காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க இதையல்லவா செய்திருக்க வேண்டும்..? கொந்தளிக்கும் துரை முருகன்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க இன்றே கடைசி நாள் என்பதால், இதுவரை அதுபற்றி தமிழக அரசு எந்த அழுத்தமும் தரவில்லை என துரைமுருகன் குற்றம்சாட்டியுள்ளார்.

துரை முருகன்

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதுக்கு உச்சநீதிமன்றம் அறிவித்த கெடு இன்றுடன் முடிவடைகிறது. இதுவரையில் வாரியம் அமைப்பதுக்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனப் பலரும் குற்றம் சாட்டி வருகின்றனர். இன்று தமிழக அரசு சார்பில் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காதது குறித்தும் தமிழக அரசின் ஆலோசனைக்கூட்டம் குறித்தும் செய்தியாளர்களிடம் பேசிய திமுக முதன்மைச் செயலாளர் துரை முருகன்,  ``டெல்லிக்குச் சென்றுவிட்டு பிரதமரைச் சந்திக்க முடியவில்லை நீர்வளத்துறை அமைச்சரைச் சந்தித்தோம் எனத் தமிழக முதல்வர் கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது, டெல்லியில் உங்களுக்கே மரியாதை இல்லையென்றால் எங்களை எப்படி மதிப்பார்கள், ஒரு மாநிலத்தின் முதல்வருக்கு இருக்கும் மரியாதை இதுதானா? காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது பற்றி இதுவரை முதல்வர் பிரதமரை ஒருமுறை கூட சந்திக்கவில்லை, முதல்வர் மற்றும் துணை முதல்வர் இருவரும் டெல்லி சென்று நான்கு நாள்கள் காத்திருந்தால் பிரதமர் தானாக வந்து சந்தித்திருப்பார். ஆனால், அதை ஏன் தமிழக அரசு செய்யவில்லை? மத்திய அரசுக்கு பயந்து நடுங்கும் அரசாக தமிழக அரசு உள்ளது. இவர்கள் மத்திய அரசை எதிர்த்தால் நாளை காலையிலேயே இவர்களின் பதவி பறிக்கப்படும் என அஞ்சுகிறார்கள்.

இதுவரை காவிரி மேலாண்மை விவகாரம் குறித்து வாய்திறக்காத மாநில அரசு இன்று அதற்கான கால அவகாசம் முடிய உள்ள நிலையில் உச்சநீதிமன்றம் அறிவித்த 'ஸ்கீம்’ என்ற வர்த்தையின் அர்த்தம் கேட்கிறது இது எந்த வகையில் நியாயமானது எனத் தெரியவில்லை, வாரியம் அமைக்கவில்லையெனில் தற்கொலை செய்துக்கொள்வோம் என நாடாளுமன்ற அதிமுக உறுப்பினர் நவநீத கிருஷ்ணன் கூறியிருப்பது வேடிகையான விசயம், அப்படி போராட வேண்டும் என்றால் அனைத்து எம்.பி-களும் பிரதமர் அலுவலகத்தையோ, அவரின் வீட்டையோ முற்றுகையிட்டிருக்க வேண்டும் அதன் பின் மாநில அரசு இவர்களைச் சுட்டிருந்தாலும் அது இவர்களுக்கு அல்லவா பெருமை. அன்றே ஸ்டாலின் கூறினார் உங்களால் முடியவில்லை என்றால் வாரியம் அமைக்கும் விசயத்தை எங்களிடம் விட்டு விடுங்கள் என்று இது எங்களிடம் வந்திருந்தால் எங்களால் எவ்வளவு அழுத்தம் அளிக்க முடியுமோ அவ்வளவையும் செய்திருப்போம். கர்நாடகா தேர்தலை மனதில் கொண்டே பாஜக அரசு இப்படிச் செய்கிறது, தமிழகத்திலும்,ஆந்திராவிலும் பாஜக காலூன்ற முடியாது. ஆனால், கர்நாடகாவில் அதற்கான வாய்ப்புகள் உள்ளன, தற்போது காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தால் கர்நாடகத் தேர்தலில் பாஜக ஓட்டுக்கேட்க முடியாது. மத்திய அரசும் மாநில அரசும் தமிழக மக்களை ஏமாற்றிவிட்டனர், காவிரியைப் பாலைவனமாகிவிட்டனர்.” எனக் கடுமையாக விமர்சித்தார்
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!