வெளியிடப்பட்ட நேரம்: 17:51 (29/03/2018)

கடைசி தொடர்பு:17:51 (29/03/2018)

`காவிரி விவகாரத்தில் மக்கள் நலனைக் காக்க 100% துணை நிற்போம்!’ - பொன்.ராதாகிருஷ்ணன்

’காவிரியில் தமிழக மக்களின் நலனைக் காக்க நூறு சதவிகிதம் துணையாக இருப்போம்’ என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

பூமி பூஜை நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன்

கன்னியாகுமரி மாவட்டத்தில் மார்த்தாண்டம் மற்றும் பார்வதிபுரம் மேம்பாலப் பகுதிகளில் பூமிக்கடியில் தரை வழி மின்சார கேபிள் அமைக்கும் பணிக்காக 43 கோடி ரூபாய் மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. இதற்கான பூமி பூஜை மார்த்தாண்டத்தில் இன்று நடந்தது. பூமி பூஜை நிகழ்ச்சியில் மத்தியக் கப்பல் போக்குவரத்து மற்றும் நிதித்துறை இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டார். நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பொன்.ராதாகிருஷ்ணன், ``காவிரி விவகாரத்தில் தமிழக மக்களின் நலனைப் பாதுகாக்க பா.ஜ.க. அரசு முழு அக்கறை கொண்டுள்ளது. காவிரியில் தமிழக மக்களின் நலனைக் காக்க நூறு சதவிகிதம் துணையாக இருப்போம். மத்திய அமைச்சர் நிதின் கட்கரியைச் சந்தித்து காவிரி பிரச்னை தொடர்பாக பேசி வருகிறேன். தமிழகத்துக்குத் தண்ணீர் தேவை என்பது மிக முக்கியம். இதில் தமிழக அரசு எடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் நாம் ஒத்துழைப்பு வழங்குவோம்.

இந்த விவகாரத்தை காங்கிரஸ் அரசியல் ஆக்க முயல்கிறது. அதனால்தான் தமிழக காங்கிரஸ் தலைவரையும், எதிர்க்கட்சி தலைவரையும், கர்நாடக முதல்வரைச் சந்தித்துப் பேச வலியுறுத்தினோம். நவநீதகிருஷ்ணன் எம்.பி.யை இந்த ஒரு வாரத்தில் நான் பலமுறைச் சந்தித்துப் பேசினேன். அப்போது அவர் எந்தக் கருத்தும் கூறவில்லை. கூட்டுறவுச் சங்கத் தேர்தலில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்று வருகின்றன. எனவே, இந்தத் தேர்தலை மீண்டும் தொடக்கத்திலிருந்தே நடத்த வேண்டும். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் மர்மம் விலக சி.பி.ஐ. விசாரணை அமைக்கப்படுமா எனக் கேட்கிறீர்கள். எந்த விசாரணை அமைத்தாலும் அதிலிருந்து உண்மை வெளி வர வேண்டும்" என்றார்.