வெளியிடப்பட்ட நேரம்: 17:45 (29/03/2018)

கடைசி தொடர்பு:17:50 (29/03/2018)

`கட்சி பேதமின்றி வாருங்கள்; காவிரியில் நமக்குள்ள உரிமையை மீட்டெடுப்போம்!’ - பேராசிரியர் ஜெயராமன் அழைப்பு

`தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக் கட்சிகளும், அமைப்புகளும் களமிறங்கி போராட வாருங்கள். காவிரியில் நமக்குள்ள உரிமையை மீட்டெடுப்போம்’ என்று மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன் அறைகூவல் விடுத்துள்ளார்.  

Kaveri Issue Jayaraman

நாகை மாவட்டம், மயிலாடுதுறையில் மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன் இன்று பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அவர் கூறுகையில், ``பல ஆண்டுகள் நடத்திய சட்டப் போராட்டத்திற்கு பின் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கொடுத்த 6 வார கெடு இன்று (மார்ச் 29ம் தேதி) மாலையுடன் முடிவடைகிறது.  6 வார காலத்திற்குள் உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காத மோடி அரசு, கடைசி நாளான இன்று, திட்டம் என்ன? அதனை எப்படி அமைக்க வேண்டும்? என்று உச்சநீதிமன்றதில் விளக்கம் கேட்க முடிவெடுத்துள்ளது. ஆக, சட்டத்தின் ஓட்டையைப் பயன்படுத்துகிற மத்திய அரசை, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுக்கிற மத்திய அரசை மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு வன்மையாகக் கண்டிக்கிறது. காவிரியில் நமக்குள்ள உரிமையை மீட்டெடுக்க அனைத்துக் கட்சிகளும், அமைப்புகளும் களமிறங்கி போராட வேண்டும்.  

வருகிற ஏப்ரல் 7-ம் தேதி மயிலாடுதுறையில் தமிழகத்தின் நீர் உரிமைப் பாதுகாப்பு விளக்கப் பொதுக்கூட்டத்தை தோழமை அமைப்புகளுடன் கூடி நடத்தவுள்ளோம். அதில் அடுத்தகட்ட போராட்ட அறிவிப்பு வெளியாகும். அனைவரும் கட்சி பேதம் பாராது கலந்துகொள்ள வேண்டும். தமிழ்நாட்டின் எந்த வளத்தையும் மத்திய அரசு தொடக்கூடாது. அதேநேரம் இந்திய இறையாண்மை மீது மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ளோம். தற்போதுள்ள இந்திய அரசு தமிழகத்தின் எந்த வளத்தையும் சொந்தம் கொண்டாட அனுமதிக்கக் கூடாது. தமிழ்நாட்டில் நிலக்கரி மற்றும் ஆயில் எடுக்கவிடக் கூடாது. நெய்வேலி, கூடங்குளம் ஆகியவற்றிலிருந்து மற்ற மாநிலங்களுக்கு மின்சாரம் கொண்டு செல்லவிடாமல் தடுக்க வேண்டும். இத்தகையப் போராட்டங்களில் மக்கள் ஈடுபட வேண்டும். நமக்குள்ள உரிமையை மீட்டெடுக்க நாம் ஒருங்கிணைந்து போராடுவோம், வெற்றி பெறுவோம்’ என்றார்.  

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க