை. இப்படி காட்டுமிராண்டித்தனமான கார்ப்பரேட் கொள்ளை நடப்பதை நாகரிகமும் மனிதாபிமானமும் உடைய மனிதர்களால் எப்படி பார்த்துக்கொண்டிருக்க முடியும்? 

மகாராஷ்டிர மாநிலம்தான் முதலில் இதற்கு எதிர்வினையாற்றியது. மகாராஷ்டிராவில் மாநிலமெங்கும் அல்ல, மும்பையிலுள்ள ஒரு 5 சுங்கச்சாவடிகளில் மட்டும் 2012ல் எடுத்த கணக்குப்படி, ஒப்பந்ததாரர் செய்த முதலீடு ரூ.2,100 கோடி; 2017-க்குள் அவர் வசூலித்த சாலை வரிமூலம் ரூ.14, 524 கோடி. அதாவது, அவர் அடித்த கொள்ளை ரூ.12,424 கோடி. இந்த ராப்பகல் கொள்ளை, ராஜ் தாக்கரேவின் மகாராஷ்டிர நவநிர்மாண் சேனா அந்த சுங்கச்சாவடிகளைத் தாக்கி சூறையாடியதையடுத்தே வெளிச்சத்துக்கு வந்தது. நவநிர்மாண் சேனா என்பது சிவசேனாவிலிருந்து பிரிந்து எழுந்த கட்சி என்பதை நினைவில் கொள்க.

இந்த ராப்பகல் கொள்ளையிலும் அதிபயங்கரம் என்னவென்றால், காலக்கெடு முடிந்த பின்னரும் இந்த வசூல் கொள்ளை தொடர்வதுதான். உதாரணத்திற்கு, அதே மும்பையில் காம்கோன்– ஜல்னா புறவழிச்சாலை; மும்பை– புனே அதிவிரைவு நெடுஞ்சாலை ஆகியவற்றில் காலக்கெடு முடிந்த பின்னரும் வரி வசூல் நடந்தது. அப்போது, சாலைப் பராமரிப்பு 60 சதவிகித அளவுக்கே நடந்திருந்தது. ஆனால், பல்லாயிரம் கோடிகள் சுருட்டப்பட்டிருந்தது.

 தமிழக வாழ்வுரிமைக் கட்சி, தமிழ்நாட்டு சுங்கச்சாவடிகளில் பல முறை போராட்டங்களை நடத்தியுள்ளது. நம் தமிழ்நாட்டிலும் கிருஷ்ணகிரி - தொப்பூர் நாற்கர சாலைக்கு செலவிட்டது ரூ.160 கோடி. இதில், சராசரியாக மாதம் வசூலாகும் சுங்கவரி, ரூ.3.5 கோடி. 25 ஆண்டுகளுக்கான ஒப்பந்தம் இது. அப்படியென்றால் கொள்ளையை கணக்கிட்டுக்கொள்ளுங்கள். சென்னை மாநகரத்தில் சட்டத்திற்குப் புறம்பாக சில சுங்கச்சாவடிகள் செயல்பட்டுவருகின்றன. தமிழகத்தின் சில பகுதிகளில், குறுகிய தொலைவில் சுங்கச்சாவடி சட்டதிற்குப் புறம்பாகச் செயல்பட்டுவருகிறது.  காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அன்பார்ந்த  தமிழக மக்களே,  ஏப்ரல் 1-ம் தேதி  முதல் சுங்கவரி தர மறுக்கும் போராட்டத்தைத் தொடங்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இதில், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் அனைத்து நிலை பொறுப்பாளர்களும் போராட்டத்தில் தவறாமல் பங்கேற்க வேண்டும்'' என்று கூறியுள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!