வெளியிடப்பட்ட நேரம்: 20:40 (29/03/2018)

கடைசி தொடர்பு:20:50 (29/03/2018)

காவிரி மேலாண்மை வாரியம் விவகாரம்! தஞ்சையில் விவசாயிகள் திடீர் சாலைமறியல்

காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக 6 வாரங்களுக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் விதித்த கெடு முடிவடைந்தது. உச்ச நீதிமன்றத் தீர்ப்பை அமல்படுத்தாத மத்திய அரசைக் கண்டித்து தஞ்சையில் விவசாயிகள் முதல் போராட்டத்தைத் தொடங்கினர். 

விவசாயிகள் போராட்டம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் விதித்த கெடு இன்றுடன் நிறைவுபெற்றது. அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிப்பதற்காக காவிரி உரிமை மீட்புக் குழுவினர் இன்று தஞ்சாவூரில் அவசர ஆலோசனைக் கூட்டம் நடத்தினார்கள். இக்கூட்டத்தின் முடிவில் அதிரடியான போராட்டங்கள் அறிவிக்கப்படும் என்றுதான் காவல்துறையினர் எதிர்பார்த்தார்கள்.

ஆனால், போலீஸார் எதிர்பார்க்காத வகையில் தஞ்சாவூரில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த புது ஆற்றுச் சாலையில் காவிரி உரிமை மீட்புக் குழுவினர் தீடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் நூற்றுக்கணக்கான வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கின. இந்தத் தீடீர் சாலை மறியலால் காவல்துறையினர் பதற்றமடைந்தார்கள். சாலைமறியலில் ஈடுபட்ட காவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளரும் தமிழ்த்தேசிய பேரியக்கத்தின் தலைவருமான பெ.மணியரசன், தமிழர் தேசிய முன்னணியின் பொதுச்செயலாளர் அய்யனாபுரம் முருகேசன், மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பின் ஆலோசகர் மருத்துவர் பாரதிச்செல்வன் மற்றும் விவசாயிகள் உள்பட ஏராளமானோர் கைது செய்யப்பட்டார்கள்.

செய்தியாளர்களிடம் பேசிய இக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன், `காவிரி பிரச்னையில் மத்திய அரசு, தமிழ்நாட்டிற்கு தொடர்ந்து துரோகம் இழைத்து வருகிறது. நீதிமன்றம் விதித்த கெடு இன்றுடன் முடிகிறது. ஆனால், மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படவில்லை. முதல் போராட்டத்தைத் தற்பொழுது தஞ்சாவூரில் தொடங்கியுள்ளோம். தமிழ்நாடு முழுவதும் அடுத்தடுத்த போராட்டங்கள் நடத்தப்படும்” எனத் தெரிவித்தார்.