வெளியிடப்பட்ட நேரம்: 17:02 (29/03/2018)

கடைசி தொடர்பு:17:02 (29/03/2018)

‘என்னால் தூங்கமுடியவில்லை!’ - கேள்வித்தாள் லீக் ஆன விவகாரத்தில் பிரகாஷ் ஜவடேகர் வருத்தம்

கேள்வித்தாள் லீக் ஆன விவகாரத்தால் சி.பி.எஸ்.இ நிர்வாகம் செய்வதறியாமல் திகைத்து வருகிறது. இந்த விவகாரத்தை, தற்போது மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் தீவிரமாகக் கண்காணித்து வருகிறது. 

பிரகாஷ் ஜவடேகர்

இந்த மாதம் 5-ம் தேதி தொடங்கிய சி.பி.எஸ்.இ பொதுத்தேர்வு வரும் 12-ம் தேதியுடன் முடிவடைகிறது. ஆனால், முடிவடைவதற்குள் பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்திவிட்டது. ஆம், `இந்துமத வர்ணாசிரமத்தின்படி மிகக்கீழான சாதி எது?’ எனச் சமீபத்தில் நடந்த 6-ம் வகுப்புத் தேர்வில் சாதி குறித்து கேள்வி எழுப்ப அது சர்ச்சையானது.

இதுபோதாது என்று, மூன்று நாள்களுக்கு முன்பு நடந்த 12-ம் வகுப்புப் பொருளியல் தேர்வு மற்றும் நேற்று நடந்த 10-ம் வகுப்பு கணிதத் தேர்வுக்கான கேள்வித்தாள் பரீட்சைக்கு முன்னரே வெளியானது. இதை முதலில் மறுத்த சி.பி.எஸ்.இ நிர்வாகம், பின்னர் இரண்டு பாடங்களுக்கும் மறுதேர்வு அறிவித்தது. இதனால் மாணவர்கள் மீண்டும் தேர்வெழுத சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இந்நிலையில், இந்த விவகாரத்தை மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் தீவிரமாகக் கண்காணித்து வருகிறது. இதில், பிரதமர் மோடியும் தீவிரம்காட்ட இந்த விவகாரம் தற்போது சூடுபிடித்துள்ளது. 

இதுகுறித்து நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், ``இது மிகவும் துரதிருஷ்டவசமான ஒன்று. கேள்வித்தாள் லீக் ஆனது தெரிந்தவுடன் பெற்றோர்கள் இரவு முழுவதும் தூங்கியிருக்க மாட்டார்கள். அவர்களின் வேதனையை நினைக்கும் போது பெற்றோர் என்ற முறையில் என்னாலும் தூங்க முடியவில்லை. பெற்றோர்கள் மற்றும் மாணவர்களின் வேதனையை நான் புரிந்துகொள்கிறேன். கேள்வித்தாள் லீக் ஆன விவகாரத்தில் ஈடுபட்ட எவரும் தப்ப முடியாது. போலீஸார் விரைவில் குற்றவாளிகளைக் கைது செய்வார்கள். மறுதேர்வுகள் கடினமாக இருக்காது. மாணவர்கள் அதுகுறித்து அச்சப்பட வேண்டாம். இவ்விவகாரத்தில் விரைவாக முடிவெடுக்க பிரதமர் கூறியுள்ளார்" என்றார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க