காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி ரயில் மறியலுக்குச் சென்றவர்கள் கைது!

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி ராமேஸ்வரத்தில் ரயில் மறியல் செய்ய முயன்ற இந்து மக்கள் கட்சியினரை போலீஸார் கைது செய்தனர்.

காவிரி மேலாண்மை வாரியம் கோரி ரயில் மறியலுக்கு சென்ற இந்து மக்கள் கட்சியினர்
 

காவிரி நீரில் தமிழகத்துக்கு ஆண்டு தோறும் 174.25 டி.எம்.சி தண்ணீர் வழங்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை நடைமுறை படுத்த 6 வாரங்களில் திட்டம் ஒன்றை ஏற்படுத்தவும் அதில் குறிப்பிடபட்டுள்ளது. ஏற்கெனவே காவிரி நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்ட தண்ணீரின் அளவைவிட  உச்ச நீதிமன்றம் வழங்க உத்தரவிட்டுள்ள தண்ணீரின் அளவு குறைவானது என்றாலும் அந்தக் குறைந்த அளவு தண்ணீரை கர்நாடக அரசு முறையாக வழங்க வேண்டும் எனவும், இதனை நடைமுறைப்படுத்த காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் எனவும் தமிழகத்தின் சார்பில் தொடர்ந்து குரல் எழுப்பப்பட்டு போராட்டங்கள் நடந்து வருகின்றன.

இந்த நிலையில் உச்ச நீதிமன்றம் அளித்த காலக்கெடு இன்றுடன் முடிவடைய உள்ளது. எனவே, இன்றைக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முன்வராத மத்திய அரசைக் கண்டித்தும், காவிரி நீரில் தமிழ்நாட்டுக்குக் கிடைக்க வேண்டிய உரிய அளவு தண்ணீரைப் பெற்றுத்தர வலியுறுத்தியும் இந்து மக்கள் கட்சியினர் ரயில் மறியல் போரட்டத்தில் ஈடுபட முயன்றனர்.

ரயில் மறியலில் ஈடுபட ராமநாதபுரம் மாவட்ட இந்து மக்கள் கட்சித் தலைவர் பிரபாகரன் தலைமையில் ராமேஸ்வரம் ரயில் நிலையத்துக்கு ஊர்வலமாகச் சென்றனர். ரயில் நிலையம் முன்பாக அக்கட்சியைச் சேர்ந்த 11 பேரைத் தடுத்து நிறுத்திய போலீஸார் கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!