பள்ளியிலிருந்து வீட்டுக்கு வந்த பிள்ளைகளுக்கு அதிர்ச்சி! - கொள்ளையர்களால் தாய்க்கு நேர்ந்த கொடூரம்

பட்டப்பகலில் வீட்டில் நகை மற்றும் செல்போனுக்காக தனியாக இருந்த பெண்ணைக் கொலை செய்திருக்கிறார்கள் கொள்ளையர்கள். வடமாநிலத்தவர்களின் கைவரிசையா என்று போலீஸார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கொலை செய்யப்பட்ட  பாரதி

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகேயுள்ள வேலாயுதம் நகர் 5வது  குறுக்குத் தெருவில் வசித்து வருபவர் குணசேகரன். இவர் கடலூர் மாவட்டம் திட்டக்குடி பேரூராட்சி செயல் அலுவலராகப் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி பாரதி. இவர்களுக்கு ஆதித்யன் என்ற மகனும், ஆர்த்தி என்ற மகளும் உள்ளனர். குழந்தைகள் இருவரும் அதே ஊரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் படித்து வருகின்றனர். நேற்று காலை இருவரும் வழக்கம்போல் பள்ளிக்குச் சென்றுவிட்டனர். குணசேகரன் திட்டக்குடிக்குச் சென்றுவிட்டார்.

மோப்ப நாய்

தினமும் பள்ளி முடிந்தவுடன் பாரதி, பள்ளிக்குச் சென்று தங்கள் குழந்தைகளை அழைத்து வருவது வழக்கம். நேற்று அழைக்க வராததால் குழந்தைகள் இருவரும் தாங்களாகவே வீட்டிற்கு நடந்து வந்தனர். வீட்டிற்கு வந்து கதவைத் தட்டியபோது கதவு திறக்கவில்லை. பூட்டிய நிலையில் இருந்தது. பின்பக்கமாகச் சென்று சமையல்கூடம் ஜன்னல் வழியே பார்த்தபோது தாய் ரத்த வெள்ளத்தில் கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்து குழந்தைகள் அலறினர். குழந்தைகளின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் வசிப்பவர்கள் தெரு கதவின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது பாரதி ரத்த வெள்ளத்தில் கிடந்தார். உடனடியாக மருத்துவமனைக்குத் தூக்கி சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர் பாரதி ஏற்கெனவே இறந்து விட்டதாகக் கூறியுள்ளனர்.

கணவர், பிள்ளைகளுடன் பாரதி

பாரதியின் கழுத்தில் கத்திக் குத்தும், பின்புறம் தலையில் பலத்த காயமும் இருந்தது. பாரதியின் கழுத்தில் இருந்த 10 பவுன் தாலிச் செயின் மற்றும் 5 பவுன் செயின் ஒன்றையும் அறுத்துச் சென்றுள்ளனர். மேலும், வீட்டிலிருந்த அனைத்து பீரோக்களும் உடைந்த நிலையிலும் இருந்தன. பீரோ மற்றும் லாக்கரில் இருந்த பவுன் மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மோப்பநாய் டிக்சி வரவழைக்கப்பட்டு சோதனை செய்ததில் கொலை நடந்த வீட்டிலிருந்து அருகில் 2 கி.மீட்டர் தூரத்தில் உள்ள பாப்பாங்குளம் கிராமம் தெற்குத் தெரு வரை சென்று அங்கேயே சிறிது நேரம் சுற்றி வந்த டிக்சி பின்னர் திரும்பி வந்தன. அதன்பின்னர் பெரம்பலூரிலிருந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு பதிவு செய்யப்பட்டுள்ளன.

கொலையாளிகள் பயன்படுத்திய திருப்புலி- கத்திரிகோலை

தகவலறிந்த எஸ்.பி. அபிநவ்குமார் சம்பவ இடம் வந்து விசாரணை செய்தார். இச்சம்பவம் குறித்து ஜெயங்கொண்டம் டி.எஸ்.பி கென்னடி, இன்ஸ்பெக்டர் வேலுச்சாமி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து பெண்ணைக் கொலை செய்து கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர். தாலியை விட்டு செயினை மட்டும் அறுத்த கொள்ளையர்கள், பாரதி அணிந்திருந்த தாலிச்செயினில் தாலியை மட்டும் கட்பண்ணி அதனை விட்டுவிட்டு, செயின்களை மட்டும் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். மேலும், பாரதி பயன்படுத்தி வந்த 2 செல்போன்களையும் எடுத்துச்சென்றுள்ளனர்.

``தமிழகத்தில் உள்ள குற்றவாளிகள் திருடவருவதாக இருந்தால் கத்தி போன்ற ஆயுதங்களை வைத்து மிரட்டிச் செல்வார்கள்.முடியாத பட்சத்திற்குதான் கொலை செய்வார்கள். ஆனால், இங்கு திருப்புலி மற்றும் கத்திரிகோலைப் பயன்படுத்தி கொலை செய்திருக்கிறார்கள். இது வடமாநிலத்தவர்கள்தான் கையில் எதுகிடைத்தாலும் அதனை வைத்து தாக்கிக் கொலை செய்வார்கள். இதுதான் வடமாநிலத்தவர்களின் மீது சந்தேகம் எழக் காரணம்" என்கிறார்கள் காவல்துறையினர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!