நிரவ் மோடியை விஞ்சினார்... போலி வங்கிக் கிளை நடத்திய கில்லாடி சிக்கினார்

சிட்பண்ட் , நிதி நிறுவனங்கள் தொடங்கி மக்களை ஏமாற்றி விட்டு ஓடுவது வழக்கமானது. நிரவ்மோடி, மல்லையா போன்றவர்கள் கடன் வாங்கி விட்டு வெளிநாட்டுக்குச் சென்றுவிட்டனர். நிரவ், மல்லையாவைத் தூக்கிச் சாப்பிடும் வகையில் உத்தரப்பிரதேசத்தில் ஒருவர் போலி வங்கிக் கிளையே தொடங்கி சாதனை படைத்துள்ளார். பாலியா மாவட்டத்தில் முலாயம் நகரில் அப்தாக் அகமது என்பவர் கர்நாடக வங்கியின் பெயரில் கிளை தொடங்கியிருக்கிறார். புதிய கிளையின் மேலாளர் என்றும் மும்பையிலிருந்து இங்கே மாற்றம் செய்யப்பட்டதாகவும் வாடிக்கையாளர்களிடம் கூறியுள்ளார்.

போலி வங்கி கிளை தொடங்கியவர்

புதிய கிளையில் அந்தப் பகுதியைச் சேர்ந்த 15 பேர் கணக்குத் தொடங்கியுள்ளனர். ஒன்றரை லட்சம் வரை பல்வேறு கணக்குகளில் டெபாஸிட் செய்துள்ளனர். சில நாள்கள் வரை காத்திருந்து மொத்தமாகப் பணத்தைச் சுருட்டிக் கொண்டு ஓட வேண்டுமென்பது அவரின் எண்ணம். இதற்கிடையே, டெல்லியில் உள்ள கர்நாடக வங்கிக்குப் பாலியா கிளையின் நடவடிக்கை சந்தேகத்துக்கிடமாக இருப்பதாக ஒருவர் போன் செய்துள்ளார். அதிகாரிகள் ஆய்வு செய்ததில் பாலியா மாவட்டத்தில் கிளை இல்லை என்று தெரியவந்தது.

கர்நாடக வங்கியின் டெல்லி கிளை உயர் அதிகாரி உபாத்யா நேரடியாக பலியா மாவட்டத்துக்கு வந்தார். உபாத்யாவுடன் போலீஸார் போலி கிளைக்குச் சென்றனர். மேலாளர் அறையில் அப்தாக் அகமது அமர்ந்திருந்தார். ஐந்து ஊழியர்கள் கம்யூட்டர்களில் தீவிரமாகப் பணிபுரிந்து கொண்டிருந்தனர். அப்தாக் அகமதுவிடம் ரிசர்வ் வங்கி அளித்த உரிமம், கிளைக்கான அதிகாரபூர்வ கடிதம் ஆகியவற்றை காட்டும்படி உபாத்யா கூறினார். அவரோ திகைத்து திரு திருவென முழித்தார். பின்னர், உடனடியாகக் கைது செய்யப்பட்டார்.

கர்நாடக வங்கி

வங்கியில் இருந்த லேப்டாப், கம்ப்யூட்டர்கள், போலி அடையாள அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன. ஒரு மாதத்துக்கு முன் போலி கிளையை அப்தாக் அகமது தொடங்கியுள்ளார். அங்கு பணி புரிந்தவர்களுக்கு ரூ.5,000 சம்பளம் பேசி பணிக்குச் சேர்த்துள்ளார். போலி கிளையில் வேலை செய்தவர்களும் அப்தாக் அகமதுவின் மோசடி திட்டத்துக்கு உடந்தையாக இருந்துள்ளனர் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. வங்கி செயல்பட்ட பங்களாவுக்கு ரூ.32,000 வாடகை பேசப்பட்டுள்ளது. வங்கியைக் கொள்ளையடித்தது எல்லாம் பழைய ஸ்டைல் ஆகிவிட்டது.  போலி கிளை தொடங்கி கொள்ளையடிப்பது புது ஸ்டைல்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!