வெளியிடப்பட்ட நேரம்: 15:00 (29/03/2018)

கடைசி தொடர்பு:15:00 (29/03/2018)

ஆக்கிரமிக்கப்படும் ஓடை.. காற்றில் பறக்கும் நீதிமன்ற உத்தரவு!

நீர்நிலை ஓடை

ஈரோடு அடுத்த கதிரம்பட்டியில் நீதிமன்ற உத்தரவை மீறி ஓடையில் சாலை போடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால் அந்தப் பகுதி மக்கள் கொந்தளிப்பில் உள்ளனர்.

2015-ம் ஆண்டு டிசம்பர் 16-ம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் `தமிழ்நாட்டில் உள்ள எந்த நீர்நிலைப் பகுதிகளிலும் அனுமதியின்றி எந்தவிதப் பணிகளையும் மேற்கொள்ளக் கூடாது’ என உத்தரவு பிறப்பித்தது. மேலும், நீர்நிலைப் பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்பை கண்டறிந்து அவற்றை அகற்றுமாறும் உத்தரவிட்டது.

உயர் நீதிமன்றம், இந்த உத்தரவைப் பிறப்பித்ததற்கு மூலகாரணமாக இருந்தது ஈரோடு மாவட்டம் கதிரம்பட்டியைச் சேர்ந்த சண்முக சுந்தரம் என்பவர் தொடுத்த வழக்குதான். இந்த வழக்கின் அடிப்படையில்தான் உயர் நீதிமன்றம் மேற்கூறிய தீர்ப்பினை வழங்கியது. இந்த நிலையில், வழக்குத் தொடுக்கப்பட்ட ஈரோடு மாவட்டத்திலேயே நீர்நிலைகளில் இன்னும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாமல் இருக்கிறது.

இதுசம்பந்தமாகப் பேசிய இயற்கை வளம் மற்றும் பெரும்பள்ள ஓடைப் பாதுகாப்பு நலச் சங்கத் தலைவர் சண்முக சுந்தரம், ``நீர்நிலைப் பகுதிகளில் அனுமதியின்றி எந்தவித அமைப்புகளும் ஏற்படுத்தக் கூடாது என சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், ஈரோடு மாவட்டம், கதிரம்பட்டி கிராமத்தில் உள்ள சர்வே எண் 71, 72, 106, 117 ஆகிய நீர் நிலைகளில் (ஓடை) சட்டத்திற்குப் புறம்பாகச் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

ஏற்கெனவே இந்தப் பகுதியில் நீர் நிலைகளை ஆக்கிரமித்து அரசுக்குச் சொந்தமான பவர் ஹவுஸ் மற்றும் ரியல் எஸ்டேட் வீடுகள் கட்டப்பட்டிருக்கின்றன. நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தும், நீர்நிலைகளில் இருக்கும் அந்த ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் இருந்த நிலையில், மார்ச் 27-ம் தேதி இரவிலிருந்து ஆக்கிரமிப்பு பகுதிக்குச் செல்லும் சாலையில் மண் கொட்டி, ஜல்லிக் கற்களை நிரவி சாலை அமைக்கும் பணி வெகு ஜோராக நடைபெற்றுவருகிறது. கதிரம்பட்டி மணல்மேடு பகுதியிலிருந்து சுமார் 3 கி.மீ நீளத்திற்கு இந்தச் சாலை அமைக்கப்பட்டு வருகிறது.

நீர்நிலை

நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து 4 ஆண்டுகளாகியும் ஆக்கிரமிப்பை அகற்ற மாவட்ட நிர்வாகம் எந்தவொரு நடவடிக்கையையும் எடுக்கவில்லை. இந்தநிலையில், ஓடைகளை ஆக்கிரமித்துள்ள ரியல் எஸ்டேட் அதிபர்களின் வசதிக்காக இரவுப் பகலாக சாலை போடப்பட்டு வருகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடைபெற்றுவரும் சாலைப் பணிகளைத் தடுத்த நிறுத்த வேண்டும்” என்றார்.