`எங்களிடம் விலை கம்மி' - லேப்டாப் திருடர்களின் பகீர் வாக்குமூலம்

லேப் டாப் கொள்ளை

லேப் டாப்களைத் திருட வேலூரிலிருந்து சென்னைக்கு இரண்டு திருடர்கள் பைக்கில் வந்துள்ளனர். மேலும், இவர்களிடம் விலை குறைவாக லேப்டாப்கள் கிடைத்ததால் ஆர்டர்களும் குவிந்துள்ளன என விசாரணையில் தெரியவந்துள்ளது.

சென்னை, கண்ணகி நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ஏராளமான ஐ.டி. நிறுவனங்கள் உள்ளன. இங்கு பணிபுரியும் இன்ஜினீயர்கள் அந்தப் பகுதிகளில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் தங்கியுள்ளனர். பகல், இரவு எனப் பணிக்குச் செல்லும் இவர்களின் பூட்டிய வீடுகளைக் குறிவைத்து லேப் டாப்களைத் தொடர்ந்து திருடினர் இதுகுறித்து ஏராளமாகப் புகார்கள் கண்ணகி நகர் போலீஸ் நிலையத்துக்கு வந்தன. இதனால், லேப்டாப் திருடர்களைப் பிடிக்க உதவிக் கமிஷனர் லோகநாதன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் மதியழகன், சிவக்குமார் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.

லேப் டாப் கொள்ளை

தனிப்படை போலீஸார் விசாரணை நடத்தியதில் லேப்டாப் திருடர்கள் குறித்த தகவல் தெரியவந்தது. வேலூர் மாவட்டம், காமராஜர் நகரைச் சேர்ந்த கார்த்திக், வேலூர் மாவட்டம், சங்கரன்பாளையத்தைச் சேர்ந்த மணிகண்டன் ஆகியோர்தான் லேப் டாப்களைத் திருடி குறைந்த விலைக்கு விற்பது தெரியவந்தது. இதையடுத்து, அவர்களை போலீஸார் கைது செய்து விசாரித்தனர். அவர்களிடமிருந்த இரண்டு லேப்டாப்கள், இரண்டு பைக்குகள், நான்கு சவரன் நகை ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

ஐ.டி. ஊழியர்களைக் குறிவைத்து இவர்கள் திருடும் லேப் டாப்களை வாங்க சிலர் ஆர்வம் காட்டியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``திருடிய லேப்டாப்களை குறைந்த விலைக்கு விற்று அந்தப் பணத்தில் பைக்குகளை வாங்கி ஊர் சுற்றியுள்ளனர். மேலும், அந்தப் பணத்தில் ஆடம்பரமாகவும் வாழ்ந்துள்ளனர். இவர்கள் இருவரும் வேலூரிலிருந்து சென்னைக்குக் கொள்ளையடிக்க பைக்கில் வந்துள்ளனர். கடந்த 2015ம் ஆண்டு லேப்டாப் திருடிய வழக்கில் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கார்த்திக் கைது செய்யப்பட்டுள்ளார்" என்றனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!