'காவலரின் சமயோஜித ஐடியாவால் தேர்வு எழுதிய ப்ளஸ் ஒன் மாணவன்' -  15 நிமிட காலஅவகாசத்தில் காவல்துறை சாதனை

மாணவன்

 தமிழக காவல்துறையில் சில காவலர்கள் செய்யும் உதவிகள், மனிதநேயத்தை உயிர்ப்பிக்கவைக்கின்றன. சமீபத்தில், தேர்வு எழுதச் சென்ற மாணவிக்கு உதவிய காவலருக்கு, சமூக வலைதளத்தில் பாராட்டுகள் குவிந்தன. அதேபோல,  ப்ளஸ் ஒன் மாணவனை 15 நிமிட கால அவகாசத்தில் தேர்வுக்கு அழைத்துவந்துள்ளனர், விழுப்புரம் மாவட்டக் காவலர்கள். 

 விழுப்புரம் மாவட்டம் கிளியனூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ளது, கொந்தமூர் கிராம். அங்குள்ள அரசு மேல் நிலைப் பள்ளியில் ப்ளஸ் ஒன் படித்துவருகிறார் மோனிஷ். இவர், பள்ளியில் நன்றாகப் படிக்கும் மாணவர். இந்த ஆண்டு ப்ளஸ் ஒன் வகுப்புக்கு பொதுத் தேர்வு  என்பதால், தேர்வு மையங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நிலையில், ப்ளஸ் ஒன் வகுப்புக்கான இயற்பியல் தேர்வு நேற்று நடந்தது. சரியாக காலை 10 மணிக்கு தேர்வு தொடங்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பள்ளியில் நடந்தது. தேர்வு எழுதும் மாணவர்கள் அனைவரும் வந்துவிட்டார்களா என்று தலைமை ஆசிரியர் கேட்டுள்ளார். அப்போது, மாணவன் மோனிஷ் வரவில்லை என்பது தெரியவந்தது. உடனே தலைமை ஆசிரியர், சக ஆசிரியர்களுடன் ஆலோசனை நடத்தினார். 

மாணவன்


 அடுத்து, மாணவன் மோனிஷை தொடர்புகொள்ள முயன்றும் அந்த முயற்சி தோல்வியடைந்தது. கடைசியாக, பாதுகாப்புக்கு நின்ற மதன் என்ற போலீஸாரிடம் உதவி கேட்டுள்ளார் தலைமை ஆசிரியர். காவலர் மதன், மாணவன் குறித்த விவரங்களைக் கேட்டுக்கொண்டு  சில நிமிடங்களிலேயே கிளியனூர் காவல் நிலையத்துக்கு போனில் பேசினார். மாணவன் மோனிஷின் ஊரான தென்கோடிப்பாக்கத்தில் ரோந்து போலீஸார் யாரும் இருக்கிறார்களா என்று விசாரித்தார். அப்போது, மணிகண்டன் என்ற காவலர் அங்கு இருக்கும் தகவல் கிடைத்தது.  அவரிடம், மாணவன் மோனிஷ் குறித்து செல்போனில் தெரிவித்துள்ளார்.

 மணிகண்டன், பைக்கில் மாணவனின் வீட்டுக்கு விரைந்து சென்று, அங்கு அழுதபடி  இருந்த மோனிஷிடம் விசாரித்த மணிகண்டன், தேர்வு எழுத புறப்படும்படித் தெரிவித்துள்ளார். அதற்கு மோனிஷ், வீட்டில் நடந்த தகராறு காரணமாக தேர்வு எழுதச் செல்லவில்லை. இனிமேல் நான் சென்றாலும் தேர்வு எழுதமுடியாது என்று கண்ணீர் மல்க கூறியுள்ளார். அவருக்கு நம்பிக்கையூட்டி, தன்னுடைய பைக்கில் அழைத்துக்கொண்டு வேகமாக பள்ளிக்கு வந்துள்ளார் மணிகண்டன். பள்ளிக்கு வந்ததும், அவசர அவசரமாகத் தேர்வு அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார் மோனிஷ்.  தேர்வு எழுதிவிட்டு வெளியில் வந்த மோனிஷ், நேராக தலைமை ஆசிரியரின் அறைக்குச் சென்று, அவரிடம் 'தேங்க்ஸ் சார்' என்று கூறினார். அப்போது தலைமை ஆசிரியர், உன்னுடைய நன்றியை வெளியில் பாதுகாப்பு நிற்கும் காவலர் மதனிடம் சொல்லு' என்று கூறினார். காவலர்கள் மதனுக்கும் மணிகண்டனுக்கும் மாணவன் மோனிஷ் நன்றி கூறினார். 

 இந்தத் தகவல் கிடைத்ததும், விழுப்புரம் எஸ்.பி., ஜெயக்குமார், சம்பந்தப்பட்ட காவலர்கள் மதன், மணிகண்டன் இருவரையும் அழைத்து வாழத்து தெரிவித்ததோடு, ரிவார்டும் கொடுத்தார். இதுகுறித்து ஜெயக்குமார் கூறுகையில், ''காவல் துறை என்றுமே மக்களின் நண்பன் என்பதை காவலர்கள் மதனும் மணிகண்டனும் இந்தச் சம்பவம்மூலம் நிரூபித்துள்ளனர்'' என்றார். 

 மாணவன் மோனிஷின் தந்தை மோகன், கூலித் தொழிலாளி. மோனிஷின் கிராமத்தில், வேறு மாணவர்கள் யாரும் ப்ளஸ் ஒன் தேர்வு  எழுதவில்லை. அதனால், தேர்வுகுறித்த விவரம் மாணவனின் பெற்றோருக்குத் தெரியவில்லை. காவலர் மதனின் சமயோஜித  ஐடியாவால், மாணவன் தேர்வு எழுதிய சம்பவத்தைக் கேள்விப்பட்டவர்கள், இரண்டு காவலர்களுக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துவருகின்றனர்.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!