வெளியிடப்பட்ட நேரம்: 15:27 (29/03/2018)

கடைசி தொடர்பு:15:27 (29/03/2018)

`வாழ்நாளின் மிகப்பெரிய தவறை இழைத்து விட்டேன்!’ - செய்தியாளர் சந்திப்பில் ஸ்மித் உருக்கம்

ஓராண்டுத் தடை, இனி ஆஸ்திரேலிய அணிக்குக் கேப்டன் கிடையாது, ஐ.பி.எல் அணிகளுக்கும் கேப்டன் ஆக முடியாது எனப் பந்தைச் சேதப்படுத்திய விவகாரத்தில் ஸ்மித், வார்னர் இருவரும் வறுபட்டுக்கொண்டிருக்கின்றனர். 

ஸ்டீவ் ஸ்மித்

Photo: Twitter/ICC

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் மஞ்சள் நிற அட்டையை வைத்து பந்தைச் சேதப்படுத்தினார் ஆஸ்திரேலிய தொடக்க ஆட்டக்காரர் பான் கிராஃப்ட். இந்தச் சூழ்ச்சி வெளியே தெரிய ஆரம்பித்தது. இதில், பான் கிராஃப்ட்டுடன் வார்னர், ஸ்மித் இருவரும் கூட்டுச்சதி செய்தது தெரிய வரவே, விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது. ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமும், ஏன் ஆஸ்திரேலிய பிரதமர் உட்பட அனைவரும் இந்தச் செயலுக்கு எதிராகக் குரல்கொடுக்க, மூவருக்கும் எதிராகத் தண்டனையை அறிவித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம். வார்னர், ஸ்மித்துக்கு ஓராண்டு தடை மற்றும் பான் கிராஃப்ட்டுக்கு 9 மாதம் தடை என ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் உத்தரவிட்டது. இதற்கு அடுத்த அடியாக, ஐ.பி.எல் போட்டிக்கான ராஜஸ்தான் மற்றும் ஹைதராபாத் அணிகளின் கேப்டன் பதவிகளிலிருந்தும் முறையே ஸ்மித் மற்றும் வார்னர் ஆகிய இருவரும் நீக்கப்பட்டனர். 

இந்நிலையில், பந்தைச் சேதப்படுத்திய செயலுக்கு ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் கண்ணீர் மல்க மன்னிப்புக் கோரியுள்ளார். ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ``ஆஸ்திரேலிய அணி கேப்டன் என்ற முறையில் பந்தைச் சேதப்படுத்திய விவகாரத்துக்கு நானே பொறுப்பேற்கிறேன். மிகப்பெரிய தவறு செய்துவிட்டேன் என்பதை தற்போது உணர்ந்துவிட்டேன். என் வாழ்நாளில் நான் செய்த மிகப்பெரிய தவறு இது. இதனால் என் மனம் உடைந்துவிட்டது. ஓர் அணி கேப்டன் என்ற முறையில் நான் தோற்றுவிட்டேன். எனது நாட்டை முன்னிலைப்படுத்துவதற்கான பெருமையைப் பெற்றிருந்தேன். கிரிக்கெட்தான் என் வாழ்க்கை. அது மீண்டும் கிடைக்கும் என்று நம்புகிறேன். இதற்காக நான் யாரையும் குறை சொல்லப்போவதில்லை. ஒரு வகையில் மற்றவர்களுக்கு இது ஒரு பாடம் ஆகும். அதேவேளையில் இது ஒரு மாற்றத்திற்கான காரணமாக இருக்கலாம் என நம்புகிறேன்" என்றார். முன்னதாக இதே விவகாரம் தொடர்பாக கிரிக்கெட் ரசிகர்களிடம் வார்னர் மன்னிப்புக் கோரியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க