வெளியிடப்பட்ட நேரம்: 17:35 (29/03/2018)

கடைசி தொடர்பு:18:07 (29/03/2018)

உயிரைப்பறித்த எடை குறைப்பு லேகியம்! ஆவடி வாலிபருக்கு நேர்ந்த துயரம்

100 கிலோவாக இருந்த உடல் எடையைக் குறைக்க சாலையோரம் விற்பனை செய்யப்பட்ட லேகியத்தை வாங்கிச் சாப்பிட்ட சென்னை வாலிபர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை ஆவடி அடுத்த அயப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் பிரதீப் (27). இவர் அதே பகுதியில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். 100 கிலோ உடல் எடை கொண்டிருந்த இவர், தனது உடல் எடையைக் குறைக்க முறையான அங்கீகாரம் இல்லாமல் சாலையில் வாகனத்தில் விற்பனை செய்த லேகியத்தை கடந்த புதன்கிழமை வாங்க்ச் சாப்பிட்டுள்ளார். சாப்பிட்ட சிறிது நேரத்தில் வயிற்று வலியால் அவதிப்பட்டு அருகாமையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளார்.

இரவு மீண்டும் கடுமையான வயிற்றுவலியால் அவதிப்பட்ட நிலையில் சிகிச்சைக்காக சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் பிரதீப். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை 5.30 மணியளவில் உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள திருமுல்லைவாயில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முறையான அங்கீகாரம் இல்லாமல் சாலையில் கொண்டு செல்லப்பட்ட லேகியம் என்பதால் சம்பவத்தில் தொடர்புடையவர்கள் யார் எங்கிருந்து வந்தவர்கள் என்பதை கண்டுபிடிப்பதில் காவல்துறையினருக்குச் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட லேகியம் விற்றவர்களைப் பிடிக்க அம்பத்தூர் துணை ஆணையர் சர்வேஷ்ராஜ், ஆவடி உதவி ஆணையர் நந்தகுமார் தலைமையில் இரண்டு தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளைப் பிடிக்க உத்தரவிட்டுள்ளார்.