வெளியிடப்பட்ட நேரம்: 21:30 (29/03/2018)

கடைசி தொடர்பு:15:43 (09/07/2018)

5,000 பார்வையாளர்கள்... அசம்பாவிதம் இல்லாமல் முடிந்த மெகா ஜல்லிக்கட்டு!

ஜல்லிக்கட்டு

விராலிமலையில் இன்று நடந்த ஜல்லிக்கட்டுப் போட்டியில் 18 தமிழக அமைச்சர்களின் முற்றுகை, ஒட்டுமொத்த மாவட்ட நிர்வாகம், காவல்துறை உயரதிகாரிகள் என்று குட்டித் தமிழ்நாடே எட்டிப்பார்த்தது.

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலையில் உள்ள பட்டமரத்தான் அய்யனார் ஆலயத்திருவிழாவை முன்னிட்டு இன்று மெகா ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இந்தத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் முழு ஏற்பாட்டிலும் செலவிலும் இந்த ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்தப்பட்டது. விஜயபாஸ்கரின் அரசியல் காரணங்களுக்காக இது நடத்தப்பட்டாலும் அதனை எல்லாம் ஒதுக்கிவிட்டு பார்த்தோமெனில், அலங்காநல்லூரை விஞ்சிவிட்டது. பொதுவாக தை மாதம்தான் ஜல்லிக்கட்டு சீசன். ஆனால், பங்குனி மாதத்திலும் அந்த சீசனை விராலிமலை கொண்டு வந்துவிட்டது. மொத்தம் நான்கு சுற்றுகளாகப் பிரிக்கப்பட்டது. சுற்றுக்கு 500 மாடுகள் வீதம் வாடிவாசலிலிருந்து அவிழ்த்து விடப்பட திட்டமிடப்பட்டிருந்தது. ஒவ்வொரு சுற்றுக்கும் தனித்தனி மாடுபிடிவீரர்கள் கொண்ட குழு கலந்துகொண்டார்கள். பிடிபடாத மாட்டின் உரிமையாளர்களுக்கும் பரிசுகள் தரப்பட்டதுடன் எந்த ஜல்லிக்கட்டுப் போட்டியிலும் இல்லாத சிறப்பாக, கலந்துகொண்ட 2000 மாடுகளின் உரிமையாளர்களுக்கும் நினைவுப் பரிசாக சில்வர்குடமும் வெள்ளிக்காசும் தரப்பட்டது.

காலையில் விறுவிறுவென ஆரம்பமான முதல் சுற்றிலேயே அமைச்சர் விஜயபாஸ்கரின் ஐந்து மாடுகள் அவிழ்த்துவிடப்பட்டன. அந்தக் காளைகளை யாரும் பிடித்துவிடக் கூடாது என்பதற்காக அமைச்சரின் ஆட்கள் சுற்றி நின்றுகொண்டார்கள். மீறி வந்த வீரர்களை நெருங்கவிடாமல் பார்த்துக்கொண்டார்கள். அதிமுகவின் முன்னாள், இந்நாள் சட்டமன்ற உறுப்பினர்களும் 18 அமைச்சர்களும் இந்த நிகழ்வில் கலந்துகொள்வதற்காக காலையிலேயே வந்துவிட்டார்கள். தமிழக அமைச்சர்கள் சிலர் வளர்க்கும் காளைகள், அவர்கள் அறிவித்த ரொக்கப்பரிசுகளுடன் களம் கண்டன. முதல் சுற்று வி.வி.ஐ.பி.சுற்றாகவே இருந்தது. அறிவிக்கப்படாத திடீர் ரொக்கப் பரிசுகளும் இந்த முதல் சுற்றிலேயே அறிவிக்கப்பட்டது. இதில் இருவருக்கு மட்டும் லேசான காயம் ஏற்பட்டது. போட்டி நடந்த மைதானத்தில் திரும்பிய பக்கமெல்லாம் பிரமாண்டமான ஃபிளெக்ஸ் போர்டுகள் வைக்கப்பட்டிருந்தன. அதில் ஒன்றில்கூட எம்.ஜி.ஆர். படம் இல்லை என்று ர.ர.க்கள் குறைபட்டுக்கொண்டார்கள். முதல் சுற்றில் எட்டிப் பார்க்காத வெயில், இரண்டாவது சுற்றில் `விட்டேனா பார்' என்று கொளுத்தி எடுத்தது. இதனால் தளர்ந்த மாடு பிடி வீரர்களுக்கு மோர், ஐஸ்க்ரீம்,வெள்ளரி, கூல்ட்ரிங்ஸ் உள்ளிட்டவை கொடுக்கப்பட்டது.

ஜல்லிக்கட்டு

மாலை 5 மணிநிலவரப்படி 1,800 மாடுகள் அவிழ்த்துவிடப்பட்டன. பொதுவாக, வாடிவாசலிலிருந்து மூக்கணாங்கயிறுடன் ஓடிவரும் காளைகளை அடக்கினால் பரிசு தரப்படுவதில்லை. அதுபோல், அந்தக் காளையும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாது. ஆனால், இங்கு அந்தக் காளைகளுக்கும் நினைவுப் பரிசு தரப்பட்டது. தங்கள் ஊரில் மெகா ஜல்லிக்கட்டு நடப்பதை எப்படியும் பார்த்துவிட வேண்டும் என்ற முனைப்புடன் பெண்களும் குழந்தைகளும் இளம் பெண்களும் பெரும் அளவில் பார்வையாளராக கலந்துகொண்டார்கள். வெளிநாட்டினர் சிலரும் சிறப்பு அழைப்பாளராக வரவழைக்கப்பட்டிருந்தனர். 5000 பார்வையாளர்கள் கலந்துகொண்டதாகக் கணிக்கப்பட்டது. ஒவ்வொரு சுற்றிலும் சேர்ந்தார்போல் காளைகளை அவிழ்த்து விடப்படும் போதெல்லாம் விழா கமிட்டியினர், மைக்கில் மாவட்ட ஆட்சியர் கணேசனை ``கலெக்டர், இப்படி வரிசையா மாடுகளை அவிழ்த்துவிட்டால், பயலுக எப்படிப் பிடிப்பாங்க" என்று கேட்டார்கள். பெரிதான அசம்பாவிதங்கள் இல்லாமல் ஒவ்வொரு சுற்றும் முடிந்தது. இந்தப் பிரமாண்டமான ஜல்லிக்கட்டைப் பார்த்த மற்ற அமைச்சர்களும் இப்படியான பாரம்பர்ய போட்டிகளை தங்கள் தொகுதியிலும் நடத்திவிட வேண்டும் என்று முடிவில் இருப்பதாகவும் அந்தவகையில், அமைச்சர்கள் தங்கமணியும் வீரமணியும் தங்கள் பகுதியில் ரேக்ளா ரேசை பிரமாண்டமான முறையில் நடத்தவிருப்பதாகத் தகவல். தனது பேர் சொல்லும் இந்த மெகா ஜல்லிக்கட்டு எந்த அசம்பாவிதமும் இல்லாமல் முடிந்ததில் அமைச்சர் விஜயபாஸ்கர் நிம்மதி பெருமூச்சு விட்டார்.