வெளியிடப்பட்ட நேரம்: 16:56 (29/03/2018)

கடைசி தொடர்பு:17:43 (29/03/2018)

கதிர்வீச்சுக்கு எதிராகத் திரண்ட கல்பாக்கம் கிராமங்கள்! - அணுக் கழிவுகள் கொட்டப்படுவதாக அதிர்ச்சி தீர்மானம் 

சென்னை அணு மின்நிலையம்

கல்பாக்கம் அணுஉலை நிர்வாகத்துக்கு எதிராகக் களமிறங்கியுள்ளனர் சுற்றுவட்டார கிராம மக்கள். `இந்தியாவின் பல இடங்களிலும் இருந்து கொண்டு வரக்கூடிய அணுஉலைக் கழிவுகளை இங்கே கொட்டுகின்றனர்' எனவும் குற்றம்சாட்டுகின்றனர் அப்பகுதி மக்கள். 

சென்னை அணுமின் நிலையத்தில் ஏற்பட்ட கதிர்வீச்சுக் கசிவால், கடந்த 100 நாள்களாக மின் உற்பத்தியைச் செயல்படுத்த முடியாமல் தவித்து வருகின்றது அணுஉலை நிர்வாகம். கதிர்வீச்சு கசிவிற்கான காரணத்தைக் கண்டறியும் முயற்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கும், `காரணத்தைக் கண்டறிந்து வருகிறோம்' எனப் பதில் அளித்தனர் அணுசக்தி ஆராய்ச்சி முகமையின் அதிகாரிகள். இதனால், கல்பாக்கத்தைச் சுற்றியுள்ள கிராம மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். இந்தச் சம்பவம் குறித்து கல்பாக்கம் சுற்றியுள்ள கிராமங்களின் முன்னாள் ஊராட்சி மன்ற நிர்வாகிகள் சிலர், அணுஉலை நிர்வாகத்தைச் சந்தித்துப் பேசியுள்ளனர். கடந்த 23ம் தேதி நடந்த இந்தச் சந்திப்பில், பல்வேறு அடிப்படை வசதிகள் மற்றும் திட்டங்கள் குறித்து உள்ளூர் மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தக் கோரி மத்திய அரசுக்கு மனு அளித்தனர். அம்மனுவில்   `கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் பணிபுரியும் ஊழியர்களின் குடும்பங்கள் வசிக்கும் பகுதிகளில் அடிப்படை வசதிகள் செய்துத்தரக் கோரியும் அணுமின் நிலைய நிர்வாகம் நடத்தும் பள்ளிகளில் கிராம மக்களின் குழந்தைகளுக்குப் போதுமான இடஒதுக்கீடு செய்து தருமாறும் வலியுறுத்தப்பட்டிருந்தது. இந்தக் கோரிக்கைளைச் சுற்றுவட்டார கிராம மக்கள் ரசிக்கவில்லை. 

`கதிர்வீச்சினால் ஏற்படும் பாதிப்புகளை மறைக்கும் வகையிலும் கதிர்வீச்சு கசிவிற்கான காரணங்களைக் கண்டறிவதற்கு முயற்சி செய்யாமல், இதுபோன்ற மனுக்கள் கொடுப்பது அணுஉலை நிர்வாகத்துடன் பேரம் பேசுவதற்கே பயன்படும். அடிப்படை வசதிக்காக மனு கொடுப்பதன் பின்னணியில் அணுக் கசிவை மூடி மறைக்கும் வேலைகள் நடந்துகொண்டிருக்கின்றன' எனக் கொதித்தனர். இதனையடுத்து, கல்பாக்கம் சுற்றுபுறக் கிராம மக்கள் ஒருங்கிணைப்புக் குழு கடந்த 27-ம் தேதி ஆலோசனைக் கூட்டம் ஒன்றைக் கூட்டியது. இந்தக் கூட்டத்தில் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் வீராசாமி, உள்ளூர் பிரமுகர்கள் துரைசாமி, நாகூரான் ஆகியோர் முன்னிலையில் கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தில், `கல்பாக்கம் சுற்றுப்புற மக்களைத் தொடர்ந்து வஞ்சிக்கும்விதமாக இந்தியாவில் பல இடங்களிலுள்ள அணுக் கழிவுகளை கல்பாக்கத்தில் கொண்டு வந்து கொட்டுவதற்கான முயற்சியைக் கண்டிப்பதோடு அந்தத் திட்டத்தைக் கைவிடுமாறும் அதோடு புதிய அணு உலைகள் அமைப்பதையும் இக்கூட்டம் கண்டிக்கிறது’ என்னும் முக்கியத் தீர்மானத்தையும் நிறைவேற்றியுள்ளனர். 

இதுகுறித்து, நம்மிடம் பேசியச் சூழலியலுக்கான மருத்துவர்கள் சங்கத்தைச் சேர்ந்த மருத்துவர் புகழேந்தி, ``கதிர்வீச்சு கசிவுக்கான காரணமே தெரியாமல், மாதக்கணக்கில் அணுஉலையை மூடி வைத்துள்ளனர். அணு உலையில் கதிர்வீச்சுக் கசிவு இருப்பது நிர்வாகத்துக்குத் தெரியும். ஆனால், எங்கிருந்து கசிகிறது என்பதை அவர்களால் கண்டறிய முடியவில்லை. இந்தத் தகவலை மக்களின் கவனத்துக்குக் கொண்டு செல்லாமல் தடுப்பதற்காக, பல்வேறு நடவடிக்கைகளை அணுஉலை நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. அடிப்படை வசதி, பள்ளியில் இடஒதுக்கீடு எனப் போராட்டக் களங்களைப் பேரம் பேசுவதற்கான ஒன்றாகச் சிலர் திசைதிருப்புகின்றனர். 

வெளியில் இருந்து அணுஉலைக் கழிவுகளைக் கொண்டு வந்து கல்பாக்கத்தில் கொட்டுவதற்கான முயற்சியில் நிர்வாகம் இறங்கியுள்ளது. இதனால் சுற்றுப்புற மக்களுக்கு அதிகப்படியான அபாயம்தான் ஏற்படும். இந்தப் பகுதியில் உள்ள அரசியல் கட்சிப் பிரமுகர்களோ, மதரீதியாகச் செயல்படுகிறவர்களோ கதிர்வீச்சு கசிவுக்கு எதிராக எதுவும் பேசாமல் மௌனம் காக்கின்றனர். ‘உண்மையைச் சொல்ல வேண்டும்’ என்றுதான் மதங்கள் வலியுறுத்துகின்றன. அரசியல், சாதி, மதரீதியாக வேறுபடாமல், கதிர்வீச்சுக்கு எதிராக மக்கள் ஒன்று திரண்டால்தான் வெற்றியை நோக்கிப் பயணிக்க முடியும்" என்றார் நிதானமாக. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க