வெளியிடப்பட்ட நேரம்: 16:42 (29/03/2018)

கடைசி தொடர்பு:16:42 (29/03/2018)

ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டக் களத்துக்கு ஏப்ரல் 1ம் தேதி கமல் வருகை!

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகத் தொடர்ந்து போராட்டம் நடத்தி வரும் குமரெட்டியாபுரம் கிராம மக்களை நேரில் சந்திக்க மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் நடிகர் கமல் வரும் ஏப்ரல் 1ம் தேதி தூத்துக்குடிக்கு வருகை தர உள்ளார். 

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம்

தூத்துக்குடியில் இயங்கி வரும் ஸ்டெர்லைட் ஆலையின் விரிவாக்கத்துக்கு அனுமதியளிக்கக் கூடாது, தற்போது இயங்கி வரும் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி 46வது நாளாக குமரெட்டியாபுரம் கிராம மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். எந்த அரசியல் பின்புலமும் இல்லாமல் ஆயிரக்கணக்கில் தன்னெழுச்சியாகத் திகழ்ந்த மக்கள் கலந்துகொண்ட கண்டனப் பொதுக்கூட்டம் கடந்த 24ம் தேதி தூத்துக்குடியில் நடைபெற்றது. 

கமல்பொதுக்கூட்டம் நடைபெற்ற அன்றே, ``ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் தமிழக மக்களும் ஊடகங்களும் பங்கு பெற வேண்டும். இந்த ஆலைக்கு எதிரான இப்போராட்டத்தில் தூத்துக்குடி மக்களுடன் நானும் உள்ளேன். புரட்சிக் களம் அழைத்தால் நானும் வருவேன்” எனத் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.  ``எந்தக் கட்சியையும் அதைச் சார்ந்த அரசியல்வாதிகளையும் போராட்டக் களத்திற்குள் அனுமதிக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம். கட்சிக் கொடி, கார்கள் அணிவகுப்பு இல்லாமல் தனி ஒருவராக கமல் களத்திற்கு வந்தால் அவரை வரவேற்போம்” என்றனர்.

நேற்று (28.03.18) அன்று ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டக் குழுவினர் சென்னையில் பத்திரிகையாளர்களைச் சந்தித்து ஸ்டெர்லைட் ஆலையின் விதிமீறல்கள், அதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பேசியுள்ளனர். தொடர்ந்து, ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யத்தின் கட்சி அலுவலகத்தில் கமலை, போராட்டக் குழுவினர் நேரில் சந்தித்து ட்விட்டரில் ஆதரவு தெரிவித்தற்கு நன்றி தெரிவித்து. கமல் ட்விட்டரில் கூறியபடியே, போராட்டக் களத்துக்கு வர அழைப்பு விடுத்தனர்.  இந்நிலையில், கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்த கமல், வரும் ஏப்ரல் 1 ம் தேதி ஞாயிற்றுக்கிழமை தூத்துக்குடிக்கு வருவதாகத் தெரிவித்துள்ளார்.

போராட்டக் குழுவில் ஒருவரான பிரபுவிடம் பேசினோம்,``மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமலை நேரில் சந்தித்து ஸ்டெர்லைட் ஆலை பிரச்னை குறித்துப் பேசினோம். இந்த ஆலையினால்  மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து முழுமையாகக் கேட்டறிந்தார். போராட்டக்களத்திற்கு மக்கள் அழைத்தால் வருவேன் என ட்விட்டரில் கூறியதன்படி, போராட்டக்களத்திற்கு அழைத்தோம். உறுதியாக வரும் ஏப்ரல் 1 ம் தேதி குமரெட்டியாபுரம் கிராமத்திற்கு வந்து மக்களைச் சந்தித்துப் பேசவுள்ளார். தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கப் பணிகள் நடைபெறும் இடத்தையும் பார்வையிட உள்ளார்” என்றார். ஏப்ரல் 1ம் தேதி காலை கமலும், மாலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளனும் வரவுள்ளார்கள்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க