வெளியிடப்பட்ட நேரம்: 18:13 (29/03/2018)

கடைசி தொடர்பு:18:13 (29/03/2018)

`கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளரை மதிக்காதது ஏன்?’ - தி.மு.க. எம்.எல்.ஏ. புது விளக்கம்

 தி.மு.க. எம்.எல்.ஏ. சுரேஷ்ராஜன் பேட்டி

`கலெக்டரை பார்க்க போனாலே வாருங்க, உக்காருங்கள் என சொல்கிறார். ஆனால் இந்த அதிகாரி எங்களை மதிக்காமல் இருந்தார். அதனால் நாங்களும் மதிக்கவில்லை' என கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகத்தில் நடந்த சம்பவம் குறித்து சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ. விளக்கமளித்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக தி.மு.க. எம்.எல்.ஏ. சுரேஷ்ராஜன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறுகையில், ``கூட்டுறவு சங்கத் தேர்தல் முறையாக நடக்காததால், மக்கள் பிரதிநிதி என்ற அடிப்படையில் 6 எம்.எல்.ஏ.க்களும் அதிகாரிகளிடம் தவறைச் சுட்டிக்காட்ட வேண்டும் என்று இணைபதிவாளர் அலுவலகத்துக்கு சென்றோம்.

நாங்கள் நுழைந்ததும் சிறிதளவு மரியாதைகூட இல்லாமல் அந்த அதிகாரி இருக்கையில் சாய்ந்துகிடந்தார். வாருங்கள் என அழைக்கும் நாகரீகம்கூட தெரியாமல் இருந்தார். அவர் அரை மணிநேரம் கழித்து அதற்காக வருத்தம் தெரிவித்தார். அதற்கான வீடியோ ஆதாரம் உள்ளது. அத்துடன் அந்த பிரச்னை முடிந்துவிட்டது. அடுத்ததாக கூட்டுறவு சங்கத் தேர்தல் விவகாரம் குறித்து பேசினோம். புத்தேரியில் முதல்நாள் 10 பேர் வேட்புமனுத் தாக்கல் செய்ததாக அதிகாரி கையெழுத்துடன் பட்டியல் ஒட்டப்பட்டது. 27ம் தேதி காலையில் 40 பேர் போட்டியிடுவதாக அதே அதிகாரி கையெழுத்துடன் பட்டியல் ஒட்டப்பட்டுள்ளது. அதுபோல தோவாளை மீனவர் கூட்டுறவு சங்கத்யில் ஒரு பிரிவினருக்கு மட்டும் வேட்புமனு வழங்கப்பட்டுள்ளது. மற்ற பிரிவினரை வெளியே தள்ளி கேட்டை பூட்டிவிட்டனர். இந்த தேர்தலை ரத்து செய்ய வேண்டும், வேறு தேதியில் தேர்தல் நடத்த வேண்டும் என அதிகாரியை சந்தித்து முறையிடுவதற்காகத்தான் நாங்கள் சென்றோம். எங்களுக்கு வேறு எந்த நோக்கமும் இல்லை.

 தி.மு.க. எம்.எல்.ஏ. சுரேஷ்ராஜன்

தவறுகளை அதிகாரிகளே முன்னின்று செய்வது மிகவும் வருத்தத்திற்குரியது. ஆட்சி மாற்றம் ஏற்படலாம், ஆனால் அதிகாரிகள் அவர்களது கடமையை செய்யத் தவறிய காரணத்தால்தான் சம்பந்தப்பட்ட அதிகாரியின் அறைக்கு நாங்கள் செல்ல நேரிட்டது. அதிகாரிகளை மதிக்கக்கூடாது என்பது எங்கள் நோக்கம் அல்ல. எங்களது கோரிக்கை கூட்டுறவு சங்கத் தேர்தலை முறையாக நடத்த வேண்டும். யார்யார் போட்டியிட விரும்புகிறார்களோ அவர்களுக்கு போட்டியிடும் வாய்ப்பை கொடுக்க வேண்டும். இதை விடுத்து ஜனநாயகப் படுகொலை செய்ய அதிகாரிகள் முன்வருவார்களே என்றால் எம்.எல்.ஏ.க்கள் 6 பேரும் பார்த்துக்கொண்டு இருக்க மாட்டோம். அதைத் தடுத்து நிறுத்துவோம். எங்களை பொறுத்தவரை அரசு ஊழியர்களை நாங்கள் மதிக்கிறோம். அரசு ஊழியர்கள் இன்று ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்கள். அது அவர்களது உரிமை. நியாயமாக நடக்கும் அதிகாரிகளை பாராட்டுவோம். அவர்களை இடையூறு செய்யமாட்டோம். சம்பந்தப்பட்ட அதிகாரியே தவறு நடந்ததை ஒப்புக் கொண்டுள்ளார். எனவே இனி நடக்கும் 3 தேர்தல்களும் முறையாக நடத்த வேண்டும். முறையாக தேர்தல் நடக்காமல் இருந்தால் ஆறு எம்.எல்.ஏ.க்களும் மீண்டும் போராட்டம் நடத்துவோம். தனிப்பட்ட ஒருநபரை கொண்டு வருவதற்காக தேர்தலை முறைகேடாக நடத்த நிச்சயம் நாங்கள் விடமாட்டோம். சீப் செக்கரட்டரிக்கு அடுத்த கேடரில் எம்.எல்.ஏ.க்கள் வருகிறார்கள். கலெக்டரை பார்க்கப் போனாலே வாருங்க, உக்காருங்கள் என சொல்கிறார். ஆனால் இந்த அதிகாரி எங்களை மதிக்காமல் இருந்தார். அதனால் நாங்களும் மதிக்கவில்லை" என்றார்.