`காவிரி மேலாண்மை வாரியம்!’ - உச்ச நீதிமன்றம் விதித்த காலக்கெடு முடிந்தது | Supreme Court's ​deadline to form Cauvery Management Board ends

வெளியிடப்பட்ட நேரம்: 17:14 (29/03/2018)

கடைசி தொடர்பு:17:33 (29/03/2018)

`காவிரி மேலாண்மை வாரியம்!’ - உச்ச நீதிமன்றம் விதித்த காலக்கெடு முடிந்தது

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் விதித்த காலக்கெடு இன்று மாலை 5 மணியுடன் முடிவடைந்தது. 

காவிரி

காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் கடந்த பிப்ரவரி 16-ம் தேதி தீர்ப்பு வழங்கியது. அந்தத் தீர்ப்பில் காவிரி மேலாண்மை வாரியத்தை 6 வார காலத்திற்குள் அமைக்க வேண்டும் என மத்திய அரசுக்கு உத்தரவிடப்பட்டது. ஆனால், காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கக் கூடாது எனக் கர்நாடக அரசு எதிர்ப்புத் தெரிவித்தது. இதைத் தொடர்ந்து, தமிழகச் சட்டமன்றத்திலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதுதொடர்பாக, டெல்லியில் மத்திய நீர்வளத் துறை அமைச்சகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டத்தில், தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய நான்கு மாநிலத் தலைமைச் செயலாளர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர். கர்நாடகத் தேர்தலை மனதில் வைத்து மத்திய பா.ஜ.க. அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைப்பதில் காலம் தாழ்த்தி வருவதாக தமிழக எதிர்க்கட்சிகள் கொந்தளித்து வருகின்றன. அதேநேரம் உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும் என்று கூறப்படவில்லை எனவும் கர்நாடக அரசு வாதிட்டு வருகிறது. காவிரி விவகாரம் தொடர்பாக வழங்கப்பட்ட இறுதித் தீர்ப்பில் `ஸ்கீம்’ என்று குறிப்பிடப்பட்டிருப்பதாகவும், அதுகுறித்து விளக்கம் கேட்டு மனுத்தாக்கல் செய்ய மத்திய அரசு பரிசீலித்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மத்திய அரசின் நடவடிக்கைக்காகக் காத்திருப்பதாக தமிழக அரசு தொடர்ந்து கூறிவந்தது. இந்த விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தலைமைச்செயலகத்தில் ஆலோசனைக் கூட்டம் இன்று தொடங்கியது. காலையில் தொடங்கிய கூட்டமானது, தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்தநிலையில், உச்ச நீதிமன்றம் விதித்த 6 வாரம் காலக்கெடு இன்று மாலை 5 மணியுடன் முடிவடைந்தது. இதுவரையிலும், காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பான எந்தவோர் அறிக்கையும் தமிழக அரசு சார்பிலோ அல்லது மத்திய அரசு சார்பிலோ இதுவரை வெளியாகவில்லை.