காவிரி விவகாரம்: ரஜினி கருத்துக்குக் கர்நாடகாவில் எதிர்ப்பு!

 

ரஜினி


உச்ச நீதிமன்ற தீர்ப்புப்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகத்தில் போராட்டம் வெடித்துள்ளது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் அதிமுக எம்.பி-க்கள் அனைவரும் தற்கொலை செய்துவிடுவோம் என்று மாநிலங்களவையில் நேற்று ஆவேசத்துடன் பேசினார் நவநீதகிருஷ்ணன். இதனிடையே உச்ச நீதிமன்றத்தின் கெடு இன்றுடன் முடிவடைகிறது. இதனிடையே, தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த், `காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது மட்டுமே நியாயமான தீர்வாக இருக்க முடியும்' என்று தெரிவித்துள்ளார். இதற்கு கர்நாடகாவில் பலத்த எதிர்ப்பு பரவி வருகிறது. ஏனென்றால், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கூடாது என்று கர்நாடகா முதல்வர் சித்தராமையா மத்திய அரசை எச்சரித்திருந்தார். இந்த நிலையில், ரஜினி தற்போது தனது கருத்தை வெளிப்படுத்தியிருப்பது கர்நாடகா அரசியல் வட்டாரத்தில் எதிர்ப்பலைகளை பரப்பி வருகிறது.

இதுபற்றி பெங்களூருவில் உள்ள கன்னட அமைப்பைச் சேர்ந்த ஒருவர் கூறும்போது, `ரஜினி அரசியல் செய்கிறார். அவர் தமிழகத்தில் புதுக்கட்சி தொடங்க ஏற்பாடு செய்து வருகிறார். அது அவர் இஷ்டம். அதற்காக, எங்கள் வயிற்றில் அடிப்பது போன்ற ஒரு கருத்தை சொல்லியிருக்கக் கூடாது. அவர் நடித்த படங்கள் கர்நாடகாவில் பல தியேட்டர்களில் ஓடுகின்றன. அவருக்கு இங்கே ரசிகர்கள் ஏராளமானவர்கள் இருக்கிறார்கள். தமிழர்கள் வாழும் பகுதியில் ரஜினியின் கட் அவுட்கள் நிறைய இருக்கின்றன. அவர் தற்போது தொடங்கியிருக்கும் ரஜினி மக்கள் மன்றத்தின் கிளை கர்நாடகாவிலும் தொடங்கப்பட்டு உறுப்பினர்களைச் சேர்த்து வருகிறார்கள்.

இந்த நிலையில், அவரின் கருத்து கர்நாடகா மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. ஏற்கெனவே, சந்தனக்கடத்தல் வீரப்பன், பிரபல நடிகர் ராஜ்குமாரைக் கடத்தி காட்டில் பிணையக்கைதியாக வைத்திருந்தபோது, ரஜினி தலையிட்டு ராஜ்குமாரை மீட்க உதவினார். இருமாநில மக்களிடையே மோதல் உருவாகாமல் தடுக்க காரணமாக இருந்தார். அவர் இப்போது, கர்நாடகா மக்களுக்கு எதிரான கருத்தை தெரிவித்திருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறோம் " என்று கூறினார். 

இன்று காலையிலிருந்து ரஜினி, தமிழக மற்றும் கர்நாடகா விவசாயச் சங்கங்களைச் சேர்ந்தவர்களுடன் போனில் பேசியிருக்கிறார். காவிரி பிரச்னையில் நிரந்தரத் தீர்வுதான் என்ன? என்று கருத்துக் கேட்டிருக்கிறார். அந்த அடிப்படையில், ரஜினி ஒரு முடிவுக்கு வந்திருக்கிறார். ரஜினியின் கருத்தை டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் வரவேற்றுள்ளனர். தொடர்ந்து தங்கள் பக்கம் நீங்கள் துணை நிற்க வேண்டும் என்று போனில் ரஜினியிடம் வற்புறுத்தியிருக்கிறார்கள். அதற்கு ரஜினி, ``பொறுங்கள். மத்திய அரசின் இறுதி முடிவு வரட்டும். பிறகு, பார்ப்போம்'' என்று சொல்லியிருக்கிறார். 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!