வெளியிடப்பட்ட நேரம்: 17:20 (29/03/2018)

கடைசி தொடர்பு:12:59 (30/03/2018)

குகைப் பாதை.. பதிமூன்று கண் மதகுப் பாலம் மீது 8 வருடங்களுக்குப் பின் ரயில் சேவை!

தமிழகம்- கேரளா இடையே செங்கோட்டை முதல் கொல்லம் வரையிலான மலைப் பாதையில் 8 வருடங்களுக்குப் பின்னர் மீண்டும் ரயில் சேவை தொடங்கியிருப்பது சுற்றுலாப் பயணிகளை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது. குகைப்பாதைகளும், 13 கண் மதகுப் பாலமும் மறக்கமுடியாத மகிழ்ச்சியை ஏற்படுத்தும் எனப் பயணிகள் தெரிவித்துள்ளனர்.

ரயில் சேவை

தமிழகத்திலிருந்து மேற்குத் தொடர்ச்சி மலையைத் தாண்டி கேரள எல்லைக்கு ரயில் சேவை செயல்பட்டு வந்தது. குகைகளும் பாலங்களும் மட்டுமல்லாமல் இயற்கையான சூழலில், அடர்ந்த மரங்களுக்கு இடையே மலைப்பகுதியில் செல்லும் இந்த ரயிலில் பயணிக்க பயணிகள் அதிக ஆர்வம் காட்டுவார்கள். செங்கோட்டை-புனலூர் இடையே 112 வருட பாரம்பர்யம் மிகுந்த ரயில் சேவை கடந்த 2010-ம் வருடம் செப்டம்பர் 20-ம் தேதி நிறுத்தப்பட்டது. 

செங்கோட்டை-புனலூர் இடையே 50 கி.மீ தூரம் கொண்ட இந்தப் பாதையை ப்ராட் கேஜ் பாதையாக மாற்றும் பணிக்காக 358 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்றன. இந்த ரயில் பாதையின் இடையே குகைகள், பாலங்கள் இருந்தன. பாரம்பர்யம் மிகுந்த பதிமூன்று கண் பாலத்தை சிதைக்காமல் அகலப்படுத்தும் பணிகள் நடைபெற்றன. மலைக் குகைகளையும் அகலப்படுத்தும் பணிகள் நடந்தன. இந்த நிலையில், செங்கோட்டை - புது ஆரியங்காவு மற்றும் புனலூர் - எடமன் இடையே பணிகள் நிறைவடைந்ததால் அந்த ஸ்டேஷன்கள் வரையிலும் கடந்த, 2017-ம் ஆண்டு ரயில் போக்குவரத்து தொடங்கியது. புது ஆரியங்காவு ஸ்டேஷன் முதல் எடமன் ஸ்டேஷன் வரையிலுமான ரயில் பாதையில் உள்ள குகைகள் பலப்படுத்தப்பட வேண்டியதிருந்ததால் தாமதம் ஏற்பட்டது. அத்துடன் புதிய ஸ்டேஷன்கள் அமைத்தல், கட்டுமானப்பணிகள், மலைப்பகுதியில் பாறைகள் உருண்டு வந்து தண்டவாளத்தில் விழுந்துவிடாதபடி பாதுகாப்புக் கம்பிவலைகளை அமைப்பது போன்ற பணிகள் நடைபெற்றன. 

தற்போது அனைத்துப் பணிகளும் முடிவடைந்து செங்கோட்டை - புனலுார் ரயில் பாதையில் ரயில்கள் இயங்குவதற்கு தயார் நிலையில் உள்ளது. எட்டு ஆண்டுகளாக நடைபெற்ற பணிகள் முழுமையாக முடிக்கப்பட்டு விட்டதால், புது ஆரியங்காவு - எடமன் இடையே, தென்பிராந்திய ரயில்வே பாதுகாப்பு கமிஷனர் கடந்த மாதம் விரைவு ரயிலை இயக்கி சோதனை நடத்தினார். அதில், இந்தப் பாதை ரயில் இயங்கத் தகுதியாக இருப்பதாகச் சான்று அளிக்கப்பட்டது. 

ரயில் பாதைகள் சீரமைப்பு

அதனைத் தொடர்ந்து, எட்டு ஆண்டுகளுக்குப் பின்னர் நாளை (மார்ச் 30-ம் தேதி) முதல் மீண்டும் ரயில் போக்குவரத்து தொடங்குகிறது. சென்னை - கொல்லம் இடையே நாளை சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.. தாம்பரத்தில் 30-ம் தேதி மாலை, 5.30 மணிக்குப் புறப்பட்டு, விருத்தாசலம், திருச்சி, மதுரை, ராஜபாளையம் வழியாக மறுநாள் அதிகாலை, 5.50 மணிக்கு செங்கோட்டை வந்தடையும். பின்னர், செங்கோட்டையிலிருந்து காலை 6 மணிக்குப் புறப்பட்டு, 10.30 மணிக்குக் கொல்லம் சென்றடையும். 

கொல்லத்திலிருந்து வரும் 31-ம் தேதி, மதியம், 1 மணிக்குப் புறப்படும் சிறப்பு ரயில், மறுநாள், அதிகாலை, 5.05 மணிக்கு, தாம்பரம் சென்றடையும். இந்த ரயில்பாதை திறக்கப்பட்டுள்ளது, சபரிமலைக்குச் செல்லும் ஐயப்ப பக்தர்களுக்கும் சுற்றுலாப் பயணிகளுக்கும் பயன் உள்ளதாக இருக்கும்.